பாராலிம்பிக் நாளை ஆரம்பம்: துவக்க விழாவில் மாரியப்பன்

டோக்கியோ-டோக்கியோ பாராலிம்பிக் துவக்க விழாவில் இந்தியா சார்பில் மாரியப்பன், வினோத் குமார் உட்பட 5 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

latest tamil news

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி நாளை துவங்குகிறது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக 54 வீரர், வீராங்கனைகள் 9 வகையான விளையாட்டில் களமிறங்க உள்ளனர். இதற்கு முன் ரியோ பாராலிம்பிக்கில் (2016), 19 பேர் பங்கேற்றது அதிகமாக இருந்தது.

சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி போல, கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் சார்பில் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கையில் வரம்பு கிடையாது.

இதனையடுத்து இந்தியா சார்பில் 5 வீரர், வீராங்கனைகள், 6 அதிகாரிகள் உட்பட 11 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். ஏனெனில் இதுவரை 7 இந்திய நட்சத்திரங்கள் மட்டுமே டோக்கியோ சென்றுள்ளனர். மற்றவர்கள் இன்று செல்கின்றனர். இவர்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின்பு தான் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். துவக்க விழா அணிவகுப்பின் போது இந்திய மூவர்ணக் கொடியை தமிழக உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் ஏந்தி வரவுள்ளார்.

இவரை தவிர, வினோத் குமார் (வட்டு எறிதல்), தேக் சந்த் (ஈட்டி எறிதல்), ஜெய்தீப் (‘பவர்லிப்டர்’), சகினா (‘பவர்லிப்டர்’) பங்கேற்க உள்ளனர். நாளை மறுநாள் டேபிள் டென்னிஸ் போட்டி இருப்பதால் சோனல் படேல், பவினா படேல், துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார்கள்.இதுகுறித்து டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கான இந்திய அணி தலைவர் குர்ஷரன் சிங் கூறுகையில், ”துவக்க விழாவில் 6 அதிகாரிகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 4 பேரை முடிவு செய்துவிட்டோம்,” என்றார்.

நன்றி: தினமலர்

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: