வீரப்பன் இருந்திருந்தால், காவிரி தண்ணீர் வந்திருக்கும்! – சிவசுப்பிரமணியம் பேட்டி!

வீரப்பன் இருந்திருந்தால், காவிரி தண்ணீர் வந்திருக்கும்! - சிவசுப்பிரமணியம் பேட்டி!

வீரப்பன் இருந்திருந்தால், காவிரி தண்ணீர் வந்திருக்கும்! – சிவசுப்பிரமணியம் பேட்டி!

மூன்று மாநிலக் காவல் துறையினரும் அதிரடிப் படையினரும் காட்டுக்குள் சல்லடைப் போட்டுத் தேடியும் நெருங்க முடியாத வீரப்பனை, நேரில் சந்தித்து ஊடக வலிமையை உலகறியச் செய்தவர் நக்கீரன் செய்தியாளர் சிவசுப்பிரமணியம். வீரப்பனைப் பற்றி பல்வேறு தகவல்கள் உலவிய நிலையில், ‘இவர் தான் வீரப்பன்’ என்று சிவசுப்பிரமணியம் எடுத்த படங்களும் பேட்டியும் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் படிக்க வேண்டிய பாடங்கள். ‘நக்கீரன்’ இதழில் 25 ஆண்டுகளாகச் செய்தியாளராக இருந்தவர், சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார். அவருடனான ஒரு சந்திப்பிலிருந்து…

வீரப்பன், காட்டில் ரகசியமாகப் புதைத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் புதையல் குறித்து..?

வீரப்பனின் தோழனான சேத்துக்குளி கோவிந்தன் பணம் புதைத்து வைத்த இடத்தை வீரப்பனாலேயே அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. பரந்து விரிந்து கிடக்கும் பெருங்காட்டில், அந்த மாதிரியான இடத்தை மற்றவர்கள் கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால், பண மதிப் பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, வீரப்பன் காட்டில் இருந்த புதையல் என்பது வெறும் காகிதம் ஆகிவிட்டது.

வீரப்பனுக்குப் பறவைகளின் மொழியைப் புரிந்து கொள்ளுதல் உட்பட காடு குறித்த இயற்கை அறிவு அதிகம் என்பார்கள். அதை விளக்க முடியுமா?

வீரப்பனுக்கு மட்டுமல்ல… அந்தக் காடுகளில் வாழும் பலருக்கும் இந்த ஆற்றல் உண்டு. வேட்டைக்காரர்கள், பழங்குடி மக்கள், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வனத்துறை அலுவலர்கள் பலருக்கும்கூட காட்டில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளின் மொழி தெரியும். கவுதாரி, கொக்கு, புறா போன்ற பறவைகளைப் போலவும் பன்றி, மான், கடமான், காட்டெருமை போன்ற விலங்குகளைப்போலவும் குரல் எழுப்பி அவற்றை வரவழைத்து வேட்டையாடும் வழக்கம் வேட்டைக்காரர்களிடம் உள்ளது. ஒரு பறவை அல்லது விலங்கு கத்தும்போதும், பறந்து போகும்போதும், இது உணவுக்காகப் போகிறதா? விலங்குகளைப் பார்த்து பயந்து போகிறதா? மனிதர்களைப் பார்த்து பயந்து போகிறதா? என்பதைக் கண்டறியக் கூடியவர்கள் பலர் உள்ளனர்.

தவிர, வனத்தில் வசிக்கும் மக்களுக்கு காது கேட்கும் திறன், கண்ணால் பார்க்கும் திறன், மூக்கால் நுகரும் திறன் என எல்லாவற்றிலுமே நகர்ப்புற மனிதனைவிட தனித்திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். இதிலெல்லாம், வீரப்பன் கூடுதல் திறன் கொண்டவர் என்பது உண்மைதான்!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: