பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தக்கோரி கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அண்மையில் நிறைவடைந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளமும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியுள்ளன. அக்கட்சி தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில், 11 கட்சிகள் அடங்கிய குழு டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து முறையிட்டனர். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம், காங்கிரசின் அஜீத் சர்மா, பா.ஜ.,வின் ஜனக் ராம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஏற்கனவே பீஹார் சட்டசபையில் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமலர்