6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு!

6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு!

6-ம் வகுப்பு முதல் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு, 1992-ம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என்று பா.ஜனதா வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன்படி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, அமைக்கப்பட்டது.

அந்த குழு, தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்று ஒப்படைத்தது.

அந்த வரைவில், தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது, தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது ஆகியவற்றுடன் இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

484 பக்கம் கொண்ட அந்த புதிய வரைவில், மும்மொழி கொள்கை என்பது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களை, இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையால் இந்தி மொழியை திணிக்க முயற்சி நடப்பதாக புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.

இந்த கல்வி கொள்கைக்கான வரைவு குறித்து பொது மக்கள், ஜூன் 30-ந் தேதி வரை தங்கள் கருத்துக்களை nep.edu@nic.in என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கஸ்தூரி ரங்கன் குழுவின் சர்ச்சை பரிந்துரைகள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு, எந்த மொழியையும் கட்டாயமாக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து இருந்தது.

தற்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ரமேஷ் பொக்ரியாலுக்கு அக்னி பரீட்சையாக இந்த கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் இருக்கப் போகிறது. மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி உத்தரகாண்ட் முதல்வராக பதவி வகித்தவர்.

தற்போது மத்திய கல்வி அமைச்சராக பதவி ஏற்ற உடனேயே புதிய கல்வி கொள்கை பரிந்துரைகளை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகா, நீர்மேலாண்மை, அரசியல் ஆகியவை குறித்தும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறது கஸ்தூரி ரங்கன் குழு. இக்குழுவின் பரிந்துரைகள் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன. இருப்பினும் வரும் கல்வியாண்டிலேயே இந்த புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: