சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை !

சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை !

சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை !

சித்தன்னவாசல், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்ற ஊர் ஆகும். சித்தன்னவாயில் என்ற ஊரின் பெயர் கால ஓட்டத்தில் மாறி சித்தன்னவாசல் என்று ஆனது.

உலகப் புகழ் பெற்ற குகை ஓவியங்களை உள்ளடக்கியது சித்தனவாசல் தலம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னல்வாயிலுக்கு (அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னல்வாயிலானது மறுவி சித்தன்னவாசல் எனத்தற்போது அழைக்கப்படுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இங்கு காணப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், கிமு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, உலகப் புகழ் வாய்ந்த ஓவியங்களுடன் விளங்கும் குகைக் கோயில் இந்தச் சிறிய கிராமத்தின் தொன்மைச் சிறப்பை உலகுக்கு உணர்த்துகிறது. இங்குள்ள குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமண முனிவர்கள் தங்கியிருந்த இடமாகும் இது. இந்த இயற்கை குகையில் வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் கூடிய 17 கற்படுக்கைகளைக் காணலாம். இதில் மிகப்பெரிய, பழமையான படுக்கையில், தமிழ் கல்வெட்டு ஒன்று தமிழ் பிராமி எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியில் இருந்து குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள 7 படிக்கட்டுகளைக் கடந்து குகையினுள் நுழைவதால் இந்த இடம் ஏழடிப்பட்டம் என அழைக்கப்படுகிறது.

ஆனால், உலக வாழ்வைத் துறந்து 7 விதமான ஆன்மிக உறுதிகளை மேற்கொண்டு உண்ணாநோன்பிருந்து, உயிர்நீக்க விழைந்த சமண முனிவர்கள் தங்கியிருந்ததால் ஏழடிப்பட்டம் எனவும் பெயர் பெற்றதாக மற்றொரு செய்தி கூறுகிறது. குகைக் கோயிலில் 160 சதுர அடி அளவுள்ள முக மண்டபமும், அதையடுத்த 100 சதுர அடி அளவுள்ள சிறிய கருவறையும் உள்ளன. முன்மண்டபத்தின் முகப்பில் 2 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் வடக்குச் சுவரில் சமண ஆசிரியரின் சிற்பம், தெற்கில் 5 தலைபாம்புடன் கூடிய 23 சமண தீர்த்தங்கரர், பார்சுவநாதர் சிற்பங்களும் உள்ளன.

குகைக் கோயிலின் தரை நீங்கலாக, மற்ற பகுதிகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. இங்குள்ள ஓவியங்கள் Fresco-Secco முறையில் தீட்டப்பட்டுள்ளன. கருங்கல் பரப்பை பொலிந்து, சமப்படுத்தி, சுண்ணாம்புச் சாந்து பூசி அதன் மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழுப்பாகத் தேய்த்து அப்பரப்பில் ரேகைகளும், வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் சமீபகாலத்தில் உண்டான இந்த முறை வண்ணங்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஓவியக் கலையின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில் உள்ளது.

சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை !

சித்தன்னவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை !

முன்மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்திரிக்கப்பட்ட தாமரை தடாகம் அனைவரின் சிந்தையையும் கவரும். சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடியே இந்தத் தாமரைத் தடாகம்தான். மணிமேகலை கூறும் வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியங்கள் இவைதானோ என எண்ணத் தோன்றுகிறது. பசுமையான இலைகளுடன், தாமரையும், அல்லியும் இந்தத் தடாகத்தில் பூத்துக் குலுங்குகின்றன. பலவிதமான மீன்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன. யானைகள் நீரைக் கலக்கி களித்திருக்கின்றன. அன்னம், சிறகி, வாத்து போன்ற பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் குலாவுகின்றன. சுற்றுச்சூழலை மறந்து அசைபோட்டு இருமாந்திருக்கும் எருமை மாடுகளின் தோற்றமுடைய ஓவியங்கள் இயல்பாக உள்ளன.

மேலும், அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும், அமைதியையும் பண்பட்ட கலைத் திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காண முடியும். இந்திய ஓவியக்கலை பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கை சித்தன்னவாசல் உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள ஓவியங்களைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, நெடுநல்வாடை என பல சங்க நூல்கள் எண்ணற்ற தகவல்களை தருகின்றன. இத்தனை உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஓவியங்களை அல்ல அல்ல உயிர் நாடிகளை எவ்வாறுதான் வரைந்திருப்பார்களோ என்று எண்ணும் போது நமக்கு வியப்புத்தான் ஏற்படுகிறது. சில ஓவியங்கள் சிதிலமடைந்து விட்ட நிலையில் இருந்தாலும், அதன் அழகில் எந்த மாறுபாடோ, குறைபோடோ ஏற்படவில்லை.

கால மாறுபாடுகளால் பல ஓவியங்கள் முற்றிலும் சிதைந்து விட்ட போதிலும், எஞ்சியிருக்கும் ஓவியங்கள் தான், அக்காலத்தில் தமிழகத்தின் ஓவியக் கலை மற்றும் நாட்டியக் கலைக்கு நமக்கும், எதிர்கால சந்ததியருக்கும் சான்றாக அமைந்துள்ளது. சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 – 1200 ஆண்டு பழமையானவை. இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன. சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது. மலைகளில் செதுக்கப்பட்ட முனிவர்கள் சிற்பங்கள் போன்ற சிற்பங்களும், கோலம் போன்ற வட்ட வடிவ அமைப்பும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.

சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என். அருள்முருகன் அவர்கள் கண்டறிந்துள்ளார். மலையின் அனைத்து திசைகளிலும் உயிரைப் பணயம் வைத்து ஆய்வு செய்த அவர் ஏழடிப்பட்டம் மேல் பகுதியில் ஓவியங்களின் மீதப்பகுதிகளை கண்டறிந்துள்ளார். தொல் பழங்கால ஓவியங்களை ஆய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள அவர் இதுவரை புதுகை மாவட்டத்தில் திருமயம் ஓவியங்களுக்கு பின்னர் சித்தன்ன வாசல் மலையில் புராதன ஓவியங்களை கண்டறிந்துள்ளார். நான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அவற்றிற்கு பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என பெயரிட்டிருக்கிறார் ஆய்வாளர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: