தேசிய ஓபன் தடகளம்: 2வது தங்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் 2வது தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தெலங்கானா மாநிலம் வாரங்கல், நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த ராணுவ வீரரான சந்தோஷ் குமார் (23 வயது), கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் (ரிலே ரேஸ்) தமிழக அணிக்காக தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அடுத்து ஆண்கள் 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டத்தில் களமிறங்கிய அவர் சர்வீசஸ் சாம்பியன் தவால் உதேகரின் சவாலை முறியடித்து தமிழகத்துக்காக 2வது தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். அவர் பந்தய தூரத்தை 50.79 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ரயில்வேயின் ஜஷன்ஜோத் சிங் (51.23 விநாடி) வெள்ளிப் பதக்கமும், தவால் உதேகர் (51.49 வி.) வெண்கலமும் வென்றனர்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, டோக்கியோ ஒலிம்பிக்சில் பங்கேற்கும் வாய்ப்பை பறிகொடுத்த சந்தோஷ், சர்வீசஸ் அணிக்காக நடந்த தகுதிப் போட்டியில் 6வது இடம் பிடித்த நிலையில், தமிழக அணிக்காக களமிறங்கி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. வித்யா ஹாட்ரிக்: இதே தொடரில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற வித்யா ராமராஜ் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அவர் கலப்பு ரிலே, மகளிர் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டத்தில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: