உள்ளூர் மொழிகளை தெய்வங்கள் புரிந்து கொள்ளாதா?…தமிழக கோவில்களில் இனி தமிழில் தான் குடமுழுக்கு : ஐகோர்ட் தீர்ப்பு!!

 

உள்ளூர் மொழிகளை தெய்வங்கள் புரிந்து கொள்ளாதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் இனி குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த உத்தரவிடக்கோரி, பொன்னுசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. :

இந்நிலையில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “உலகிலேயே தமிழ் தான் பழமையான மொழி என்பதற்கு அறிவியல்பூர்வமாக ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளன. கொடுமணல், சிவகளை, கீழடி மற்றும் அழகன் குளம் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் இதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன.பானைகளில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள் கிறிஸ்து பிறப்புக்கு 450 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் தமிழ் கல்வெட்டுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை மற்ற மொழிகளை விட பழமையானவை. உள்ளூர் மொழிகளை தெய்வங்கள் புரிந்து கொள்ளாது என்று கூறமுடியாது.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பக்தி இயக்கங்களை தமிழ்நாட்டில் வளர்த்துள்ளனர். இவர்கள் தமிழில் ஏராளமான பாடல்களை சிவனைப் போற்றி பாடியுள்ளனர். மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் 12 நாயன்மார்களும் ஏராளமான சிவாலயங்களை கட்டியுள்ளனர். 12 ஆழ்வார்களால் பெருமாளுக்கு 108 திவ்யதேசங்கள் அருளப்பட்டன. மனுதாரர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என கோரியுள்ளார். இது இந்த கோயிலுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கோயில்களுக்கும் பொருந்தும்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், பட்டினத்தார் மற்றும் சித்தர்கள் பலரால் இயற்றப்பட்ட பழமையான துதிப்பாடல்களை கண்டறிந்து குடமுழுக்கின்போது பாடிடும் வகையில் தமிழ் அறிஞர்கள், ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இக்குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும். கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.


நன்றி : தினகரன்

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: