உலக மனித உரிமைகள் தினம்! – நமது நாட்டில் எப்படியிருக்கிறது மனித உரிமைகள் பாதுகாப்பு?

உலக மனித உரிமைகள் தினம்! - நமது நாட்டில் எப்படியிருக்கிறது மனித உரிமைகள் பாதுகாப்பு?

உலக மனித உரிமைகள் தினம்! – நமது நாட்டில் எப்படியிருக்கிறது மனித உரிமைகள் பாதுகாப்பு?

உலகில் வாழும் மனிதர்கள் அனைவரின் மனித மாண்பினைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மனிதனும் அவர் வாழ்வதற்கான தனி உரிமையைப் பெறுவதற்கும், மற்ற மனிதர்களை வாழ்விக்கும் நெறிமுறைகளை உணர்த்தவும் கடைப்பிடிக்கப்படுவதுதான் உலக மனித உரிமைகள் தினம்.

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் விதமாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். 1948-ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று ஐ.நா சபை உலக மனித உரிமைகள் தொடர்பான பேரறிக்கையை பிரகடனப்படுத்தியது. எனவே, அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இந்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்தியாவை உற்றுநோக்குகையில், 1993-ம் ஆண்டுதான் இங்கு மனித உரிமைகள் தொடர்பான சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டதுடன் “தேசிய மனித உரிமைகள் ஆணையம்” அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதால், இந்தாண்டு இந்தியாவில் மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டாகச் சிறப்பிக்கப்படுகிறது. இது போன்ற முக்கிய தருணத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாட்டின் பங்கையும், அதன் செயல்பாடுகளையும் உற்று நோக்க வேண்டியுள்ளது.

மனித உரிமை என்பது வெறுமனே வாழ்வதற்கான உரிமையை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஒரு தனி மனிதனின் மாண்பு, கௌரவமான வாழ்க்கை, சமத்துவம் போன்றவற்றுக்கான பாதுகாப்பு, சுதந்திரமான பேச்சு, எழுத்து, சிந்தனை, கருத்து வெளிப்பாடு, உரிமைகள், ஆண்-பெண் பேதமற்ற பாலின சம உரிமை, சமூக முன்னேற்றம், உயர்ந்த வாழ்க்கைத் தரம் என அதன் அளவுகள் பரந்துகிடப்பவையாகும். சாதி, இனம், மதம், மொழி, நிறம், பால், பிறப்பிடம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தலையும், அரச எதேச்சதிகாரத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்டதுதான் மனித உரிமைகள் ஆணையம்.

இந்திய அரசியலமைப்பின்படி, மனித உரிமைகள் என்பது வெறும் உரிமைகள் சார்ந்தது மட்டுமல்ல; அரசால் கூட மறுக்க இயலாத அடிப்படை உரிமைகளும், அடிப்படைக் கடமைகளும் ஆகும்.

இந்தச் சூழலில், இந்தியாவிலும், தமிழகத்திலும் மனித உரிமைகளின் நிலைபற்றி ஆய்வுக்கு உட்படுத்துகையில், அது மிகவும் மோசமானதாகவே உள்ளது எனலாம். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் கண்கூடு. `ஒரு நாடு மனித உரிமையை மதிக்கிறது’ என்று கருதுவதற்கு அடிப்படையே, அரசாங்கத்தின் தவறுகளை எவ்வித அச்சமுமின்றி, எந்தவொரு தனிமனிதரும் சுட்டிக் காட்டும் சூழல் இருப்பதுதான். தமிழ்நாட்டில் அப்படிபட்ட சூழல் இன்று வரை சாத்தியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தச் சுதந்திரம் தனி மனிதருக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.

“உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அது மனித உரிமை மீறலாகிறது” – ஜோசப் ரெசின்கி.

இந்தியா பொருளாதார வளர்ச்சியடைகிறது என ஒருபுறம் மத்திய அரசு முழங்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், பசி மற்றும் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வளர்ந்து வரும் உலக நாடுகளில் உள்ள பட்டினி விகிதத்தின் அடிப்படையில் புதிய அட்டவணை ஒன்றினை `சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வுக் கழகம்’ சமீபத்தில் வெளியிட்டது. 119 நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியலில் (Global Hunger Index) இந்தியா 103-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் இருந்தது. தவிர, `பட்டினி குறித்த விஷயத்தில் இந்தியாவின் நிலை அபாயகரமானதாக உள்ளது’ என்றும் அதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பங்களாதேஷ், இலங்கையை விட இந்தியா பின்தங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் 21 சதவிகிதம் பேர் உள்ளனர். குறிப்பாக, வடமாநிலக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு நோய்த் தாக்கம் ஏற்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிக மோசமாக உள்ளது. 2000-வது ஆண்டில் 17.1 சதவிகிதமாக இருந்த நிலை மாறி, 2005-ம் ஆண்டில் 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தற்போது அது 21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பட்டினி நிலை இப்படி என்றால், உலக அளவில் உணவுப் பொருள்களை அதிகளவில் வீணாக்குவதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளது வேதனையளிக்கக் கூடியது. வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ள போதிலும் அது போதுமானதாக இல்லை.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் என்று எடுத்துக் கொண்டால், இந்தியாவில் அது அதிகரித்த வண்ணம் உள்ளது. பணியிடங்களில் பாலியல் தொந்தரவு, வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை என அந்தப் பட்டியல் நீள்கிறது. 2016-ம் ஆண்டில் பணியிடங்களில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் 539 பதிவாகியுள்ளன. 2006-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையல் இது 176 சதவிகிதம் அதிகமாகும் என்று தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் இந்தியா, உலக அளவில் பின்தங்கியே உள்ளது. உலகளவில் பாலினப் பாகுபாடு குறித்த அறிக்கையின்படி இந்தியா, 108-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆண், பெண் பாலினச் சமத்துவம் வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் விஞ்ஞான வளர்ச்சியால் செயற்கைக் கோள்கள் நிலவைத் தொட்டுவிட்டன. ஆனால், இந்தியாவில் கையால் மலம் அள்ளுவோரின் எண்ணிக்கை 20,000-க்கும் அதிகமாக இருப்பது தொடர்ந்து வேதனையளிக்கக்கூடியதாக உள்ளது. நாடு முழுவதும் 60,000 துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர். ‘தூய்மை இந்தியா’ திட்டம் என்று முழங்கும் அரசு, அதற்காக கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிடும் அதே நேரத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பையும், அவர்களுக்கான நவீன உபகரணங்களையும் அளிக்கத் தவறிவிட்டது.

தமிழக மக்களின் போராட்டங்கள் :

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையால் சென்னை மெரினா, அலங்காநல்லூர் என பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. நாட்கள் நகர, நகர போராட்டம் திருச்சி, கோயமுத்தூர் என பல இடங்களுக்கும் விரிவடைந்தது. போராட்டக்களங்களில் பெண்கள் குழந்தைகள் கூட இரவு முழுவதும் தங்கியிருந்தனர். மிகப்பெரிய எண்ணிக்கையில் நடந்த இந்த போராட்டத்துக்கு பெண்கள் தமிழகத்தில் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றிருப்பது, தகவல் தொடர்பு அம்சங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக கருதப்பட்டன.

2017-ஆம் ஆண்டு மே மாதம் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் உபகரணங்களைக் கொண்டு வந்தனர். மீத்தேன் திட்டம் தொடர்பான ஆய்வுகளுக்காக அவை கொண்டுவரப்படுவதாக நினைத்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜூன் மாதத் துவக்கத்தில் காவல்துறை உதவியுடன் ஓ.என்.ஜி.சி. பராமரிப்புப் பணிகளைத் துவக்கியது. அந்த கிராமமே காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. எதிர்ப்புத் தெரிவித்த சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. செருப்பால் அடித்துக் கொண்டு போராட்டம்; மணலில் கழுத்து வரை புதைத்து போராட்டம்; ஒப்பாரி போராட்டம்; நிர்வாண போராட்டம்; தூக்கு கயிற்றுடன் போராட்டம் என வெவ்வேறு வகையில் நூறு நாட்கள் தொடர் போராட்டம் அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகளால் நடத்தப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சுமார் 40 நாட்கள் போராட்டம் நடத்தினர். ஜூலை 16-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் அக்டோபர் 23-ம் தேதி வரை நீடித்தது. விவசாயிகள் கடன்கள் ரத்து, நதிநீர் இணைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் முதல் கட்டமாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகள் துவங்கப்பட இருப்பதாக பிப்ரவரி 15-ல் செய்தி வந்ததையடுத்து விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர் அதைத்தொடர்ந்து போராட்டம் உருவானது. பின்பு தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளிலும் போராட்டம் பரவியது.

கட்டாய நீட் மருத்துவ நுழைவுத் தேர்வால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின.

நவம்பர் (2017) இறுதி முதல் டிசம்பர் மாதம் வரை நடந்த ஒகி புயலின்போது மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த புயலில் இறந்த மீனவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் கூறுவதாகவும், புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணிகளை அரசு துரிதமாக செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையத்தில் நூற்றுக்கணக்கான மீனவ பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீட்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றதாக மீனவ அமைப்புகள் குற்றம்சாட்டின. இதற்கிடையில் டிசம்பர் 11-ம் தேதியன்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படைக்குச் சொந்தமான 23 கப்பல்களும், 3 டோர்னியர் விமானங்களும், 1 ஹெலிகாப்டரும் ஈடுபட்டதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மினிகாய் தீவுகளின் கடற்கரைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இன்னமும் இறந்த மீனவர்கள், காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை குறித்து தெளிவான விவரங்கள் இல்லை என மீனவ அமைப்புகள் கூறி வருகின்றன. மீனவர்களை தேடும் பணியில் ஆங்காங்கே ஒரு சில உடல்கள் மீட்கப்பட்டன.

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் துயரம் இன்றும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அரசின் செவிகளுக்கு எட்டுமா என்ற கேள்வி எழுகிறது.

“பன்முகத்தன்மையைப் பாதுகாத்தலே, மனித உரிமையின் ஆன்மா” என்கிறது ஐ.நா. சபை. ஒரு நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் அரசு செலுத்தும் சிரத்தையே, அந்த நாடு மனித உரிமைகளுக்கு எந்தளவுக்கு மதிப்பளிக்கிறது என்பதைக் காட்டுகிறது. மனிதர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான உணவு, உடை, பண்பாட்டு, மொழி மற்றம் உரிமைகளைப் பின்பற்ற பிரத்யேக உரிமை உள்ளது. அது தனி மனித உரிமையாகும். அதைப் பாதுகாக்க அரசு பாடுபட வேணடும். துணைக் கண்டம் என்று அழைக்கப்படும் அளவுக்கு பல்வேறு இன, மத, மொழிகளைக் கொண்டதாக இந்தியா திகழ்கிறது. உலக நாடுகள் இந்தியாவிடம் விரும்புவதும் இந்தப் பன்முகத்தன்மையைத்தான். அதுவே இந்தியாவின் அடையாளம். ஆனால், நம் நாட்டில் அண்மைக்காலமாக மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களும், குறிப்பிட்ட சிலருடைய உணவுமுறை, பண்பாட்டில் அரசு ஏற்படுத்த விழையும் முயற்சிகளும் இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்த அடையாளத்துக்கு ஆபத்தாக அமைகிறது. அதுபோன்ற செயல்பாடுகள் சரிசெய்யப்பட்டால் மட்டுமே இந்தியாவில் மனித உரிமைகள் தொடர்ந்து தழைத்தோங்கும் என்பது உறுதி.

எனவே, உலக மனித உரிமைகள் தினத்தில் தமிழகமும், இந்தியாவும் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். “மனித உரிமைகளை காப்போம்; மானுட மாண்பை வளர்ப்போம்”.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>