இனிய திரைப்பாடல்கள் மூலம் பல இதயங்களை வென்றவரும் கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்..!!

விஞர் புலமைப்பித்தன் (86) சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று (08-09-2021) காலை 9.33 மணிக்கு பிரிந்தது.

கவிஞர் புலமைப்பித்தன் 4 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றுள்ளார். 1935ல் கோவையில் பிறந்த புலமைப்பித்தன் 100க்கும் மேற்பட்ட திரைபடங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழின் மீது கொண்ட  ஆர்வத்தின் காரணமாக, தனது பெயரை புலமைப்பித்தன் என்று மாற்றிக்கொண்டார்.

சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்தார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.-ன் நெருங்கிய நண்பர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதியுள்ளார். குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம் பெற்ற நான் யார், நான்  யார், நீ யார்? என்ற பாடலின் மூலம் புலமைப்பித்தன் புகழ் பெற்றவர். இதயக்கனி திரைப்படத்தில் நீங்க நல்ல இருக்கனும் நாடு முன்னேற என்ற பாடலையும் இவர் எழுதியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இடம் பெற்ற தாய்மை பாடலையும் புலமைப்பித்தன் எழுதியிருக்கிறார். அதிமுக அவைத்தலைவர் பதவியும் புலமைப்பித்தன் வகித்துள்ளார். மேலும் தமிழக சட்டமன்ற மேலவை துணை தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

கவிஞர் புலமைப்பித்தனாவதற்கு முன்பு இவர் கோவையில் புலவர் பட்டம் பெற்று அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளியில் இருந்தபோதே, இவர் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் எழுதி வந்த பாடல்களில் அன்றைய முன்னணி நடிகரான திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் கவனத்தை பெற்றார். திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் கோவை வந்த சமயத்தில், கவிஞர் புலமைப்பித்தன் அவர்களை சென்னைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். மனதில் சென்னை செல்ல வேண்டும் என எண்ணமிருந்தாலும், சென்னைக்கு செல்ல பேருந்து கட்டணமின்றி தவித்தார். அப்போது, எனது (அக்னி சுப்ரமணியம்) தகப்பனார் திரு. தென்மொழி ஞானபண்டிதனின் நண்பரான கவிஞர், தனக்கு பேருந்து கட்டணம் கொடுத்து உதவ வேண்டுமாய் காரணத்தை கூறி கேட்டதற்கிணங்கி, உடனடியாக உதவினார் எனது தகப்பனார். இந்த நிகழ்ச்சியை பற்றி அக்னி சுப்ரமணியமாகிய நான், எனது அன்றைய மனித உரிமை அமைப்பின் மூலம் ஈழத்துயரத்தை 150க்கு மேற்பட்ட படுகொலையின் தொகுப்பான தமிழினப் படுகொலைகள் புத்தகத்தை 2008-ல் கவிஞர் அவர்கள் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கும் போது, மேற் சொன்ன செய்தியை கவிஞர் உறுதி செய்தார்.

எமது புத்தக வெளியிடான தமிழினப் படுகொலைகள் என்ற நூலை கவிஞர் தலைமையில் சென்னையில் வெளியிட்ட போதும் நேரில் வந்து சென்றார் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். (படம் இணைக்கப்பட்டுள்ளது)

இந்த நிலையில் புலமைப்பித்தனின் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,’அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுகொண்டு, அரசியலில் தீவிரமாக இயங்கிய அவர், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பக்கத்துணையாய் விளங்கியவர். அவர் சட்ட மேலவை துணைத் தலைவராகப் பணியாற்றியவர் என்பதும் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக மறைந்த அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க. தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,எனத் தெரிவித்தார். மேலும், புலமைப்பித்தனின் மறைவிற்கு மூத்த தலைவர்கள், திரைப்பட துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: