சிறுதாவூரில் சுதாகரனுக்கு சொந்தமான ரூ108 கோடி மதிப்புள்ள 21 ஏக்கர் நிலம் முடக்கம்

* பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
* தீபா, தீபக்குக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்

சொத்து குவிப்பு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனுக்கு சொந்தமாக சிறுதாவூரில் உள்ள ரூ108 கோடி மதிப்புள்ள, 21 ஏக்கர் சொத்துக்களை, பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சசிகலாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள 187 இடங்களில், கடந்த 2017ம் ஆண்டு மெகா ரெய்டு நடத்தப்பட்டது. சோதனையின் போது கணக்கில் வராத 5 கோடி ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கினர். அதைத்தொடர்ந்து பல்வேறு பினாமிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இருந்து 2வது முறையாக சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை கடந்த ஆண்டு  முடக்கியது. இதை தொடர்ந்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான பினாமி சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சிறுதாவூரில் சர்வே நம்பர் 339/1ஏ, 341/1 உள்ளிட்ட 15 சர்வே எண்களில் உள்ள 7 ஏக்கர் 44 சென்ட் நிலத்தையும், 403/3, 401/2 ஆகிய சர்வே எண்களில் உள்ள 3 ஏக்கர் 30 சென்ட் நிலத்தையும், 392/1, 391, 380, 381/3, 393, 405/3, 398, 406, 399, 400, 406 ஆகிய சர்வே எண்களில் உள்ள 10 ஏக்கர் 86 சென்ட் நிலத்தையும் பினாமி சொத்துக்களை பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் வருமான வரித்துறையினர் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, மொத்தம் 21 ஏக்கர் 54 சென்ட் நிலம் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ₹108 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பினாமி பரிவர்த்தனை சட்டம் பிரிவு 24(1)ன் கீழ் இதற்கான நோட்டீசை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள வி.என்.சுதாகரனுக்கு வருமான வரித்துறை துணை ஆணையர் (பினாமி தடுப்பு)  யு.என்.திலீப் நேற்று முன்தினம் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசின் நகல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கும், நிலத்தை பதிவு செய்த திருப்போரூர் சார் பதிவாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சொத்துக்களை முடக்கியதற்கான நோட்டீஸ் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.  

நோட்டீசில், ‘பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த சொத்துக்கள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை அல்லது நோட்டீஸ் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் ஒருவரும் இந்த சொத்துக்கள் உள்ள இடங்களுக்குள் செல்ல அனுமதி இல்லை. இந்த சொத்துக்களை வேறு நபர்களுக்கு மாற்றம் செய்யவோ அல்லது இந்த சொத்துக்கள் மூலம் வரும் பயனை அனுபவிக்கவோ கூடாது’ என்றும் நோட்டீசில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதாகரனுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்ட  நிலையில் நேற்று பகல் 2 மணியளவில் வருமானத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட  குழுவினர் சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு வந்தனர். அப்போது பங்களாவின்  பிரதான வாயிற் கதவு சுவற்றில் இந்த நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர். அவர்களுடன் திருப்போரூர் வருவாய் அலுவலர் புஷ்பராணி, சிறுதாவூர் கிராம  நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: