தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மக்களவையில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பாமல் காலம் தாழ்த்துவதாக மக்களவையில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார். நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் அளிக்கக்கோரும் வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
அப்போது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி, பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டத்திற்கு எதிரானது என்று டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார். திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனிடையே மாநிலங்களவையில் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறி அறிமுக நிலையிலேயே மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரியில் விவசாயிகள் ஜீப் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவியை பறிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநிலங்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவையின் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.
நன்றி : தினகரன்