ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த, நாட்டுப்புற பாடகி, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட, பல்வேறு துறைகளில் சாதனை மற்றும் சேவை புரிந்தவர்களுக்கு, பத்ம விருதுகளை வழங்கி, கவுரவித்து வருகிறது. இந்தாண்டு, இசை அமைப்பாளர், இளையராஜா உட்பட, மூன்று பேருக்கு, பத்ம விபூஷண் விருதும், இந்திய கிரிக்கெட் அணி வீரர், டோனி உட்பட, ஒன்பது பேருக்கு, பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது.
மேலும், 72 பேருக்கு, பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. இவர்களில், இளையராஜா உட்பட, 43 பேருக்கு, கடந்த மாதம், விருது வழங்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக, மீதமுள்ளவர்களுக்கு, நேற்று, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, பிரபல நாட்டுப்புற பாடகி, விஜயலட்சுமிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விருது வழங்கினார். துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.