அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (67), நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரது உடல் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை தெற்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், விஜயலட்சுமியின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் கூறினார். நேற்று காலை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், முத்துசாமி மற்றும் தேனி கலெக்டர் முரளீதரன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, காமராஜ், தம்பித்துரை மற்றும் முன்னாள் எம்.பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஓபிஎஸ்சுடன் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் மற்றும் ஓபிஎஸ் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரியகுளம் நகர் வடகரையில் உள்ள நகராட்சி மயானத்தில் உள்ள எரிவாயு தகன மேடையில் கோவை காமாட்சி ஆதீனம் தலைமையில் பூஜை நடத்தப்பட்டது. சடங்குகள் முடிந்த பின், விஜயலட்சுமியின் சிதைக்கு மூத்த மகனும், எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் தீ மூட்டினார்.
நன்றி :தினகரன்