வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது: சென்னை, கோவையில் சிலை; பேரவையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கப்பலோட்டிய தமிழன் பெயரில் சிறப்பு விருது வழங்கப்படும், சென்னை, கோவையில் வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும், அவர் மறைந்த தினம் தியாக திருநாளாக  கொண்டாடப்படும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஓராண்டில்  புதிதாக உருவாகும் அரசு கட்டிடத்திற்கு அவர் பெயர் சூட்டப்படும் என்பது உள்ளிட்ட  14 அறிவுப்புகளை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். வ.உ.சிதம்பரனாரின்  150வது பிறந்த நாள் விழாவினையொட்டி, சட்டப் பேரவையில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று 14 அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதல்வர் தமிழ் தாத்தாவை கௌவரவிக்க 14 அறிவிப்புகளை வெளியிட்டார் அவற்றை காண்போம்.

* சென்னை காந்தி  மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு  வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது  மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்.
* தூத்துக்குடி மாநகரில், முதன்மைச் சாலையான மேல பெரிய காட்டன் சாலை, இனி ‘வ.உ.சிதம்பரனார் சாலை’ என அழைக்கப்படும்.
* தனது வாழ்நாளின் முக்கிய நாட்களை கோவைச் சிறையிலே கழித்த  வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச் சிலையானது, கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார்  பூங்காவில் அமைக்கப்படும்.
* செய்தித் துறையின் பராமரிப்பிலுள்ள  ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில்  உள்ள வ.உ.சிதம்பரனாருடைய மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு, அவ்விடங்களில்  அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில், ஒலி-ஒளி  காட்சி அமைக்கப்படும்.
* வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றினைச்  சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும்  வகையில், நவீன டிஜிட்டல் முறையிலே அது வெளியிடப்படும்.
*  திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  வ.உ.சிதம்பரனாரின் பெயரில் புதிய ஆய்விருக்கை ஒன்று அமைக்கப்படும்.
*  வ.உ.சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்கள் புதுப்பொலிவுடன்  புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில்  மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* திருநெல்வேலியில்  வ.உ.சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் படித்த  பள்ளிக்குத் தேவையான  கூடுதல் வகுப்பறைகள்,  கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் 1.05 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* கப்பல் கட்டுமானம்,  தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பானத் துறைகளில் ஈடுபட்டு,  சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.  விருது’  ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய்  மற்றும் பாராட்டு  சான்றிதழும் வழங்கப்படும்.
* கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18ம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்து கொண்டாடப்படும்.
*  இந்த ஆண்டு, வருகிற 5ம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வரை,  தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் உருவாகும் அரசுக் கட்டிடங்களுக்கு  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும்.
* பள்ளி,  கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்துத் துறையின்  சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடைய  வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு  செய்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும்.
* தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் நடைபெறும்.
*  தமிழ் நிகர்நிலைக் கல்விக் கழகத்தின் வாயிலாக கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை   முழுவதும்  இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கும் மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அவரது மார்பளவு சிலை வைக்கப்படும்.
* வ.உ.சி. எழுதிய அனைத்து புத்தகங்கள் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: