இலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்!

இலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்!

இலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்!

ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை தற்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், பாலைக்குளி கிராமத்து மக்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டார்கள். அந்த துயரச் சம்பவம் நடந்து சுமார் 30 வருடமாகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள மன்னார் மாவட்டத்தில் பாலைக்குளி கிராமம் அமைந்துள்ளது. அங்கு திரும்பிப் பார்க்கின்ற இடமெல்லாம் பாலை மரங்கள் உயர்ந்து நிற்கின்றன.

இலங்கையில் மிக உக்கிரமாக ஆயுத மோதல் நடந்து கொண்டிருந்த 1990-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வடக்கு மாகாணத்திலே வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரையும், 24 மணி நேர காலக்கெடுவினுள், அவர்களுடைய இடங்களிலிருந்து வெளியேறுமாறு, விடுதலைப்புலிகள் உத்தரவிட்டனர். அதன் காரணமாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமான வடக்கு முஸ்லிம்களை தங்களுடைய வாழ்விடங்களிலிருந்து வெளியேறினார்கள். அவ்வாறு வெளியேறியவர்களில் பாலைக்குளி மக்களும் அடங்குவர்.

தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட அந்த நாளை, வடக்கு முஸ்லிம்கள் இப்போதும் கறுப்பு தினமாக நினைவு கூர்ந்து வருகின்றனர். முஸ்லிம் மக்களை இவ்வாறு ஆயுத முனையில் வெளியேற்றியமை, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மிக மோசமான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என பலரும் விமர்சிப்பதுண்டு.

புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடிருந்த காலத்தில், இதற்காக முஸ்லிம் மக்களிடம் புலிகள் அமைப்பு மன்னிப்பும் கோரியிருந்தது. ஆனாலும், அந்த மன்னிப்பானது, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் எந்தவித மறுமலர்ச்சினையும் ஏற்படுத்திவிடவில்லை.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது, அவர்கள் தமக்கு அருகிலுள்ள புத்தளம் மாவட்டத்துக்கும், வேறு முஸ்லிம் பிரசேதங்களுக்கும் சென்றனர். பாலைக்குளியிலிருந்து அப்போது வெளியேற்றப்பட்ட மக்களில் பெருமளவானோர் புத்தளத்தைச் சென்றடைந்தனர்.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், தமது சொத்துக்கள் எதையும் எடுத்துச் செல்வதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை. தாங்கள் வாழ்ந்து மகிழ்ந்த நிலத்திலிருந்து, அந்த மக்கள் வெறுங்கையுடனேயே விரட்டப்பட்டார்கள்.

வடக்கிலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்களை, புத்தளம் மக்கள் கருணையோடு வரவேற்று தங்கள் இடங்களில் அடைக்கலம் வழங்கினார்கள். புத்தளம் பிரதேச மக்கள் – தங்கள் நிலம், தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பு மற்றும் வருமான வழிகள் அனைத்தினையும் அகதிகளாக வந்த மக்களுடன் பகிர்ந்து கொண்டனர். இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கான மாதிரி வீட்டுத் திட்டங்களும் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டன.

இந்த அகதி வாழ்க்கை 20 வருடங்கள் நீடித்தது. ஆயினும், இடம்பெயர்ந்து வந்த மக்கள், தமது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனும் ஆசையோடுதான் காலங்களைக் கடத்தி வந்தார்கள்.

இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்து இயல்பு நிலை தோன்ற ஆரம்பித்ததை தொடர்ந்து, பாலைக்குளியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள்.

அந்த அனுபவத்தை பாலைக்குளியைச் சேர்ந்த எம்.எஸ். ஹாரீஸ் என்பவர் இவ்வாறு விபரிக்கின்றார்; “எங்களை மீண்டும் எமது பகுதியில் குடியேற்றுமாறு, எங்களுடைய பிரதேசத்துக்குரிய அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்தோம். அதற்கிணங்க, அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் அமைச்சர் றிசாட் பதியுதீன் பேச்சு நடத்தி, எங்களை இங்கு அழைத்து வந்தார்”.

“புத்தளத்திலிருந்து பாலைக்குளிக்கு வருவதற்கான மன்னார் – புத்தளம் வீதியை அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு இணங்க, அப்போதைய அரசாங்கம் திறந்து தந்தது. அதுவரை அந்த வீதியை ராணுவம் மூடி வைத்திருந்தது. இலங்கையின் பெரிய வனங்களில் ஒன்றான வில்பத்து ஊடாகச் செல்லும் அந்த வீதி வழியாகவே, எங்கள் இடத்துக்கு நாங்கள் திரும்பினோம். அப்போது கொடிய மிருகங்களும், நிலக் கண்ணி வெடிகளும் எமக்கு அச்சுறுத்தல்களாக இருந்தன”.

“பாலைக்குளிக்கு 2010ஆம் ஆண்டு நாம் திரும்பினோம். அப்போது அமைச்சர் றிசாட் பதியுதீனும் எங்களுடன் வந்திருந்தார். எங்கள் கிராமத்தை அடையாளம் காண்பதற்கு நாங்கள் சிரமப்பட்டோம், எங்கு பார்த்தாலும் காடுகள் வளர்ந்திருந்தன. வீதிகளெல்லாம் காடுகளுக்குள் தொலைந்திருந்தன”.

“இந்த நிலையில், எங்கள் கிராமத்திலிருந்த பள்ளிவாசலையும் (மஸ்ஜித்) அதற்கு அருகில் கட்டப்பட்ட கிணற்றினையும் நாம் கண்டோம். அவற்றினை வைத்தே, எங்கள் கிராமத்தை அடையாளம் கண்டு கொண்டோம்”.

இதற்குப் பிறகு, பாலைக்குளி கிராமத்தில் வளர்ந்திருந்த காடுகள் அரசாங்கத்தினால் துப்புரவாக்கப்பட்டு, அந்தக் கிராம மக்கள், சிறிது சிறிதாக அங்கு மீள்குடியேற்றப்பட்டனர்.

பாலைக்குளியிலிருந்து 1990ஆம் ஆண்டு 145 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. ஆயினும், 20 ஆண்டுகளில் 375 குடும்பங்களாக அவர்கள் அதிகரித்திருந்தனர்.

நெற்செய்கை, கடல் மற்றும் நன்நீர்களில் மீன் பிடித்தல், மாடு வளர்ப்பு போன்றவை பாலைக்குளி மக்களின் பிரதான தொழில்களாக இருந்தன. ஆனால், இப்போது தங்கள் வயல் நிலங்களில் கணிசமானவற்றினை வன பாதுகாப்புத் திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும் ஆக்கிரமித்துள்ளதாக, ஆசிரியர் நியாஸ் கூறினார்.

“எங்கள் கிராமத்து மக்கள் நெற்செய்கையிலும், மேட்டு நிலப் பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்ட, சுமார் 02 ஆயிரம் ஏக்கர் காணிகளை மேற்படி திணைக்களங்கள் ஆக்கிரமித்துள்ளன” என்று கூறினார்.

“எமது மக்கள் மீன்பிடித்தும், நாங்கள் குளித்தும் மகிழ்ந்த உப்பாறு (மோதரகம ஆறு), இப்போது நாங்கள் செல்வதற்குத் தடைசெய்யப்பட்ட பகுதியாக்கப்பட்டுள்ளது. மீறிச் சென்ற சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாவினை தண்டமாகச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது”.

“எனவே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது பயிர்ச்செய்கைக் காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டும். உப்பாறு பகுதிக்குச் செல்வதற்கான தடை நீக்கப்பட வேண்டும்” என்று, அவர் கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

“எங்கள் மூத்தோரும், நாங்களும் தேடிய அனைத்துச் சொத்துக்களையும் இழந்து விட்டே, நாங்கள் அகதிகளாகச் சென்றோம். எனவே, எங்கள் பொருளாதாரத்தை பூச்சியத்திலிருந்தே மீண்டும் நாங்கள் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. எனவே, அரசாங்கம் எமக்கு முழுமையான உதவிகளை வழங்க வேண்டும்” என்கின்றனர் பாலைக்குளி மக்கள்.

பாலைக்குளியில் மீள்குடியேறிய மக்களுக்கு சுமார் 300 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அங்குள்ள 90 வீதமானோருக்கு வீடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“இவற்றில் சில வீடுகளை அரசாங்கம் அமைத்துத் தந்துள்ளது. மற்றும் சில வீடுகளை அமைச்சர் றிசாட் பதியுதீன், அறபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் நிதியுதவிகளைப் பெற்று நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்” என்கின்றனர் அங்குள்ள மக்கள்.

பாலைக்குளி மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த அஹமட் கபீர் என்பவர், தன்னுடன் சற்று வருமாறு நம்மை அழைத்துச் சென்றார்.

தங்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சுமார் 50 மீ. தூரத்தில் வன பாதுகாப்புத் திணைக்களத்தினரின் எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளதைக் காட்டினார்.

“இந்த எல்லை கற்களுக்கு அப்பாலுள்ள நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இங்குள்ள பிள்ளைகள் விளையாடும் பந்து உருண்டோடும் தூரத்தில்தான், அரசாங்கம் குறிப்பிட்டுள்ள வனப்பகுதி அமைந்துள்ளது. எல்லைக் கற்களை தாண்டிச் செல்லும் பந்தை எடுப்பவர்களும் கைது செய்வார்கள். இதுதான் நிலவரம்” என்று தாம் எதிர்நோக்கும் நெருக்கடியினை விவரித்தார் அஹமட் கபீர்.

இந்தக் கிராம மக்களுக்கு ஓரளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் வாழ்க்கை இன்னும் செழிப்படையவில்லை. குடிநீருக்காக பாலைக்குளி மக்கள் தினமும் கஷ்டப்படுகின்றார்கள். அங்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள குழாய்க் கிணற்றிலிருந்தே தமக்கான நீர்த் தேவையினை அவர்கள் ஓரளவு நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

அங்குள்ள வீடுகளுக்கு மின்சார வசதிகள் உள்ளன. ஆனாலும், அந்த மக்களின் வாழ்க்கையில் இன்னும் ஒளி தோன்றவில்லை என்பதை, அவர்களுடன் பேசும்போது புரிந்து கொள்ள முடிந்தது.

வாழ்ந்த மண்ணை இழப்பதும், அகதிகளாக வாழ்வதும், எத்துணை வலி என்பதை, தங்கள் சொந்த நிலத்துக்குத் திரும்பிய பிறகும், கனத்த மனதுடன் , பாலைக்குளி மக்கள் கதை கதையாக கூறுகின்றனர்.

  • பிபிசி
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: