இந்தியாவின் முதல் பெண் மாலுமி ; தமிழ்நாட்டின் ரேஷ்மா!

இந்தியாவின் முதல் பெண் மாலுமி ; தமிழ்நாட்டின் ரேஷ்மா!

விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட துறையில் சாதனை படைத்த முதல் பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்வதை விட தன்னைப்போல் அதிக பெண்கள் அந்த துறைக்கு வந்தால் அதை விட பெருமையடைவேன் என்கிறார் சென்னையில் பிறந்து மேற்கு வங்கத்தில் பணியாற்றி தற்போது உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட் ரேஷ்மா நிலோஃபர்.

“ஒரு தமிழ்ப் பெண்ணாக என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் நான் பெருமையடைகிறேன். சென்னையில் பிறந்து வளர்ந்த நான் முதன் முதலில் பயிற்சிக்காக மேற்கு வங்கம் சென்றபோது மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டேன்” என்று கூறும் ரேஷ்மா தனது சாதனைக்கு பின்னால் உள்ள சவால்களை பகிர்ந்து கொண்டார்.

2011-ஆம் ஆண்டு செய்தித்தாள் விளம்பரம் ஒன்றை பார்த்து பயிற்சி நிலை மாலுமி பணிக்கு விண்ணப்பித்து, ஆறரை ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகு 2018-ஆம் ஆண்டில் நதி மற்றும் கடல் மாலுமியாக தகுதி பெற்ற ரேஷ்மா தற்சமயம் கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி துறைமுகத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார்.

”விமானத்தை போன்று கடல் சார்ந்த பணிகளிலும் பைலட் என்ற முக்கியத்துவம் வாய்ந்த பணி இருப்பது குறித்து பலருக்கும் தெரியவில்லை. ஒரு கப்பல் என்று எடுத்துக்கொண்டால் டெக் எனப்படும் கப்பலின் மேல்தட்டு பிரிவு மற்றும் இன்ஜினியரிங் எனப்படும் நுட்பம் தொடர்பான தளம் என இரு பிரிவுகள் உள்ளன. கப்பலை செலுத்துவது, கடல் மார்கத்தை திட்டமிடுவது, நீர்வழி போக்குவரத்து நெரிசல் குறித்து தொடர்ந்து கண்காணிப்பது, மற்ற பணியாளர்களுடன் தொடர்பு கொள்வது, போன்றவை கப்பலின் மேல்தட்டு பிரிவு அதிகாரிகளின் (டெக் ஆஃபீசர்) முக்கிய பணிகளாகும், ”நுட்ப பிரிவின் உயரதிகாரி கப்பலின் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். அதே போல கப்பலின் மேல்தட்டு பிரிவு அதிகாரிகளின் தலைமை அதிகாரிதான் பைலட். ஒட்டுமொத்த கப்பலுக்கு தலைமை வகிப்பவர் கேப்டன் என்றாலும் அந்த கேப்டனுக்கு கடல்சார்ந்த அறிவுரைகளை வழங்குவதுடன் ஒரு துறைமுகத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்தான் பைலட்” என்கிறார் 31 வயதாகும் தமிழ்ப் பெண் ரேஷ்மா.

கப்பல்களில் பணியாற்றுபவர்கள் குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ அல்லது தேவை ஏற்பட்டால் உடனடியாக வீட்டிற்கு செல்லவோ முடியாது என்றும் தொடர்ந்து பல மாதங்கள் ஒரே கப்பலிலேயே பணியாற்ற வேண்டுமென்றும் பரவலாக கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் உண்மையிலேயே கப்பலில் பணியாற்றுவது என்பது எந்தளவுக்கு சவால் நிறைந்தது என்று ரேஷ்மாவிடம் கேட்டபோது, “பெருங்கடல் பகுதியில் சிக்கிக்கொண்டால் கடலை கடக்க சுமார் பத்து நாட்கள் ஆகலாம். கப்பலில் அவசரநிலை ஏற்பட்டால் ஹெலிகாப்டரை உடனே வரவழைத்து அங்கிருந்து தப்பிக்க முடியாது. பல மணி நேரமோ சில நாட்களோ உதவி வரும்வரை காத்திருந்து துறைமுகத்தை அடையும்வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். இதன் காரணமாக தனிப்பட்ட வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்களை இழக்கும் சூழ்நிலை நேரிடலாம்.”

”கப்பலில் கேப்டனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவருக்கு மாற்றாக அடுத்த நிலை அதிகாரி பொறுப்பேற்பார். ஆனால் மாலுமிக்கு மாற்று வேறு யாருமே கிடையாது. ஒருவேளை மாலுமிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனால் கப்பல் நடுக்கடலில் நங்கூரமிட்டு காத்திருக்க வேண்டியதுதான். மாலுமி இல்லாமல் கப்பல் ஒரு அடிகூட நகரவோ துறைமுகத்திற்குள் நுழையவோ முடியாது” என்று ரேஷ்மா கூறுகிறார்

இதுவரை இவர் கண்டம் விட்டு கண்டம் தாண்டி சுமார் நாற்பது நாடுகளுக்கு கப்பலை இயக்கிச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று, பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘நாரி சக்தி புரஸ்கார் விருது’ ரேஷ்மாவுக்கு வழங்கப்பட்டது.

முறையான கல்வித் தகுதியுடன் முதலில் ஒரு கப்பலுக்கு கேப்டனாக சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகே ஒருவர் துறைமுகங்களில் மாலுமியாக முடியும். ஒவ்வொரு கப்பலையும் பல போராட்டங்களைத் தாண்டி பாதுகாப்பாக கரை சேர்ப்பது ஒரு போரில் வெல்வது போன்றது என்றும் தான் தினமும் ஒரு போரில் வெற்றி பெறுவதால் இந்த பணி மிகுந்த மன நிறைவை தந்துள்ளதாக இவர் கூறுகிறார்.

உலகளவில் கப்பல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே என்கிறது சர்வதேச கடல்சார் நிறுவனத்தின் அதிர்ச்சி அளிக்கும் தரவு. இந்நிலையில், மற்ற துறைகளை போன்று பெண்கள் கப்பல் சார்ந்த பணிகளில் சாதிப்பதற்கு தடையாக இருப்பது எது என்று அவரிடம் கேட்டபோது, “கப்பலில் ஏற கயிற்றால் செய்யப்பட்ட ஏணி இருக்கும். நிலையாக இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கும் இந்த ஏணியை பிடித்து ஏற வேண்டும் என்பதே பெண்களுக்கு சவாலான பணிதான்” என்றார்.

”நான் இயக்கிய கப்பலில் இதுவரை நான் மட்டுமே ஒரே பெண்ணாக இருந்திருக்கிறேன். கப்பல் துறையில் கட்டளையிடும் தலைமை பணியில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் பெண்களுக்கு வானம் கூட எல்லை இல்லை. ஏனென்றால் வானையும் தாண்டி விண்வெளியிலும் பெண்கள் சாதித்திருக்கிறார்கள். வலி, அழுத்தம், ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது போன்ற திறன்கள் இயற்கையாகவே பெண்களுக்கு அமைந்திருக்கின்றன. ஆனால் பெண்களால் இதை செய்ய முடியாது அதை செய்ய முடியாது என்று சமூகம் சொல்வதை கேட்டு வளர்வதால் பெண்கள் தங்கள் திறமை மீதே சந்தேகம் கொள்கின்றனர்” என்று கூறுகிறார் அவர்.

”இப்போதைக்கு என்னுடைய இலக்கு உலகம் முழுவதிலும், குறிப்பாக இந்திய பெண்களுக்கு கப்பல் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கடல் உலகில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதே” என்கிறார் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு சென்று பெண்களை மத்தியில் ஊக்க உரையாற்றிவரும் ரேஷ்மா. கடல் சார் பணிகளில் அதிக பெண்கள் வருவதற்காக அவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, பல பெண்கள் குழுக்களில் உறுப்பினராக இருப்பதன் மூலம் அவர்களுக்கு உதவியும் வருகிறார்.

  • பிபிசி தமிழ்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: