ராமநாதபுரம் அருகே கி.பி. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வணிகக் குழுவின் பாதுகாவலர்களான அறுநூற்றுவரின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளில் பல்வேறு வணிகக் குழுவினரின் பெயர்கள் காணப்படுகின்றன. நானாதேசி, திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், ஆயிரவர், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சு வண்ணம், சித்திரமேழிப் பெரியநாடு என அவர்களது பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
நானாதேசிகள் பிற நாடுகளுக்கு சென்று வணிகம் செய்பவர்கள்.
திசையாயிரம் என்பது வணிகர் செல்லும் எல்லாத் திசைகளும் என்று பொருள்படும். ஐநூற்றுவர் என்பது ஐந்நூறு வணிகர்களைக் குறிக்கும். அவர்களை பஞ்சசதவீரர் என்றும் கூறுவர். அஞ்சு வண்ணம் என்பது இஸ்லாமிய வணிகக்குழுவினர். பாதுகாப்பு வீரர்களையும் இவர்கள் வைத்திருந்தனர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் விமல்ராஜ், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் அபிநயா, விசாலி, அபர்ணா ஆகியோர், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அறுநூற்று மங்கலம் கண்மாய்க் கரையில் இடிந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் பிற்கால பாண்டியர் காலக் கல்வெட்டுகளை கள ஆய்வின்போது கண்டெடுத்து படியெடுத்தனர்.
இந்த கல்வெட்டின் மூலம் வணிகர்களின் பாதுகாப்பு வீரர்களாக கருதப்படும் அறுநூற்றுவர், பிராமணர்களுக்கு தானமாக ஒரு ஊரை உருவாக்கி கொடுத்து, அதன் காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு கூறியதாவது: அறுநூற்று மங்கலம் சிவன் கோயிலின் முன் கிடக்கும் கற்கள், தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன.
இந்த கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன், மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை.
கண்மாய்க்கரையில் நடப்பட்டிருந்த ஒரு கல்லில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1216 முதல் கி.பி. 1244 வரை) மூன்று வரி கொண்ட துண்டு கல்வெட்டு உள்ளது. இம்மன்னன் போரில் சோழநாட்டைக் கைப்பற்றி, பின் அவர்களிடமே வழங்கிய வரலாற்றுச் செய்தி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்மாய்க்கரையில் நடப்பட்டிருந்த மற்றொரு கல்லில், கி.பி.1253 முதல் கி.பி. 1283 வரை மதுரையை ஆண்ட முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. குலமாணிக்கம் சுந்தரபாண்டிய நல்லூர் குணாபதபெருமாள் என்பவர் இக்கோயில் இறைவனுக்கு நிலதானம் வழங்கியுள்ளதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கோயில் முன்பாக கி.பி.1297 முதல் கி.பி.1342 வரை மதுரையை ஆண்ட கடைசி பாண்டிய மன்னனான மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது.
அரசர்கள் பிராமணர்களுக்கு நிலம் தரும்போது, மன்னரின் பெயருடன் ‘மங்கலம்’ என்பதையும் இணைத்து ஊர்களை தானமாக அளித்துள்ளனர். அதுபோல வணிகக் குழுக்களின் பாதுகாப்பு படைவீரர்கள் எனக் கருதப்படும் அறுநூற்றுவர், தங்கள் பெயருடன் மங்கலம் என்பதையும் இணைத்து பிராமணர்களுக்காக ஒரு ஊரை உருவாக்கி, தானமாகக் கொடுத்துள்ளனர். இதனால் இவ்வூர் அறுநூற்றுமங்கலம் என ஆகியுள்ளது. இவ்வூரின் காவல் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுள்ளனர்.
மேலும் அறுநூற்றுவர் பெயரில் திருவாடானை அருகே அறுநூற்றுவயல் என்ற ஊரும் உள்ளது என்றார்.
- தி இந்து