மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் 14567 அறிவிப்பு : நெல்லை எஸ்.பி. திட்டம் நாடு முழுவதும் விரிவடைகிறது!!!

மூத்த குடிமக்கள் பாதுகாப்பிற்காக நெல்லை மாநகர காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட ‘வேர்களை தேடி’ திட்டத்தை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கான முதல் இலவச உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்படும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு 2019ம் ஆண்டு இதே தினத்தில் வேர்களை தேடி என்று அழைக்கப்படும் முதியோர் பாதுகாப்பு திட்டத்தை நெல்லை காவல்துறை தொடங்கியது. அப்போதைய நெல்லை காவல் துணை ஆணையரான சரவணன், வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களை கணக்கெடுத்து உதவிக்கரம் நீட்டினார்.

வேர்களை தேடி என்ற புத்தகம் ஒன்றை முதியவர்களுக்கு வழங்கி அதில் இடம் பெற்றுள்ள விவரங்களை காவல்துறையினர் எடுத்து வைத்தனர்.அருகில் உள்ள காவல் நிலையத்தின் எண், காவல் கட்டுப்பாட்டு அறை எண் போன்ற விவரங்களை தெரிவித்தனர். மேலும் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தவும் வாசலில் இரும்பு கேட் பொருத்தவும் அறிவுரை வழங்கினர்.முதியவர்களின் செல்போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துக் கொடுத்தனர். முதியோர்களின் பாதுகாப்பிற்கு நெல்லை காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட முன்னோடி திட்டம் போன்று தற்போது நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச எண் 14567 அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் இலவச உதவி எண்ணை வெளியிட்டுள்ளது.இந்த எண் வழியாக மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் இலவசமாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண் வழியாக ஓய்வூதிய விஷயங்கள், சட்ட சந்தேகங்கள், உணர்வு பூர்வமான ஆதரவு, மருத்துவ அவசர உதவி போன்ற வழிகாட்டுதல்களை இலவசமாக பெற முடியும். தகவல்கள் மட்டுமின்றி முதியோருக்கு பிரச்சனைகள் இருந்தாலும் இந்த உதவி எண் மூலம் தெரிவிக்கமுடியும். இந்த இலவச உதவி எண் திட்டத்தை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு நாளை மறுநாள் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.தமிழகம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த இலவச உதவி எண் வசதி ஏற்கனவே அமலில் உள்ளது. 

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: