கீழ்பவானி பாசன திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனுக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு

கீழ்பவானி பாசன திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி ஈஸ்வரனுக்கு ரூ.2.63 கோடி செலவில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வரும் கீழ்பவானி பாசன திட்டம் கொண்டு வர முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் சுதந்திர போராட்ட தியாகி எம்.ஏ. ஈஸ்வரன்.

இவர் சுதந்திர போராட்ட தியாகி என்பதோடு, ஈரோடு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சுமார் 16 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். கீழ்பவானி பாசன திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன பெற காரணகர்த்தாவாக இருந்ததால் கீழ்பவானி பாசனத்தின் தந்தை என்று தியாகி ஈஸ்வரன் விவசாயிகளால் போற்றப்பட்டு வருகின்றார். எனவே தியாகி ஈஸ்வரனுக்கு பவானிசாகர் அணை பூங்காவில் திருவுருவச்சிலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாசன விவசாயிகள் அரசிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், தியாகி ஈஸ்வரனை இன்றைய தலைமுறையினர் அவரது செயல்பாடுகள், சேவையை தெரிந்து கொள்ளும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அவரது திருவுருவ சிலை மற்றும் அரங்கம் ஆகியவை ரூ.2.63 கோடி செலவில் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது கொங்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.


Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: