`ஈழத்தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!’ – நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒருமித்த குரல்!

`ஈழத்தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!’ – நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒருமித்த குரல்!

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்தியாவின் அண்டை மூன்று நாடுகளாகிய பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து 31.12.2014 க்கு முன்பாக இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியம், பௌத்தம், சமணம், பார்சி மற்றும் கிறித்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை இதன்மூலம் மத்திய அரசு தளர்த்தியிருக்கிறது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்க்கட்சிகள் பிரதானமாக முன்வைத்த விஷயங்கள் இதற்கு மூன்று நாடுகளை மட்டும் தேர்வு செய்தது ஏன்?. மியான்மர், இலங்கை போன்ற நாடுகளிலும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்த நாடுகள் தவிர்க்கப்பட்டது ஏன்?. இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற ஆறு மதத்தினரை மட்டும் தேர்வு செய்தது ஏன்? அந்த நாடுகளிலும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளவே செய்கின்றனர் என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். முஸ்லிம்களையும் இந்தச் சட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான அகாலிதளமும் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு பதிலளித்துப் பேசுகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த மூன்று நாடுகளில் முஸ்லிம்கள் ஒடுக்குமுறைகள் எதிர்கொள்வதில்லை” என்று தெரிவித்தார்.

இந்த விவாதங்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழர்களும் இந்தச் சட்டப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகக் கட்சிகள் கடந்து அனைத்து அரசியல் கட்சிகளாலும் பரவலாக எழுப்பப்பட்டுள்ளது. மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரும் இலங்கைத் தமிழர்களும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மிதுன் ரெட்டி, “இலங்கை அகதிகள், தமிழ் பேசுபவர்களாக இருந்தாலும் ஆந்திராவில் அவர்கள் பரவலாக முகாம்களில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கும் குடியுரிமை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படாததைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மசோதாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என்ற இரு நிலை இருந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற விஷயத்தில் பல அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: