நாகை அருகே கிடைத்த 17 ஐம்பொன் சிலைகள்

நாகை அருகே, கோவில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது 17 ஐம்பொன் சிலைகளும், 36 வகையான பூஜை பொருட்களும் கிடைத்தன.

latest tamil news

நாகை மாவட்டம், தேவூரில் அமைந்துள்ளது, மதுரபாஷினி உடனுறை தேவபுரீஸ்வரர் கோவில். இது, கோச்செங்கட்டுவ சோழன் கட்டிய மாடக் கோவிலாகும். பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை நவக்கிரஹ சன்னிதிக்கு பின்புறம், கான்கிரீட் பணிக்காக தொழிலாளர்கள் பள்ளம் தோண்டினர்.இதில் 7 அடி வரை பள்ளம் தோண்டியதில் 4 அடி உயர காட்சி கொடுத்த நாயகர், காட்சி கொடுத்த நாயகி 3 அடி உயர அம்பாள் 12 கைகளுடன் கூடிய பைரவர், திருஞானசம்பந்தர், அப்பர் மற்றும் 2 அடி உயர அஸ்திரதேவர் என மொத்தம் 17 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன.


latest tamil news

மேலும், ஐம்பொன்னாலான தாம்பூலம், கமண்டலம், துாபக்கால், விசிறி போன்ற 36 வகையான பூஜை பொருட்களும் அடுத்தடுத்து கிடைத்தன.செயல் அலுவலர் கண்ணன் கூறுகையில், ”தோண்ட தோண்ட பொருட்கள் கிடைப்பதால் பணிகளை நிறுத்தி, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களது மேற்பார்வையில், இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டும் பணி துவங்கும். சிலைகளும், பொருட்களும் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பது, தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்,” என்றார். தேவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கும்பல் கும்பலாக வந்து, சிலைகளை வணங்கி சென்றனர்.

நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: