1. திராவிடர்கள் யார்?
பதில் – திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள்.
2. திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா?
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
பதில் – பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அது வரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த “திராவிடர்” என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியும் எழுதினார். அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால் முன் காலத்தில் இருந்து மூன்று தெலுங்கு நாடுகளைத் தான் திரிவடுகம் என்றும், திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள். திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம். அவரைப் பின்பற்றித் தமிழர்கள் என்று குறிப்பிடதற்குத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் தவறாகும். தமிழன் தன்னைத் திராவிடன் அதாவது திரிவடுகன் அல்லது தெலுங்கன் என்று சொல்வது இழிவாகும். திராவிடன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. வடவர்கள் தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.
3. திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா?
பதில் – எந்தத் தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய கால்டுவெல் என்கிற வெள்ளைக்காரர் வட மொழியியிலிருந்துதான் திராவிடம் என்ற சொல்லைக் கண்டு பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.
4. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை திராவிடநற்றிரு நாடு என்று குறிப்பிட்டு இருக்கிறாரே?
பதில் – தெலுங்கர்களைக் குறிக்கும் “திராவிடம்” என்ற சொல்லைத் தான் நான் கையாண்டேன் என்று கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர் எழுதியுள்ளார். அதற்குப் பிறகு சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்.
5. இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள திராவிட நாட்டைத் தாங்கள் மறுப்பது ஏன்?
பதில் – தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடன், திராவிட நாடு என்ற சொற்களே இல்லை. மிக அண்மைக் காலத்தில் அந்நியர்களால் எழுதப்பட்ட நூல்களில் தான் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது.
6. தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால் இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி ஒன்றுபடக் கூடாது?
பதில் – கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன் தோன்றிய இனம் தமிழினம். தமிழ் மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி.
எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா?. ஒரு மொழி ஒரு நாடு என்பது தான் உலக நியதி.
சி. பா. ஆதித்தனார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் :
சி. பா. ஆதித்தனார் (1905 – 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர், தமிழ் நாடு சட்டப் பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத் துறையில் கல்வி கற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப் பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் “நாம் தமிழர்” என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கிய போது தனது கட்சியின் செயற்பாட்டை இடை நிறுத்தினார்.
இளமைக் காலம் :
ஆதித்தனாரின் தந்தையார் பெயர் சிவந்தி ஆதித்தர். தாயார் கனகம் அம்மையார். தந்தையார் ஒரு வழக்கறிஞர். மிகவும் வசதியான குடும்பம் அவர்களுடையது. தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும் போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், செய்திகள் முதலியவற்றை எழுதிப் பணம் சம்பாதித்ததாக அவரே எழுதியுள்ளார். இலண்டனில் இருந்த படியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளி வந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.
1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.
பத்திரிகைப் பணி :
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில், தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளி வந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழி வகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.
சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்ற போது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக் கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.
அரசியலில் ஆதித்தனார் :
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கி, பலவேறு போராட்டங்களிலும் பங்கு பற்றியுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறையும் சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டு வரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப் பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார். இவர் தனது 76ஆம் வயதில், 1981ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.
Pingback: Salairaja