வளர்தமிழ் நூலாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்!

வளர்தமிழ் நூலாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்!

வளர்தமிழ் நூலாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்!

சிலப்பதிகாரத்தை சிறப்பிக்கும் வகையில் “நெஞ்சையுள்ளும் சிலப்பதிகாரம் எனும் மணியாரம்” என்று பாடியவர் தமிழ்க்கவி சுப்பிரமணிய பாரதியார்.

அதற்கு முன்னர் அவருக்கு சிலப்பதிகாரம் குறித்து தெளிவு பிறக்கவில்லை. 1912ஆம் ஆண்டு சிலப்பதிகாரத்தில் கற்றுத் தெளிந்த தமிழறிஞர் ஒருவரை சந்தித்தார். “ஐயா, சிலப்பதிகாரத்தில் எனக்கு சில ஐயங்கள் ஏற்பட்டுள்ள படியால் அதை தாங்கள் தான் போக்க வேண்டும்.” என்றார். அந்தத் தமிழறிஞருக்கு வந்தவர் பாரதியார் என்பது தெரியாது. மிழறிஞரோ தலைப்பாகையோடு இல்லம் வந்தவரை வரவேற்று இருக்கையில் அமரும் படி வேண்டினார். குருவிற்கு முன் சீடன் அமர்வது முறையல்ல என்று கூறிவிட்டு தனக்கு சிலப்பதிகாரத்தில் ஏற்பட்ட ஐயங்களை எழுப்பினார் பாரதியார்.

எல்லாவற்றுக்கும் தெளிந்த பதில் கிடைத்ததை எண்ணி இன்புற்று மகிழ்ந்த பாரதியார் “பராசக்தி அருள் செய்வாள்” என்று கூறிவிட்டு விடை பெற்றார். பின்னர் தலைப்பாகையோடு வந்து போனவர் பாரதியார் என்பதை தன் இளவல் மூலம் அறிந்து கொண்டார் அந்தத் தமிழறிஞர். அவர் வேறுயாருமல்ல; அனைவராலும் பாரட்டப் பெற்ற “சிலப்பதிகாரம்” நூல் எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தான்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் (ஏப்ரல் 2, 1884 – மார்ச் 28, 1944) 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர்.

இவர் தஞ்சைக்கு அருகில் உள்ள நடுக்காவேரி ஊரில் வீ.முத்துச்சாமி நாட்டார்- தைலம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு சிவப்பிரகாசம் என்று பெயரிட்டனர். இளம் வயதில் தொடையின் மேற்புறத்தில் கட்டி வந்து துன்பப்பட்டு வந்தார். இதைக் காணப் பொறாத பெற்றோர் வெங்கடேசப் பெருமாளிடம் முடி நேர்த்திக் கடன் செய்வதாக வேண்டிக் கொண்டனர். பின்னர் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் வேங்கடசாமி என்று பெயர் மாற்றப்பட்டது.

நான்காம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளியில் படித்து வந்த வேங்கடசாமி தன் தந்தையார் மூலம் பல தமிழ் நூல்களைக் கற்றுக் கொண்டார். சாவித்திரி வெண்பா நூலாசிரியர் சாமிநாதன் முதலியார் வழிகாட்டுதலில், தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களில் புலமை பெற்று விளங்கினார். 1905இல் வேங்கடசாமி அவர்கள் நான்காம் தமிழ்ச் சங்கம் என்று அழைக்கப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்தார். அந்த தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கல்வியில் பண்டிதர் தேர்ச்சி பெற மூன்று அடுக்குகள் இருந்தன. அவை முறையே பிரேவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்பனவாகும். ஒவ்வொரு படிப்பும் இரண்டு ஆண்டுகள் வீதம் மொத்தம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டும். ஆனால் வேங்கடசாமி அவர்களோ கற்றல் திறன் மிகுதி காரணமாக முழுப் படிப்பையும் மூன்று ஆண்டுகளுக்குள் முடித்தார். பால பண்டிதர் தேர்வில் முதல் மாணவராகவும், பண்டிதர் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவராகவும் தேர்ச்சி பெற்றார். இருபது வயதில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்ப் புலமையில் சிறப்புற்று விளங்கிய வேங்கடசாமியை தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரையார் வியந்து பாராட்டியதோடு தங்கத்தோடா (தங்கக் காப்பு) அணிவித்து சிறப்பித்தார்.

தமிழ்ச் சங்கத் தேர்வில் முதலிடம் பிடித்த வேங்கடசாமிக்கு பல்வேறு பள்ளிகளிலிருந்து தமிழாசிரியர் பணியாற்ற வருமாறு அழைப்புகள் விடுத்தன. 1908இல் திருச்சி பி.ஜி. கல்லூரியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு 25 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது இலக்கிய ஆராய்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். 1915இல் மு.இராகவையங்கார் எழுதிய “வேளிர் வரலாறு” நூலூக்கு மறுப்பாக அதே பெயரில் நூலெழுதி வெளியிட்டார். நக்கீரர் (1919), கபிலர் (1921) ,கள்ளர் சரித்திரம் (1923), கண்ணகியின் கற்பும் மாண்பும் (1924) , சோழர் சரித்திரம் ஆகியவை அவரின் கைவண்ணத்தில் உருவான ஆராய்ச்சி நூல்களாகும். இவற்றுள் “கள்ளர் சரித்திரம்” நூலைப் படித்த உ.வே.சா. கலாசாலை மாணவர்களுக்கு பாட நூலாக வைப்பதற்கு தகுதியான நூல் இதுவென்று பாராட்டினார்.

தமிழ் இலக்கியங்களின் பால் தமிழ் மக்கள் ஈடுபாடு கொள்வதற்கு உரையெழுதுவதே மிகச் சிறந்த வழியென்பதை கண்டுணர்ந்தார். 1925இல் இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, ஆகிய நூல்களுக்கு உரையெழுதி பேரும் புகழும் அடைந்தார். தமிழறிஞர்கள் பலர் இவரை ந.மு.வே. என்றும், நாட்டார் என்றும் அன்போடு அழைத்தனர்.

1933இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். நாட்டார் எழுதுவதோடு மட்டுமல்ல, பேச்சாற்றலிலும் தலை சிறந்து விளங்கினார். இவரின் சொற் பொழிவைக் கேட்பதற்கு தமிழ் உணர்வாளர்கள் நீண்ட தொலைவுகளில் இருந்து கால் கடுக்க நடந்தே வந்து கேட்டு மகிழ்வார்கள். இவரின் நாவன்மையை போற்றும் வகையில் 1940இல் சென்னை மாநிலத் தமிழர் சங்கம் இவருக்கு ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

நாட்டார் தாய் மொழிப் பற்றின் தேவை குறித்து எங்கும் எவ்விடத்திலும் பேசத் தயங்க மாட்டார். அவர் கூறுகிறார்:

“மக்கள் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாத சாதனமாயிருப்பது மொழி என்பதே. மொழியே மக்களை மாக்களினின்று வேறு படுத்துவதாகும். இப்பொழுது உலக மக்களால் எண்ணற்ற மொழிகள் பேசப்படுகின்றன. எம்மொழி எவ்வினத்தவரால் வழி வழியாகப் பேசப்படுகின்றதோ அம்மொழி அவ்வினத்தவருக்குத் தாய்மொழி என்று சொல்லப்படும். “காக்கைக்குந் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பது போல் ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி மதிப்பிற்குரியதே. தாய்மொழியிடத்துப் பற்றில்லாதவரும் மக்கள் எனத் தகுவரோ?”

அதுபோல் தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்கள் கலந்தெழுதுவதை வன்மையாக கண்டித்தார். புதிய தமிழ்ச் சொற்கள் கண்டுபிடிக்கும் வரையிலும் பிறமொழிச் சொற்களை பயன்படுத்துவதில் தவறில்லை என்ற போதிலும் தமிழ் ஒலிவடிவத்திற்கேற்ப தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். கல்வியில் சிறந்த கம்பனும் இலக்குவன், வீடணன், தயரதன் என்றே தமிழ் ஒலிக்கேற்ற முறையில் அழைத்து வந்தார் என்றும், கிறித்துவ வேதத்தை மொழி பெயர்த்தோரும் கூட இயேசு, யோவான், யாக்கோபு என்றே தமிழைத் திரியாமல் அழைத்து வந்ததாகவும் எடுத்து இயம்பினார்.

பெயருக்குப் பின்னால் எழுதப்படும் சாதிப் பெயர்கள் இடைக் காலத்தில் வந்ததே தவிர, சங்க காலத்தில் வந்ததல்ல என்பதை தமது தமிழ் உரைகள் நூலில் தெளிவுபடுத்தினார். அவை பின்வருமாறு:

“இப்பொழுது வழங்குவது போல ஐயர், ஐயங்கார், நாயுடு, செட்டி, பிள்ளை, முதலியார் என்னும் பட்டப் பெயர்களாவது, கள்ளர் வகுப்பினர் முதலானோர்பால் காணப்படும் அளவற்ற பட்டப் பெயர்களாவது சங்க நாளில் வழங்கவில்லை. அவையெல்லாம் இடைக் காலத்தில் தோன்றியவையே. ஐயர் என்பது முனிவர் அல்லது பெரியாருக்கே சிறப்பாய் வழங்கியது. கண்ணப்பர், நந்தனார் முதலிய வேறுகுலத்துப் பெரியார்களையும் சிறப்புப் பற்றி ஐயர் என ஆன்றோர் வழங்கியிருக்கின்றனர். சிறப்புப் பெயர் வருங்காலும், சிறப்பினவாகிய பெயர் நிலைக் கிளவிக்கும் இயற்பெயர் கிளவி முப்படக்கிளவார் என்ற விதிப்படி, அமரமுனிவன், அகத்தியன், தெய்வப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் என்றார் போல இயற்பெயருக்கு முன் வருதலே மரபு. பிற்காலத்திற்தான் பெயர்கள் இம்முறை மாறி, வரலாயின. சிறப்புப் பெயரும் முன்பு யாவருக்கும் வழங்குவன அல்ல. எனவே பண்டை மக்கள் தம்மை வேறுபடுத்திக் காட்ட பெரிதும் விரும்பவில்லை என்பது போதரும்”.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஓய்வுபெற்ற பிறகு தஞ்சை மண்ணில் தங்கி வாழ்ந்த நாட்டார் அவர்களை தமிழவேள் த.வே.உமா மகேசுவரனார் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பணியாற்றும் படி கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்டு ஊதியம் பெறாமலே முதல்வராகி தமிழுக்கு தொண்டாற்றினார். அவர் வாழ்வின் இறுதிக் காலத்திலும் கூட உரையெழுதுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. சிலப்பதிகார உரையும், மணிமேகலை உரையும் எழுதி வெளியிட்டதால் “உரைவேந்தர்” என்ற பெயர் அவருக்கு வழங்கப்பட்டது.

நாட்டார் தமது அறுபதாம் அகவையில் மணி விழா கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில் 28.3.1944 இல் காலமானார். தமிழறிஞர் கா.நமச்சிவாயம் அவர்களும் மணிவிழா ஏற்பாடு செய்யப்பட்ட காலத்தில் தான் காலமானார் என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

தஞ்சையிலோ, திருச்சியிலோ தமிழ்ப் பல்கலைக்கழகம் அமையப் பெற வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் கனவாகும். அவரின் கனவு 37ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியது.1981இல் தஞ்சைப் பல்கலைக் கழகமும் , 1992இல் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியும் நிறுவப்பட்டது.

தற்போது இந்துத்துவ வரலாற்று ஆய்வாளர்கள் பலர் இன்றைக்கும் ஆரிய மொழியான சமசுகிருதத்திலிருந்து தான் தமிழ்மொழி தோன்றியதாக பொய்க் கதைகளைக் கூறி பொய்மை இந்தியாவை கட்டி எழுப்ப முயன்று வருகின்றனர். ஆனால் இது உண்மையல்ல என்பதை அன்றைக்கே நாவலர் வெளிப்படுத்தினார்.

“பரத கண்டத்து வழங்கும் மொழிகளுக்குள்ளே தென்மொழி என்றும், வடமொழி என்றும் திசைப்பெயரெடுத்து எதிர் நின்று வழங்கப் பெறுவன தமிழும் ஆரியமுமே யன்றோ? தமிழின் தனித் தன்மையையோ, உயர்வையோ கூறப்புகின், அது மற்றொன்றை வெறுப்பதோ, இழிவுபடுத்துவதோ ஆகுமெனச் சிலர் கருதுகின்றனர். அத்தகைய மனப்பான்மையினர் இவ்வவையின் கண் இரார் என எண்ணுகிறேன். எல்லா மொழிக்கும் ஆரியமே தாயாகுமென்றும் , அம்முறையே தமிழும் ஆரியத்தினின்றே தோன்றியதாகுமென்றும் கொள்ளும் ஆராய்ந்து துணியாத கொள்கையினை யுடையார் சிலர் அந்நாளின் முன்பு தொட்டு இருந்து வருகின்றனர். மொழியராய்ச்சி யென்பது புதிய கலை முறைகளில் ஒன்றாகி உண்மையை விளக்கி வருகின்ற இந்நாளில் அக்கொள்கை அருகிவிட்டதென்பதில் ஐயமில்லை எனினும், அக்கொள்கை அறவே ஒழியுமாறு தமிழின் சிறப்பியல்புகளை உள்ளவாறு எடுத்துக் காட்டித் தெருட்டுதல் நம்மனோர் கடன்.”

தமிழகத்தில் ஆரியத்தை கால்பதிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது தமிழ் மொழியின் தனித் தன்மை தான். ந.மு.வே. கூறியதைப் போல நம்மொழியின் சிறப்பினைக் கூறுவதையே ஒவ்வொரு தமிழரும் தமது வாழ்வின் கடனாகக் கொள்ள வேண்டும். இது ஒன்றே இந்நாளில் வேங்கடசாமி நாட்டாருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: