2,200 ஆண்டுகள் பழமையான திருமலை கோயில், பாறை ஓவியங்கள் அழியும் அபாயம்!

சிவகங்கை அருகே பழமையான திருமலைக் கோயில், பாறை ஓவியங்களை தொல்லியல் துறை பாதுகாக்காததால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சிவகங்கையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருமலைக் கிராமம். இக்கிராமத்தில் உள்ள மலையில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள், கி.மு. முதல் நூற்றாண்டைச் சோ்ந்த இரண்டு பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளன. இங்கு இயற்கையாக அமைந்த குகையில் சமணத் துறவியா் தங்குவதற்கு ஏதுவாக கல் படுக்கைகள் உள்ளன.

படுக்கை செதுக்கப்பட்டுள்ள குகைக்குள் மழைநீர் செல்லாதபடி பாறையின் மேற்புறம் தடுப்பு செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மலையில் 8-ம் நூற்றாண்டு முற்காலப் பாண்டியரின் குடை வரைக் கோயில், 13-ம் நூற்றாண்டு பிற்காலப் பாண்டியரின் கட்டுமானக் கோயில் உள்ளன.

மேலும் கோயிலைச் சுற்றிலும் மலையில் 8 சுனைகள் உள்ளன. மேற்புறம் உள்ள பெரிய சுனையில் நீர் எப்போதும் வற்றாது. இப்பகுதி தமிழகத் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் பழமை வாய்ந்த கோயில்கள், பாறை ஓவியங்கள் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளை தமிழகம் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் பார்வையிட்டு செல்கின்றனர். அங்குள்ள பாறை ஓவியங்களையும், கல்வெட்டுகளையும் பார்வையாளர்கள் சிலர் சேதப்படுத்தி வருகின்றனா். இதனை தொல்லியல்துறை கண்டுகொள்ளாததால் பக்தர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருமலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருமலையை தொல்லியல்துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. அதன்பிறகு அறிவிப்புப் பலகைகள் மட்டுமே வைக்கப்பட்டன. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து இப்பகுதியைக் கண்காணிக்க ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் காவலாளியை தொல்லியல் துறை நியமித்தது. அவருக்கு ஒரு மாதத்துக்கு மேல் ஊதியம் தராததால், அவரும் வரவில்லை. இந்நிலையில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை சிலர் சேதப்படுத்தி வருகின்றனர். இதைத் தடுக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழிகாட்டி (கைடு) ஒருவரையும் நியமிக்க வேண்டும், என அவர் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: