பாரதியார் நினைவு தினம் இன்றா? நேற்றா?….வரலாறு கூறும் சரியான தேதி என்ன…

latest tamil news


மகாகவி பாரதியார் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும் என்று, தமிழ் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் வலியுறுத்தி உள்ளனர். தன் இறுதிக் காலத்தில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில், பாரதியார் வசித்து வந்தார். தன் 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்., 11- நள்ளிரவு 1:30 மணியளவில் இறந்தார் .

நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் என்பது, அடுத்த நாள் கணக்கில்தான் வரும் என்பதால், செப்., 12, பாரதியார் இறந்ததாகக் குறிப்பிட்டு, அவரது உறவினர்கள் சரியான முறையில் பதிவு செய்துள்ளனர். ஆனால், அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சு வழக்கிலும், செப்.,11ல் பாரதியார் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்துவிட்டது. ஆனால், சென்னை மாநகராட்சியின் இறப்பு சான்றிதழில், செப்., 12ல் பாரதியார் இறந்ததார் என குறிப்பிடப்படுகிறது. இது குறித்து, பாரதி ஆய்வாளரான ச.சுப்பு ரெத்தினம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். பாரதியார் நினைவு தினம் செப்.,12 என, அதிகாரப்பூர்வமாக தேதியை மாற்ற முயன்றனர். இதன் காரணமாக, 2014-ல், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, எட்டயபுரத்தில் உள்ள கல்வெட்டில், மறைந்த தினம் செப்-., 12 என்று திருத்தம் செய்யப்பட்டது. அப்போது முதல், செப்., 12-ல் தான் பாரதியார் நினைவு தினத்தை, தமிழக அரசு அனுசரித்து வருகிறது.


சென்னை திருவல்லிக்கேணியில் அரசு பராமரிப்பில் உள்ள பாரதியார் நினைவு இல்ல முகப்பு கல்வெட்டிலும், பாரதியார் மறைந்த தினம், செப்., -12 என்றே பொறிக்கப்பட்டுள்ளதை இப்போதும் காணலாம். அவரது நுாற்றாண்டு நினைவு தினத்தை கடைப்பிடிக்கும், வானவில் பண்பாட்டு மையம், செப்., 12 ல் நடத்தும் நினைவு தின நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ‘பாரதி சுடர்’ ஏற்றி வைப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், பாரதியாருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில், செப்., 11 ‘மகாகவி நாள்’ என்று அனுசரிக்கப்படும் என்று, முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, பாரதியாரின் மறைந்த நாள் குறித்து, மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

தேசிய கவி பாரதியாரின் நினைவு நுாற்றாண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கோவை பாரதியார் பல்கலையின் கீழ், பாரதியார் உயராய்வு மையத்தால் அவரது வாழ்க்கை, படைப்புகள் அனைத்தும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, பாரதியாரின் நினைவு தினம் செப்., 11 அல்ல; செப்., 12 என்பதை பல்கலை பாரதியார் உயராய்வு மையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பாரதியாரின் இறப்பு சான்றிதழ் சென்னை மாநகராட்சியில் தகவல் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்டு அதிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.பாரதியாரின் அசல் இறப்பு சான்றிதழில் அவர் இறந்த தினம், 1921 செப்., 12 என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உரிய அரசாணை வெளியிடப்படாததால் செப்., 11 என்றே தொடர்கிறது. இதையே, பள்ளி பாட புத்தகங்கள், டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட பிற அரசு தேர்வர்களும் படித்து வருகின்றனர்.

கோவை பாரதியார் பல்கலை, பாரதியார் உயராய்வு மைய இயக்குனர் சித்ரா கூறியதாவது: கடந்த ஆண்டு பாரதியார் நினைவு தினத்தில் உள்ள வரலாற்று பிழையை சுட்டிக்காட்டி அதை மாற்றம் செய்ய துணைவேந்தர் காளிராஜ், அரசுக்கு பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில், பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில் உள்ள கல்வெட்டுக்களில் நினைவு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் அரசு தரப்பில் வெளியாகவில்லை. பாரதியார் நள்ளிரவு 1:30 முதல் 1:45 மணிக்கு மறைந்தார். இரவு, 12:00 மணியை கடந்து இறந்துள்ளதால், செப்., 12 என்பதே சரி.

சென்னை மாநகராட்சி வழங்கிய இறப்பு சான்றிதழை ஆய்வு செய்து இதை உறுதிப்படுத்தியுள்ளோம். இவ்வரலாற்று பிழையை அரசு திருத்தம் செய்து, அதிகாரப்பூர்வ ஆணை வெளியிடவேண்டும். பல்கலை தரப்பில், 2020 முதல் செப்., 12ம் தேதியில், பாரதியார் நினைவு தினத்தை அனுசரிக்க அனுமதி வழங்கப்பட்டுள் ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: