பாரதி ஆய்வாளர், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘மகாகவி பாரதி விருது’- கோவை பாரதி பாசறை வழங்கியது

mahakavi-bharathi-award

பாரதியார் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கிய பங்களிப்பு செய்துவரும் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு கோவை பாரதி பாசறை, ‘மகாகவி பாரதி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது.

கோவையை சேர்ந்த பாரதி பாசறை அமைப்பு கடந்த 2014 முதல்‘மகாகவி பாரதி’ விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டு பாரதிபாசறையும், கோவை கண்ணதாசன் கழகமும் இணைந்து, விருதுவழங்கும் இணைய வழி சந்திப்பை நேற்று மாலை நடத்தின.

இதில், ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘மகாகவி பாரதி விருது’, ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

பாரதி, புதுமைப்பித்தன், உ.வே.சா. உள்ளிட்ட பலரின்எழுத்துகளை தேடித் தேடிப்பதிப்பித்துள்ளார். ‘விஜயா’ பத்திரிகையில் வெளியான பாரதியாரின் கட்டுரைகள், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான பாரதியாரின் எழுத்துகளை தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்துள்ளார். ‘எழுக, நீ புலவன்’, ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’, ‘பாரதியின் கருத்துப் படங்கள்’ போன்ற இவரது நூல்கள் பாரதியியலுக்கு முக்கியப் பங்களிப்பை செய்துள்ளன.

விருது பெற்றது குறித்து வேங்கடாசலபதி கூறும்போது, “ஏற்கெனவே பாரதி அறிஞர்கள் சீனி. விசுவநாதன், ய.மணிகண்டன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட இந்த விருதை பாரதி நினைவுநூற்றாண்டில் பெறுவதில் பெருமகிழ்ச்சி. பாரதி பற்றி ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் எனக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் ஊக்கம் அளிக்கிறது” என்றார்.

இதற்கு முன்பு இந்த விருதை த.ஸ்டாலின் குணசேகரன், சீனி.விசுவநாதன், இளசை மணியன்,பெ.சு.மணி, பாரதி கிருஷ்ணகுமார், பாரதிபுத்திரன், ய.மணிகண்டன் ஆகியோர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்து தமிழ்

 

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>