இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேர் மற்றும் 8 படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அன்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து கப்பல்களில் திடீரென வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்து விரட்டினர்.

பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை பறித்து, அவற்றை வெட்டி கடலில் வீசினர். பின்னர் தமிழக மீனவர்களின் படகுகள் மீது மோதுவது போல் கப்பலை ஓட்டி வந்தனர். மேலும், எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி, தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் லெவல்தாஸ், லியோ, சார்லஸ் பெர்னாண்டோ, செல்வம், வினால்டன் ஆகியோரது 6 விசைப்படகுகளை, 43 மீனவர்களுடன் சிறைபிடித்தனர். இரவோடு இரவாக யாழ்ப்பாணம் அருகிலுள்ள மயிலட்டி கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்களும் படகிலேயே தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை இலங்கை கடற்படை உயரதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் இலங்கை கடல்தொழில் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பி நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் இந்த தகவலை தெரிவித்தனர். தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரும், நேற்று மாலை 6 மணிக்கு ஊர்காவல்துறை  நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 31ம் தேதி வரை  காவலில் வைக்க நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து  மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். 43 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண்டபம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு: மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடம் சவரிராஜ், இவரது சகோதரர் அருளானந்தம் ஆகியோரது விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். அதில் ஒரு படகிலிருந்த 5 பேர், மற்றொரு படகிலிருந்த 7 பேர் என 12 பேரை படகுகளுடன் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இன்றுமுதல் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 55 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 8 விசைப்படகுகளையும் விடுவிக்கவும், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இன்று காலை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பு அனைத்து சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படை நடவடிக்கைக்கு ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>