`மும்மொழிக் கொள்கை எதற்காக?’ – புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழு தலைவர் கஸ்தூரிரங்கன்!

`மும்மொழிக் கொள்கை எதற்காக?’ – புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழு தலைவர் கஸ்தூரிரங்கன்!

கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவால் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கு, தென் மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக, இந்தி மொழி தொடர்பான பரிந்துரையில் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழு தலைவரான கஸ்தூரி ரங்கன் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக, கல்விக் கொள்கையில் மாற்றம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில்தான், விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு, தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது. இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டு, பின்னர் அமல்படுத்தப்படும் . இந்நிலையில், என்.டி.டி.வி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வரைவுக் குழு தலைவர் கஸ்தூரி ரங்கன், தங்களுக்கு எந்த அழுத்தமும் வரவில்லை என்று தெரிவித்தார்.

“சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக் கொள்கை தொடர்பாக எந்த அழுத்தமும் எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. யாரும் அதில் பிரச்னை உள்ளது என்று எங்களிடம் தெரிவிக்கவில்லை. ஒருநாள் காலையில், தென்மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைக்கு கடும் அதிருப்தி கிளம்பி இருப்பதாகத் தெரிந்துகொண்டேன். உடனடியாக எனது குழுவின் சக உறுப்பினர்களை அழைத்து கலந்துபேசி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுத்தோம். அப்படித்தான் அதில் சிறு மாற்றம் கொண்டு வந்தோம்.

இந்தி மொழியைத் திணிக்கிறோம் என்பது பொய்யான குற்றச்சாட்டு. எங்களின் மும்மொழிக் கொள்கை எந்த மாநிலத்திலும் இந்தியைத் திணிக்காது. 3 வயது முதல் 8 வயதுடைய குழந்தைகள், மொழிகளைப் படிப்பதற்கான சிறந்த காலமாக உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதன் காரணமாகத்தான் இந்த மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்தோம். மும்மொழிக் கொள்கை, அடுத்த காலங்களில் ஒருவர் அதிக மொழிகளைப் படிப்பதற்கு அடிப்படையாக அமையும். அதனால்தான் கேட்கிறோம், இதில் என்ன தவறு இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது ராக்கெட் விஞ்ஞானத்தை விடக் கடினமான ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்தார். “ஒரு புதிய கொள்கையை உருவாக்கும்போது, அதில் விமர்சனங்கள் எழாமல் செய்வது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது. என்றாலும், விமர்சனம் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: