ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட அறிக்கைகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ஒரு மாதத்தில் அந்தப் பணிகள் முடிந்து அனைவரும் எளிதாகப் படித்தறிய வாய்ப்பு ஏற்படும் என்றார் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழாவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது: தமிழகத்தில் 12 நதி தீரங்களில் அகழாய்வுப் பணிகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. கீழடி, அழகன்குளம் ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆதிச்சநல்லூரில் 8 கட்டங்களாக அகழாய்வு செய்யப்பட்டதில் பல அரும் பொருள்கள் கிடைத்துள்ளன. அவை குறித்த ஆய்வு அறிக்கைகள் பொதுமக்களிடம் சென்றடையாமல் உள்ளன. அதை இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் அந்தப் பணிகள் நிறைவடையும்.

தங்கம், வெண்கலம், மண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட ஏராளமான பழங்கால பொருள்கள் தமிழகத்தில் உள்ளன. இதுதவிர சமணப்படுக்கைகள், வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள், மண்டபங்கள் என தொல்லியல் தன்மை நிறைந்த ஏராளமானவை இருக்கின்றன. அவை மாநில அரசு, மத்திய அரசு, யுனெஸ்கோ ஆகியவற்றின் பங்களிப்பில் பராமரிக்கப்படுகின்றன. இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பழமையின் சிறப்பை விளக்கும் வகையில் தொல்லியல் சுற்றுலா என்கிற திட்டத்தை பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 2,530 பேர் நன்கொடை அளித்துள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் அமெரிக்கா, கனடா நாட்டில் வசிக்கும் தமிழர்கள். இந்தியாவிலிருந்து நிதியளிக்க சிரமங்களைக் குறைக்கும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ரூ.30 கோடி நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், பலர் நன்கொடை அளித்து வருகிறார்கள். தமிழர்களின் உதிரத்தால் கிடைத்த பணத்தில் இருக்கை அமைக்கப்பெறுவது மிகவும் தனிச்சிறப்பானதாகும். தை மாதம் 1ஆம் தேதிக்குள் அந்த இருக்கை அமைக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்.

இலக்கியத் துறையில் ஜாம்பவான்கள் காலத்திற்கேற்ப உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் விரைவில் 91 விருதுகள் வழங்கப்பட உள்ளன. காலத்தின் தேடல்களுக்கு எழுத்தாளர்கள் சிறந்த தீர்வுகளை அளிக்க வேண்டியது கடமையாகும் என்றார் அவர்.

முருகன்குறிச்சியில் உள்ள செல்வி மஹாலில் தினமும் முற்பகல் 11 முதல் இரவு 9 மணி வரை நவ. 9ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. பல்வேறு துறை சார்ந்த 1 கோடி புத்தகங்கள் 70 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் மக்கள் வாசிப்பு இயக்க நிர்வாகி வீரபாலன் வரவேற்றார். ஆதிதிராவிடர் மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தலைமை வகித்தார். சி.ஜெயராஜ் முன்னிலை வகித்தார். தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தி முருகேசன், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பாவேந்தர் பாரதிதாசன் பேரவைச் செயலர் அ.மதியழகன் முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ஓவியர் சந்ரு, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் பே.ராஜேந்திரன், மாவட்ட நூலக அலுவலர் முனியப்பன், எம்.ஏ.பிரிட்டோ, கவிஞர் கிருஷி, அதிமுக நிர்வாகிகள் சுதா கே.பரமசிவன், பரணி சங்கரலிங்கம், தச்சை கணேசராஜா, ஜெரால்டு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கிளாசிஸ் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகி எம்.சாதிக் பாஷா நன்றி கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: