வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி அருகே வரலாற்றுக் கோயில் மண்ணுக்குள் புதையும் அவலம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி அருகே வரலாற்றுக் கோயில் மண்ணுக்குள் புதையும் அவலம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி அருகே வரலாற்றுக் கோயில் மண்ணுக்குள் புதையும் அவலம்!

நாட்றம்பள்ளி:

புதிய கோயிலை கட்டுவதை காட்டிலும் பழமையான சிதிலமடைந்து வரும் கோயில்களை புனரமைத்து வழிபாட்டுக்கு கொண்டு வருவதே நன்மை தரும். அதைவிட, தான் கடந்து வந்த பாதையை மறக்கும் நாடு, எத்தனை முன்னேற்றம் கண்டும் பலனில்லை என்பது அறிஞர்களின் கருத்து.

இந்திய நாட்டை பொறுத்தவரை தனக்கான முறையான வரலாற்று ஏடுகளை கொண்டிருக்கவில்லை. அதன் மத்திய கால வரலாற்றில் இருந்துதான் முறையான தகவல்களை கொண்டுள்ளது. அதன் பழங்கால வரலாற்று பக்கங்களை தேட நம்மிடம் இருப்பது இதிகாசங்கள், புராணங்கள், பழம்பெரும் இலக்கியங்கள், கோயில்கள், கல்வெட்டுக்கள், நினைவு சின்னங்கள் ஆகியவையே. மற்றபடி முறையான காஷ்மீர வரலாற்றை ராஜதரங்கிணி என்ற நூல் மட்டுமே சில நூற்றாண்டுகளின் பதிவுகளை கொண்டுள்ளது. இதை தவிர மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா, இலங்கையின் மகா வம்சம், தீபவம்சம், கிரேக்க, ரோமானிய, சீன வரலாற்று ஏடுகள், அரேபிய, பாரசீக இலக்கியங்கள், வரலாற்று ஆவணங்கள், மார்க்கோபோலோ, பாஹியான், யுவான் சுவாங் போன்றோரின் பயண குறிப்புகள் ஆகியவையும் நமது பழங்கால வரலாற்று குறிப்புகளை கொண்டுள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


இதில் நம் கண்முன் உள்ள வரலாற்று சின்னங்களையே புதை குழிக்குள் அனுப்பி நமது முந்தைய வரலாற்றை தெரிந்தே தொலைக்கும் வேலையை செய்து வருகிறோம். அந்த வகையில் பிற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டதாக கூறப்படும் பழமையான சிவன் கோயில் ஒன்று தனது முகவரியை தொலைத்து முட்புதர்களின் நடுவில் பரிதாபகரமாக காட்சி அளித்துக் கொண்டுள்ளது. இக்கோயில் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சந்திரபுரம் ஊராட்சி பாரண்டப்பள்ளி விருபாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. கோயில் மூலவரின் பெயர் விருபாட்சீஸ்வரர் என்று அதுதொடர்பான விசாரணையில் தகவல் கிடைத்தது. நுண்ணிய சிற்பங்கள் அடங்கிய தூண்களுடன் கூடிய கோயில் அர்த்த மண்டபம், கருவறை மற்றும் கருவறை விமானம் ஆகியவை மட்டுமே இது ஆயிரம் ஆண்டுகள் பழமையை கொண்டுள்ளது என்பதை தெரிவிக்கிறது. அக்காலத்தில் இது அம்மன் சன்னதி, பரிவார தெய்வங்களின் சன்னதிகள் அடங்கிய பெரிய கோயிலாக இருந்திருக்க வேண்டும் என்பது கோயில் அருகில் ஆங்காங்கே சிதறி கிடக்கும் உடைந்த சிலைகள், சிற்பங்கள் அடங்கிய கற்பலகைகள் பறைசாற்றுகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கோயிலில் மூலவருக்கு ஊரை சேர்ந்த சிலர் வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர்.

அதன் பின்னர் யாரோ கருவறையில் மூலவரான சிவலிங்கத்தின் கீழ் புதையல் இருக்கலாம் என்று கிளப்பி விட்ட வதந்தியால் சிலையையும், நந்திகேஸ்வரர் சிலையையும், பலி பீடத்தையும் பெயர்த்துள்ளனர். பின்னர் புதையல் ஏதும் கிடைக்காமல் போகவே தோண்டியெடுக்கப்பட்ட சிலைகளை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். சில ஆண்டுகள் முன்பு வரை பெயர்த்தெடுக்கப்பட்ட சிவலிங்கமும், நந்தி பகவான் சிலையும் கோயிலில் ஒரு மூலையில் கிடக்க அதை யாரோ சிலர் திருடிச் சென்றுள்ளனர். தற்போது கருவறை மூலவர் இல்லாத நிலையில் வெறும் கருவறை மட்டுமே பரிதாப நிலையில் காட்சி அளிக்கிறது. அரிய வகை சிற்பங்கள் அடங்கிய அர்த்தமண்டப தூண்கள் ஒவ்வொன்றிலும் சிவனை வழிபடும் பார்வதி, விநாயகர், ஆஞ்சநேயர், பிரம்மா, விஷ்ணுவின் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. இதுதவிர கோயிலை சுற்றி 100 அடி மற்றும் 200 அடி தொலைவில் அம்மன் சிலைகள் காணப்படுகின்றன மற்றும் வடமேற்கு திசையில் 500 அடி தொலைவில் சிவன், பார்வதி சிலைகளும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

தற்போது இருக்கும் கோயில் கட்டமைப்பும் படிப்படியாக செடி, கொடிகள் முளைத்து சிதைந்து வருகிறது. அதேபோல் கோயில் முன்புள்ள தீர்த்த குளமும் தூர்ந்து போயுள்ளது. இந்த குளத்துக்கு அப்பகுதி மலைகளில் இருந்து வரும் சிற்றோடைகள் நீராதாரமாக விளங்கி வந்தன. இந்த குளமும் தற்போது தூர்ந்து போயுள்ளது. இந்நிலையில், கதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிவ பக்தர் மணி என்பவர் கோயிலை புதுப்பித்து வழிபாட்டுக்கு கொண்டு வருவதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள மக்கள் கோயில் அருகில் விவசாய நிலத்தில் அம்மன் சிலை ஒன்று உள்ளதாக தெரிவித்துள்ளனர். சிலையை பார்த்த மணி, அது முற்றிலும் சிதைந்துள்ள சிலையாக காணப்படவே அதுபற்றி கலெக்டர் ராமன், தாசில்தார் சச்சிதானந்தம் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் நாட்றம்பள்ளி வருவாய்த்துறையினர் விருபாட்சிபுரம் கிராமத்துக்கு விரைந்து வந்து சிலையை பார்த்த போது அது பழமையான மூதேவி சிலை என்பது தெரிய வந்தது. இந்த சிலையின் அமைப்பை வைத்து பார்க்கும்போதுதான் அது பிற்கால சோழர்கள் ஆட்சியின் காலத்தை கூறியது.

இச்சிலையை அப்பகுதிமக்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதையடுத்து தாசில்தார் சச்சிதானந்தம் சிலையை கைப்பற்றி நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார்.மேலும் இதுகுறித்து மாநில தொல்லியல் துறைக்கும், அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணனுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த சிவன் கோயிலை புதுப்பித்து மீண்டும் பக்தர்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கிருந்த சிவலிங்கமும், இன்ன பிற சிலைகளும் சிலை கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். அதனால் சென்னையில் சிலை கடத்தல்காரர்களிடம் கைப்பற்றப்பட்ட சிலைகளில் இக்கோயில் சிலைகளும் இருக்கலாம். அந்த சிலைகளை மீண்டும் இங்கு நிறுவி, கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதற்காக ஊர் மக்கள் சார்பிலும் நிதியை திரட்டலாம்’ என்றனர். எப்படியோ, புதைந்து போகும் விருபாட்சிபுரம் வரலாற்று சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எல்லோரது கோரிக்கையும் கூட.

தென்னகத்தில் சோழ பேரரசின் எல்லை:

வடக்கில் வடபெண்ணை தொடங்கி தெற்கில் இலங்கை மத்திய மாகாணம் வரையிலும், கிழக்கு மற்றும் வடகிழக்கில் இந்தோனேசியா, பர்மா தொடங்கி மேற்கில் மாலத்தீவுகள், லட்சத்தீவுகள் வரை பிற்கால சோழ பேரரசின் எல்லை விரிவடைந்து இருந்தது. இவர்கள் காலத்தில் குடகு தொடங்கி காவிரி கடலில் கலக்கும் காவிரி பூம்பட்டினம் வரை காவிரியின் இருகரைகளிலும் சிவாலயங்கள் கட்டியெழுப்பப்பட்டன. அதேபோல் பெங்களூரு அல்சூரில் சோமநாதீஸ்வரர் உட்பட அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட கீழை மற்றும் மேலை சாளுக்கிய தேசங்கள், கங்க நாடு, குடகு பகுதிகளிலும் ஏராளமான சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு சிறந்த சான்றாக சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலும், வேப்பஞ்சேரி லஷ்மி நாராயண சுவாமி கோயிலும் குலோத்துங்கன் ஆட்சியில் கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குப்பம், பல்லவனேரி என்ற பலமநேர், புங்கனூர், முல்பாகல் விருபாட்சிபுரம் ஆகிய இடங்களிலும் சோழரின் பெருமையை பறைசாற்றும் கோயில்கள் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: