இந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை!

இந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை!

இந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை!

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்க விரும்பும் பிற நாட்டவருக்கும், தமிழைச் சேர்ப்பது தேவையானது.அந்த வகையில் உலகப் புகழ் வாய்ந்த, அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைப்பதும், அதற்கு அரசு நிதியுதவி அளிப்பதும், வரவேற்கத்தக்க முயற்சி தான்!


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ஏனெனில், ஹார்வர்டு பல்கலைக்கழக அரிச்சுவடிகள், தமிழை சமஸ்கிருதத்தின் கிளை மொழியாகவே கருதி வருகின்றன. அதை மாற்றும் முயற்சியாக, தமிழ் மொழி இருக்கை அமையும். ஆனால், நம் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக் கழகங்களிலும், தொன்மைமிகு தமிழுக்கு எத்தகைய இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதை, அறிய வேண்டியது அவசியம்.

இந்திய பல்கலைக் கழகங்களில், சமஸ்கிருத மொழிக்கு, துறை அல்லது இருக்கை இல்லாத பல்கலைக் கழகங்கள் கொஞ்சமே. ஆனால், எத்தனை பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது முக்கியமான கேள்வி.

மொழிகளுக்கென தனிச்சிறப்புடன், நாடு முழுதும், ஆறு பல்கலைக் கழகங்களை உருவாக்கியுள்ள மத்திய அரசு, அவற்றில் மூன்றை, சமஸ்கிருத வளர்ச்சிக்குரிய நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களாக உருவாக்கி, நடத்தி வருகிறது.மீதமுள்ள மூன்றை, உருது, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான, மத்திய பல்கலைக் கழகங்களாக அமைத்துள்ளது. ‘தமிழ் செம்மொழி’ என அறிவிக்கப்பட்டு, 13 ஆண்டுகள் கடந்த பின்னும், தமிழுக்கு இத்தகைய சிறப்பிடங்கள் ஏன் அளிக்கப்படவில்லை என்பது வியப்புக்குரியது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ் மொழிக்கு இந்திய பல்கலைக் கழகங்களில் உரிய இடம் மறுக்கப்படுவதற்கான பின்னணியை ஆய்ந்தறிவதும் அவசியமானது. அன்று முதல் இன்று வரை, மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்தவில்லை என்பது முதல் காரணம்.
தமிழகத்தில் திராவிடக்கட்சிகள் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின், தமிழ் மொழியின் பெருமையை உலகறிய செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை, முழுமையடைந்தனவா என்பதில் ஐயம் உள்ளது.

‘தமிழே என் வாழ்வு, மூச்சு’ என, முழங்குபவர்கள் கூட, முழுமையான முயற்சிகளில் ஈடுபட இல்லை என்பது வருந்தத்தக்கது.இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்கள் அனைத்தையும், தம் ஆளுகைக்குள் வைத்திருப்பதுடன், அவை இயங்குவதற்கான நிதியுதவியையும் வழங்கும் பல்கலைக் கழக மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளிலும் கூட, தமிழ் மொழிக்கு பல்கலைக் கழகங்கள் வழங்க வேண்டிய சிறப்பிடம் குறித்த குறிப்புகள் இடம் பெறவில்லை.

அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும் பல்கலைக் கழக மானியக்குழு, அந்தக் கல்வி நிலையங்களில், தொன்மையான மொழிகளுக்கு இருக்கை அல்லது துறை அமைக்க வேண்டியது அவசியம் என்பதை, ஆணையாகவே பிறப்பிக்கலாம்.

அதற்கு தேவையான சட்ட மசோதாக்களையும், சட்ட திருத்தங்களையும், பார்லிமென்டில் கொண்டு வர முயற்சிக்கலாம். பல்கலைக் கழக மானியக்குழுவின் நெறிகளுக்கு கட்டுப்பட வேண்டியது, பல்கலைக் கழகங்களின் பொறுப்பு.இது, அம்மொழியின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், வலு சேர்க்கும் காரணியாக, வரலாற்றில் இடம் பெறும். 2009ல் நடந்த, ‘யுனெஸ்கோ’ எனப்படும், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் கணக்கெடுப்பின் படி, நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள, 196 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்ற அதிர்ச்சி தகவல், தெரிய வருகிறது.

அதை காக்க வேண்டிய பொறுப்பு, மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என, அறிவுறுத்தியுள்ளது.இந்தியா எனும் பாரத துணைக்கண்டம், பல மொழி, இனம், சமயம், கலாசாரம் ஆகிய பண்பாட்டு பதிவுகளை கொண்ட, பன்முகத் தன்மையுள்ள நாடு. இந்த தன்மையே, நாட்டின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.

ஆனால், 1963ல் இயற்றப்பட்ட, இந்திய தேசிய மொழிச்சட்டத்தின் படி, ஹிந்தி ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது. இச்சட்டத்தில், 1976, 1987, 2007ம் ஆண்டுகளில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த மொழிச்சட்டம், நாட்டின் பிற மாநிலங்களுக்கு பொருந்துமே தவிர, தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் நிகழ்ந்த, ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களால், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில், தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்தி கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களை போல, அலுவல் மொழியாக ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை பின்பற்ற வேண்டிய கட்டாயம், தமிழகத்திற்கு இல்லை. இதை, மேற்கண்ட சட்டத்திருத்தங்களும் உறுதி செய்கின்றன.

தமிழகத்தை போலவே, மற்ற மாநிலங்களும், அம்மாநில மொழியை, அலுவலகங்களில் பயன்படுத்த வழி வகை செய்ய குரல் எழுப்புகின்றன. இந்திய அரசியலமைப்பு சபையின், எட்டாவது அட்டவணையில் உள்ள, 22 மொழிகளையும், ஆட்சிமொழிகளாக அறிவித்து அங்கீகரிக்க வேண்டும் என, நாடு முழுதும் அக்குரல் ஒலிக்க ஆரம்பித்து இருப்பதுடன், போராட்டங்களும் நடத்தப்படுகின்றன.

இக்கோரிக்கையின்படி மேற்கண்ட, 22 மொழிகளும் அலுவல் மொழிகளாக வகை செய்வதுடன், அந்தந்த மாநிலங்களில் உள்ள, மத்திய, மாநில அரசு அலுவலகங்களில், அம்மாநில மொழியே அலுவல் மொழியாக பயன்படுத்தப்படும். இத்தகைய முயற்சிகள், மாநில மொழிகளை அழியாமல் பாதுகாப்பதுடன், வளர்ச்சி பெறவும் துணை செய்யும். தேசிய மொழிகள் ஆட்சி மொழிகள் என்ற கண்ணோட்டத்தில், இம்மொழிகளுக்கு உரிய சிறப்பிடம், நாடு முழுதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும்.

ஆட்சி மொழி சட்டத்தின் படி, எல்லா மாநிலங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களில், 22 மொழிகளுக்கும், துறைகளும், இருக்கைகளும் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.நாட்டின் தேசிய மொழியாக எதை அறிவிக்கலாம் என்ற விவாதம் எழுந்த காலத்தில், ‘தமிழ் மொழிக்கு மட்டும் தான், தேசிய மொழியாக ஆக்கப்படும் தகுதி உண்டு’ என, அறிஞர்களும், கல்வியாளர்களும் கூறி, இலக்கிய, இலக்கண ஆதாரங்களை முன்வைத்தனர். அத்தகைய உயர் தனிச்செம்மொழிக்கு, அக்காலத்திலோ அல்லது அதற்கு பிறகோ, நாட்டின் வரலாற்றில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு நிலைத்தகுதி என்ன என்பது குறித்து சிந்திப்பது அவசியம்.

வட மாநில பல்கலைக் கழகங்களான பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஆக்ரா பல்கலைக்கழகம்.

டில்லி, லேடி ஸ்ரீராம் கல்லுாரி, சண்டிகர் பல்கலைக் கழகம், பட்டியாலா பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், லக்னோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழுக்கென தனித்த துறைகள் அமைக்கப்பட்டன.

ஆனால் தற்போது, இவற்றில் எத்தனை பல்கலைக் கழகங்களில், உரிய பேராசிரியர்கள் மற்றும் ஆய்வுக்களங்களுடன் தமிழ்த்துறை இயங்கி வருகிறது என்பது கேள்விக்குறியே! இவற்றில், டில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், லக்னோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டுமே, தமிழ்த்துறை இயங்கி வருகிறது.

எனினும், வளர்ச்சி நோக்கிய வகையில், அவற்றின் இயக்கம், செயல்பாடு, போற்றத்தக்கதாக இல்லை.அங்கு தான் அப்படி என்றால், திராவிட மொழிகளின் தோற்றுவாயான தென் மாநிலங்களின் பல்கலைக் கழகங்களில், இதை விட மோசமான நிலை தான் உள்ளது.

கேரள பல்கலைக்கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், ஆந்திரா பல்கலைக்கழகம், திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், குப்பம் திராவிட பல்கலைக்கழகம். பெங்களூரு பல்கலைக்கழகம், மைசூரு பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் போன்றவற்றிலும் தமிழ்த்துறை இயங்கி வந்தது. இப்போது, இவற்றில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில், தமிழ்த்துறை முறையாக இயங்கவே இல்லை.

பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. இது குறித்து சிந்திப்பதற்கும், இயங்குவதற்கு தேவையான நிதி மற்றும் உழைப்பை வழங்குவதற்கும், மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை.அந்த பல்கலைக் கழகங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கு, அறிவுறுத்துவதற்கு கற்றறிந்த அறிஞர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் நேரமில்லை.

குறிப்பாக, மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத, 1947ல் உருவாக்கப்பட்டு, பேராசிரியர்கள், சி.இலக்குவனார், அ.மு.பரமசிவானந்தம், டி.சிங்கரவேலு போன்ற மூத்த அறிஞர்கள் அலங்கரித்த, உஸ்மானியா பல்கலைக்கழக தமிழ்த்துறை, தற்போது முழுதாக இயங்கவில்லை.

மும்பை மற்றும் ஐதராபாத் பல்கலைக் கழகங்களிலும் இந்த நிலைமை தான். வட மாநிலங்களில் சரி, தமிழகத்தின் நிலை இன்னும் கீழானது. ‘பாரதிதாசன் தெருவில் தமிழ் தான் இல்லை’ என, கூறுவதை போல, இங்குள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில் பெயருக்கு தான், தமிழ்த்துறை இருக்கிறது. அவற்றின் செயல்பாடு முற்றிலும் முடங்கி இருப்பது ஆட்சியாளர்களின் பார்வைக்கு எட்டாமல் இருப்பது வியப்புக்குரியதே!

  • நன்றி
    தினமலர்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>