ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்!: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி..!!

 

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக பரிந்துரை குழு அமைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துக்கொண்டார். அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வழிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 10, 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தும் இந்த அறிவிப்பின் கீழ் பயன்பெற முடியாத ஆயுள் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுள் கைதிகளின் முன்விடுதலை குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவையும் முதலமைச்சர் அமைத்துள்ளார். இந்நிலையில், ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வரின் அறிவிப்புக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதுகுறித்து முதல்வருக்கு அவர் எழுதி இருக்கும் திறந்த கடிதத்தில்,  ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல் என்று புகழாரம் சூட்டியுள்ளார். சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையே முதல்வரின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது எனவும் 31 ஆண்டாக சிறைவாசிகளின் துன்பம் பற்றி நன்கு தெரியும் என்பதால் முதல்வருக்கு அன்பு கலந்த நன்றி என்றும் அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், மகனை விடுவிக்க பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>