ஆந்திராவில் கொல்லப்படும் தமிழர்கள்- செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா?

ஆந்திராவில் கொல்லப்படும் தமிழர்கள்... செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா?

ஆந்திராவில் கொல்லப்படும் தமிழர்கள்… செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா?

ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப் படுவதற்கு, செம்மரக் கடத்தல் விவகாரம் மட்டும்தான் காரணமா? தமிழகத்தில் ஒரு என் -கவுன்ட்டர் நடந்தாலே பதறித் துடிக்கிற நிலை இருந்தும், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திராவில் சாதாரணமாகச் சுட்டுக் கொல்ல முடிகிறது, ஐந்து பேரைக் கொன்று ஏரியில் மிதக்க விட முடிகிறது என்றால்? மாநில, தேசிய ஊடகங்களில், ஏப்ரல், 7, 2015-ம் தேதி அன்று, நாட்டையே உலுக்கிய அந்தத் தலைப்புச் செய்தி, ஒளிபரப்பானது. ஆந்திர வனத்துறை மற்றும் காவல் துறையினரால் சுட்டும், எரித்தும் கொல்லப்பட்டிருந்த 20 பேரின் உடல்களை, ஊடகங்கள் நெருக்கத்தில் காட்டியதைப் பார்த்தவர்கள் பதறித்தான் போனார்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் நடந்த இந்தக் கொடூரத்தைக் கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் பலனில்லை. அதிகார மையமாக விளங்கக் கூடிய தமிழக அரசு, இந்த விவகாரத்தில் போதிய அழுத்தம் கொடுக்காமல் விட்டதின் விளைவே, இது தொடர் கதையாகும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. சில ஆண்டுகள் முன்னோக்கிச் சென்றாலே, ஓரளவுக்கு காரணங்கள் புரியும். செம்மரக் கடத்தல் கும்பலால் வனத்துறை அதிகாரிகள் டேவிட் கருணாகர், ஸ்ரீதர் ஆகிய இருவர் கடந்த 2013, டிசம்பர் 15-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் ஆந்திர காவல் துறையினர், அவசர அவசரமாக 454 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 349 பேரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தியது. இவர்களில் 287 பேர் தமிழர்கள். வழக்கை விசாரித்த திருப்பதி சிறப்பு நீதிமன்றம், ” தமிழகத்தைச் சேர்ந்த 287 பேர் உள்பட, ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக, ஆந்திரச் சிறையில் இருக்கும் 349 பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை” என்று அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

வனத்துறை அதிகாரிகளைக் கொலை செய்த வழக்கில் ஆந்திர காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 349 பேரில் 65 பேர் மட்டுமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியில் வர, இந்த 65 பேர்களுக்கு மட்டும் ஆந்திர காவல் துறையினர் கோர்ட்டில் எதிர்ப்பு காட்டவில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர்களையோ ஜாமீனில் அனுப்ப சம்மதிக்கவில்லை. விசாரணை காலமான இரண்டாண்டு காலமும் தமிழர்கள் சிறையில் கிடந்தனர். தீர்ப்பு நாளன்று நீதிபதிகள், “குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஜாமீன் தர நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அப்படியென்றால் இந்த 349 பேரை மட்டும் முழுமையாக விசாரித்து முடித்து விட்டீர்களா? மற்றவர்கள் மட்டும்தான் குற்றவாளிகளா? ” என்று கேள்வி எழுப்பியது. தலைகுனிந்து நின்றது, ஆந்திர காவல்துறை. “வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப் பாருங்கள்” என்றும் ஆந்திர காவல் துறையினரை, திருப்பதி சிறப்பு நீதிமன்றம் எச்சரித்தது. இரண்டாண்டு சிறைவாசத்தில் 5 தமிழர்கள் சிறையிலேயே உயிரிழந்த கொடுமையும் நடந்தது. கொலைக்கு சற்றும் தொடர்பில்லாத ஆட்களை கோர்ட்டில் கணக்குக் காட்டி வழக்கை முடிக்க நினைத்த ஆந்திர காவல் துறையினருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் அன்று முதல் தமிழர்களை பொய் வழக்கில் கைது செய்யும் வேலையில் ஆந்திரக் காவல்துறை இறங்கி விட்டது. ஆந்திரக் காவல் துறையின் உள்நோக்க செயல்பாட்டின் ஓர் அங்கமாகவே 20 தமிழர்கள், என் -கவுன்ட்டர் முறையில் கொல்லப்பட்டனர். மிகக் கொடூரமாக நடந்து முடிந்த இந்தக் கொலை விவகாரத்தை, 2015 ஏப்ரல் இறுதி வாரங்களில் விசாரித்த, ஹைதராபாத் உயர் நீதிமன்றம், “திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு 17 நாள்களாகியும் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன், இந்த வழக்கில் ஆந்திர அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” என்று கேள்விகளை அடுக்கியது. அதற்கு, ‘வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது, சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை’ என்று ஆந்திர அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது, “இது தொடர்பாக எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது” ? என்று நீதிபதிகள் கேட்க, அதற்கு, ஆந்திர அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் பதில் இல்லை. “இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டும், இதுவரையில் நீங்கள் ஏன் செய்யவில்லை ? வருகிற 28-ம் தேதிக்குள் விசாரணை தொடர்பான ஆவணங்களை, இந்தக் கோர்ட்டில் நீங்கள் தாக்கல் செய்யவேண்டும்” என்று எச்சரித்தே, அரசுத்தரப்பு வழக்கறிஞரை, நீதிபதிகள் அனுப்பி வைத்தனர். ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உடும்புப்பிடி கேள்விகளை சாதகமாக்கிக் கொண்டு, இந்த வழக்கை தமிழக அரசு முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? இரண்டாண்டுகள் கழித்து, அதே ஆந்திராவில், இறந்து போன ஐந்து தமிழர்களின் குடும்பத்துக்கு தலா மூன்று லட்சத்தை உயிர்க்கூலியாக, தமிழக அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இருபது உயிர்கள் பறிபோன விவகாரத்தைக் கண்டித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வேல்முருகன், ‘தமிழர் நீதி பேரணி’ நடத்தினார், ‘சி.பி.ஐ. விசாரணை மற்றும் நீதி விசாரணை’ கோரி ஆளுநரிடம் மனுவும் அளித்தார். வைகோ, தொல். திருமா, மற்றும் கம்யூ.கட்சிகள், ஆம் ஆத்மி, த.மு.மு.க., கொங்குநாடு ஈஸ்வரன், ரவி பச்சமுத்து, தெஹ்லான் பாகவி, முன்னாள் ஐ.ஏ.எஸ். சிவகாமி, ஜான் பாண்டியன், வெள்ளையன் என்று பலர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சீமான், சரத்குமார் போன்றோரும் பல இடங்களில் போராட்டம் நடத்தினர், கண்டனம் தெரிவித்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் பிரதமரைச் சந்தித்து, அனைத்துக் கட்சியினர் மனு அளித்தனர். இத்தனை நடந்தும் 20 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், நியாயம் கிடைக்கும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஆந்திரமாநில சிறப்புக் காவல்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவலைச் சொன்னார்கள், அவ்வளவே ! அதேபோல், ‘ஆந்திர போலீஸ் ஐ.ஜி. ரவிசங்கர் அய்யனார் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு இதுகுறித்த முழுமையான விசாரணையை நடத்தும்’ என்றும் சொன்னார்கள், அவ்வளவே!

  • விகடன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: