36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது!

36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது!

36 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில், இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானத் தளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி வழியாக கொழும்புவிற்கு விமானப் போக்குவரத்து இருந்து வந்தது. 1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

2009-ல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் பலாலி விமானத்தளத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் விமான நிலையமாக புனரமைக்கும் பணிகள் தாமதப்பட்டே வந்தன.

இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் பலாலி விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். மேலும் பலாலி விமானதளம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

இந்நிலையில் பணிகள் நிறைவடைந்து யாழ்பாண விமான நிலையம் இன்று திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பாலாலிக்கு அலைன்ஸ் ஏர் விமானம் புறப்பட்டுச் சென்றது. முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: