இந்திய நாட்டுக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த கோடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம்!!!

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனவரி 11 இல் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இளமைப்பருவம்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி, செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த நாச்சிமுத்து முதலியார் – கருப்பாயி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகக் குமரன் பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி முதலியார் ஆகும். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923 இல் ராமாயியை என்பாரைத் திருமணம் முடித்தார். கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு

காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.

ஜனவரி 10, 1932 இல் நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளானார். கீழே விழுந்தநிலையிலும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் “கொடிகாத்த குமரன்” என்று அறியப்படுகிறார்.

இறப்பு

ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கான கொள்ளி வைத்தனர்.

குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார் .

துணைவியார்

இவரது துணைவியார் ராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார்.

நினைவகம்

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தபால் தலை

இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: