ஓ.பி.சி.க்கு 27% இடஒதுக்கீடு: மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இடஒதுக்கீடு செல்லும் என அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அகில இந்த ஒதுக்கீட்டில் மருத்துவ மாணவர்களுக்கு 27% ஓ.பி.சி இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி.க்கு 27 சதவீதம், உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு கடந்த ஜூலையில் வழங்கப்பட்டது. இதற்கு அனுமதியை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஆண்டு அக்டோபரில் நடக்கவிருந்த முதுநிலை மருத்துவ கவுன்சில் நிறுத்தி வைக்கப்பட்டது. உயர்சாதி ஏழைகளுக்கான வருமான வரம்பு எதன் அடிப்படையில் 8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது என்பது உட்பட சரமாரி கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டிருந்த நிலையில் தற்போது மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது. உயர்சாதி ஏழையினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக மார்ச் 3வது வாரம் விரிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குகிறது.

மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடும், ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு பிறப்பித்த ஓ.பி.சி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு செல்லும் என்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு 2020ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ளது. அதனை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தற்போது இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: