வலு தூக்கும் போட்டியில் 370 கிலோ எடை தூக்கி மாணவி சாதனை-இரும்பு பெண்மணி பட்டத்தை பெற்றார்

வலு தூக்கும் போட்டியில் 370 கிலோ எடையை தூக்கி சாதனைபடைத்த மாணவிக்கு இரும்பு பெண்மணி பட்டம் வழங்கப்பட்டது.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி நடந்தது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாப்பாநாடு, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் சுமார் 50 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 2 போட்டிகளும் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர்களுக்கு 8 பிரிவுகளில் நடத்தப்பட்டது. போட்டிகள் பயிற்சியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. போட்டிகளை விவசாயி தாமரங்கோட்டை மகேந்திரன், சங்கர், ஓய்வு பெற்ற ஆசிரியர் ரெங்கசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் பெண்கள் பிரிவில் 52 கிலோ உடல் எடைப்பிரிவில் 370 கிலோ எடையை தூக்கி பட்டுக்கோட்டையை சேர்ந்த எம்பிஏ படித்து வரும் வீராங்கனை லோகப்பிரியா தங்கப்பதக்கம் வென்று இரும்புப் பெண்மணி என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்தார்.21 வயது வீராங்கனை லோகப்பிரியா இளம் வயதிலேயே சாதிக்க துடிக்கும் இந்த வீராங்கனை கடந்த 2019ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த சர்வதேச வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 6வது இடத்தை பெற்றார்.

பதக்கத்தை தவறவிட்டார். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வழக்கறிஞர்கள் அண்ணாதுரை, சூரியவர்மன் மற்றும் மதன், ஜலேந்திரன் ஆகியோர் பதக்கங்களையும், கேடயங்களையும் வழங்கினர். முடிவில் வழக்கறிஞர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

இது குறித்து வீராங்கனை லோகப்பிரியா கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச போட்டியில் விட்டதை பிடித்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்று உறுதியுடன் தெரிவித்தார். இரும்பு பெண்மணி, இரும்பு மனிதன் பட்டங்களை ஒட்டு மொத்தமாக வென்ற பட்டுக்கோட்டை வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நன்றி : தினகரன்

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>