யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ‘மாவீரர் தினம்’ நிகழ்ச்சி மேற்கொள்ள தடை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ‘மாவீரர் தினம்’ நிகழ்ச்சி மேற்கொள்ள தடை!

1982-ம் ஆண்டு அக்டோபர் 27-ல், இலங்கை சாவகச்சேரி காவல் நிலையத்தை சீலன் தலைமையிலான விடுதலைப் புலிகள் தாக்கினார்கள். மினி பேரூந்தில் வந்த சங்கர், புலேந்திரன், ரகு, மாத்தையா, சந்தோஷம் உள்ளிட்ட 8 விடுதலை புலிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில், காவல் நிலையத்தில் இருந்த ஏராளமான ஆயுதங்களை விடுதலை புலிகள் கைப்பற்றினர்.

காவலர்கள் நடத்திய எதிர் தாக்குதலில், புலேந்திரன், ரகு ஆகிய இருவரும் காயம்பட்டனர். குண்டுபட்டு காயம் அடைந்த சீலன், 2 வார காலத்திற்குப் பின் தமிழகத்திற்கு சிகிச்சை பெற அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் சங்கர் துணையாகச் சென்றிருந்தார். சீலன் தமிழகம் சென்றடைந்த தகவலைத் தெரிவிக்க, யாழ்ப்பாணம் வந்தபோது ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டார். அவர்களிடமிருந்து சங்கர் தப்பித்தாலும் ராணுவத்தினர் சுட்ட குண்டு சங்கரின் உடலில் பாய்ந்திருந்தது. ஆனாலும் அந்தக் காயத்தைப் பொருட்படுத்தாமல், சுமார் 3 கி.மீ தூரம் ஓடி தங்கள் மறைவிடத்தை அடைந்தார். அங்கிருந்த இயக்கத்தினரிடம் தனது துப்பாக்கியை ஒப்படைத்த சங்கர், ”நான் எதிரிகளிடமும் பிடிபடவில்லை. எனது ஆயுதத்தையும் இழக்கவில்லை. எனது கடமையை முடித்துவிட்டேன்” என்று கூறி மயங்கி விழுந்தார்.

உடனடியாக தமிழகத்திற்கு கடல் வழியாக அனுப்பி வைக்கப்பட்ட சங்கருக்கு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த பிரபாகரன், மருத்துவமனைக்கு வந்து சங்கரைத் தனது மடியில் கிடத்திய நிலையில், சங்கரின் உயிர் பிரிந்தது. 22 வயதே ஆன சங்கரின் மரணம் பிரபாகரனை மிகவும் கண்கலங்கச் செய்தது. ஆனாலும் இயக்கத்தின் நலன் கருதி சங்கரின் இறப்பு வெளியில் அறிவிக்கப்படவில்லை.

அதன் பின்னர், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியநாதன் என்ற சங்கரின் மறைவு தினமான நவம்பர் 27-ஐ விடுதலைப் புலிகள் இயக்கம் ‘மாவீரர் தினம்’ என அறிவித்து, ஆண்டுதோறும் அதைக் கடைபிடித்து வந்தது. இந்த நாளில் அனைத்துப் போராளிகள் முன் தோன்றும் பிரபாகரன், ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாள் உரை நிகழ்த்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார். 2008-ம் ஆண்டு, இறுதியாக மாவீரர் தின உரையாற்றினார் பிரபாகரன்.

இந்நிலையில், 2009ல் நடந்த இறுதிக்கட்ட போருக்குப் பின் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுதுமாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலிடங்கள், இலங்கை ராணுவத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டது. ஆனாலும் உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள், நவம்பர் 27-ஐ இன்றும் மாவீரர் தினமாகக் கடைபிடித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு, மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இலங்கை கிளிநொச்சி கனகபுரத்தில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இடத்திலும், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவாலயத்திலும் மாவீரர் தின அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கென, உயிர் நீத்த போராளிகளின் பெயர்களுடன்கூடிய நினைவுப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நேற்று முன் தினம் நள்ளிரவு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, நேற்றும் இன்றும் பல்கலைக் கழக வளாகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் மாணவர்கள் மேற்கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: