“சமூக சீர்திருத்தப் போராளி” வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!

“சமூக சீர்திருத்தப் போராளி” வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!

சங்க காலத்தில் தமிழ்க் கடவுளாகிய முருகக் கடவுளை முன்வைத்து திருமுருகாற்றுப் படை எழுதப்பட்டது. அதற்குப் பிறகு முருகன் வழிபாடு கி.பி. 15ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்றது. தமிழகத்தில் விசயநகர ஆட்சி காலூன்றிய போது, தமிழர்களின் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றை மீட்டெடுக்க அருணகிரிநாதர் தோன்றினார். அவர் சந்தப் பாடல்கள் மூலம் முருக வழிபாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் மீண்டும் உயிரூட்டினார்.

அவருக்குப் பின்னர் தோன்றிய குமரகுருபரர், சிவப்பிரகாசர், தண்டபாணி சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார் ஆகியோர் முருகக்கடவுள் மீதும், தமிழின் மீதும் கட்டுண்டு பல்லாயிரம் பாடல்கள் இயற்றி, தமிழகத்தில் முருக வழிபாட்டையும், தமிழ் மொழியையும் மங்காது காத்து நின்றனர்.

இவர்களுள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடல்களை இயற்றிய பெருமை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி மறைந்த தண்டபாணி சுவாமிகளுக்கே உண்டு. இவர் முருகன் மீது கொண்ட பக்தியைவிடத் தமிழின் மீது கொண்ட பக்தி அதிகம். இவரை தமிழ் வெறியர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குப் பின்வரும் பாடல் ஒன்றேபோதும்.

“மதுரத் தமிழை இகழ் தீயோர்
மணி நா அறுத்துக் கனலில் இட”

தண்டபாணி சுவாமிகள் (1839 – 1898) தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். பலவிதச் சிறப்புகளுக்கு உரியவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்றும் “திருப்புகழ்ச் சுவாமிகள்” என்று அழைக்கப்பட்டவர்.

சங்கரலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தண்டபாணி சுவாமிகள் திருநெல்வேலியில் செந்தில்நாயகம் பிள்ளை – பேச்சிமுத்து தம்பதியருக்கு 1839 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தையின் நண்பரான சீதாராம நாயுடு என்பவரால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமைப் பெற்றார்.

ஐந்து அகவையில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது ஆசிரியர் சீதாராம நாயுடு அவர்கள் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை கற்றுக் கொடுத்தார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார். தமது ஒன்பதாம் அகவையில் சங்கரலிங்கம் தென்காசியில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்த போதே, பாடல் இயற்றும் திறமை அவருக்குள் ஊற்றெடுத்து கிளம்பியது.

ஒரு நாள் சுரண்டை என்ற ஊருக்கு அருகில் உள்ள சித்திரா நதிக்கரைக்கரையில் அமைந்த அம்மன் “பூமி காத்தாள்” எனும் தேவியைப் போற்றி ஒரு வெண்பா பாடி முதல் சுழி போட்டார். “பூமி காத்தாள்” என்ற அம்மனுக்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்ற காரணத்தைக் கூறி, பாடுதற்கு அரிய வெண்பாவில் அதைப் பாடினார். கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராம நாயுடு இவருக்கு “ஓயா மாரி” என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். சங்கரலிங்கம், முருகனின் அடியவர் ஆனார். முருகன் புகழ் பாடினார். ஆகவே இவர் “முருகதாசர்” என்று அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் “திருப்புகழ்ச் சுவாமிகள்” என்றும் சிறப்பிக்கப்பட்டார்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டார். இடுப்பில் கல்லாடை அணிந்துகொண்டார். கையில் தண்டாயுதம் ஏந்திக் கொண்டார். இந்தக் கோலத்தில் விளங்கிய இவரை மக்கள் “தண்டபாணி சுவாமிகள்” என்று போற்றினார்கள். அகப்பொருளின் துறைகளை அமைத்துச் சந்த யாப்பில் “வண்ணம்” என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் வண்ணச்சரபம் என்றும் அழைக்கப்பட்டார். அவிநாசி முதல் வேளூர் வரையிலான 218 ஊர்களுக்கும், கேரளம் மற்றும் இலங்கைக்கும் இவர் சென்றுள்ளார்.

 • குருபர தத்துவம் என்ற பெயரில் தன் வரலாற்று நூலை எழுதினார். இது 1,240 விருத்தப்பாக்களால் ஆனது.
 • புலவர் புராணம் என்ற பெயரில் 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாகும்.
 • அருணகிரிநாதர் புராணம் என்ற பெயரில் அருணகிரிநாதர் வரலாற்றை எழுதினார்.
 • வைணவப் பெரியார்களான பெரியாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள் முதலியவர்களை உயர்வாகப் பாடியுள்ளார். பழந்தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஒளவையாரையும், திருவள்ளுவரையும் பலவாறு போற்றியுள்ளார்.
 • தமிழ்ச்சொல் “புகல்” என்பது இந்தியில் “போல்” என்று மருவிவிட்டது என்றார். அதை, “புகல் எனும் சொல்லினைப் போல் எனச் சொல்லுதல் போல்இகல் இந்துத்தானியும் பலசொல செந்தமிழிற் கொண்டு இயம்புகின்றார்” என்று பாடினார்.
 • எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற தமிழின் ஐந்திலக்கணத்தை விட புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார்.
 • சிற்றிலக்கியங்களில் முன்னிலை நாட்டம், மஞ்சரி, ஆயிரம், முறைமை, விஜயம், நூல், சூத்திரம் என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கினார்.
 • இல்லறத்தை மேன்மையுடையது என்றார். பெண்மையை உயர்த்திக் கூறி, பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த இவர், பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி மறுப்பவர்களை, “நாரியரும் கற்கை நலம் என்று உரைக்குநரைப் பாரில் இகழ்வார் பலர்” என்று கூறி மனம் வருந்தினார்.

தமிழைத் துதிக்கும் பின்வரும் நூல்கள் இயற்றினார்:

 • முத்தமிழ்ப் பாமாலை
 • தமிழ்த் துதிப் பதிகம்
 • தமிழலங்காரம்

இவற்றோடு, முசுகுந்த நாடகம், இசைக் கீர்த்தனைகளையும் படைத்தார். திருக்குறளின் அடியொற்றி வருக்கக் குறள் என்ற நூலை உருவாக்கினார். சத்தியவாசகம் என்ற உரைநடைச் சுவடியை எழுதினார்.

தண்டபாணி சுவாமிகளின் இறைமைக் கொள்கை என்பது சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டதாகும். பிரித்தானிய வல்லாதிக்க எதிர்ப்பு, தமிழ்மொழிக் காப்பு, பெண்ணுரிமை என்று பல்வேறு தளங்களில் முற்போக்குச் சிந்தனையோடு பாடல்கள் தீட்டியது பலரும் அறிந்து கொள்ள வேண்டிய முதன்மை செய்தியாகும்.

பிரித்தானியர் ஆட்சி தமிழக மக்களுக்கு அநீதி இழைத்து வருவதைக் கண்டித்து மிகத் துணிச்சலாக “ஆங்கிலியர் அந்தாதி” பாடினார்.

“அநீதி பல புரிந்து கடிநாய்க்கும் தீர்வைப்
பனங்கொள்ளும் வஞ்சகக் கயவர்”

“அவர் குடி முழுதும் மாய்ப் பவரே
எமது குலதெய்வம்”

அடுத்து, தமிழ்மொழியை கடவுளுக்கும் மேலாக கருதிய சுவாமிகள் தமிழ் அறியாத தெய்வத்தைத் தாழ்ந்த தெய்வம் என்றும் குறிப்பிட்டார்.

“தமிழ்ச்சுவை அறியாத்தெய்வம் உளதுஎனில்
அஃது உணர் அவகையில் தாழ்வு எனல் அறமே”

பொருள்: தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் ஒன்று உண்டு என்றால், அது தமிழ்ச்சுவை அறிந்த பேயைவிட தாழ்ந்ததாகும்.

தமிழ்மொழி உயர்வறியாத வெகுளித்தனம் கொண்ட புலவனை பழித்திடவும் சுவாமிகள் விரும்பினார்.

“தமிழ்மொழிக் குயர்மொழி
தரணியில் உளதெனில்
வெகுளியற் றிருப்போன்
வெறும் புலவோனே!”

1864ஆம் ஆண்டு திருநடைப்பயணம் சென்றபோது சுவாமிகள் வேலூரில் தங்கும்படி நேரிட்டது. அப்போது வடமொழி வாணர்கள் அவரிடம் நேரில் சென்று வாதிட்டனர். தமிழ்மொழியே வடமொழியைவிட உயர்ந்தது என்று சுவாமிகள் பதிலடி தந்தார். அவை பின்வருமாறு:

வடமொழி வாணர்: மொழிகளில் உயர்வு கொண்டது ‘வடமொழி’ என்பதை ஏற்பீர்களா?

சுவாமிகள்: அதற்குச் சான்று தர முடியுமா?

வடமொழி வாணர்: வேதம் வடமொழியில் தான் இருக்கிறது. இது ஒன்று போதுமே!

சுவாமிகள்: அப்பன்மார்களே! என்ன சொன்னீர்கள், வேதம் வடமொழியில் இருக்கிறதா? தமிழ் மொழியிலும் வேதம் இருக்கிறது தெரியுமா?

வடமொழி வாணர்: தெரியாது.

சுவாமிகள்: ஆட்டையும், மாட்டையும் அடித்துப் போட்டு , ஊன் அவி பெய்து உண்ணும்படி சொல்வது உங்கள் வேதம். “அவி சொரிந்து ஆயிரட் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத் துண்ணாமை நன்று” எனப் பேசுவது எங்கள் வேதம்… அப்பன்மார்களே! தெரிந்து கொண்டு பேசுங்கள்.

ஒரு பகலும், ஒரு இரவும் முடிந்துபோன பிறகும் இரு தரப்பினரும் முடிவை எட்ட வில்லை. பின்னர் இறைவனுடைய திருவடியில் தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். ஈசன் திருவடிக்கு முன்பு திருவுளச் சீட்டு எழுதிப் போடப்பட்டது. அதில், “தமிழே உயர்ந்தது” என்னும் சீட்டு எடுக்கப்பட்ட போது சுவாமிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அப்போது, “தமிழே உயர்ச்சி யென்று சீட்டுக் கொடுத்த பெருமானே!”

என திருப்புகழ் பாடி முடித்தார். தமிழின் சிறப்புகளை வரலாற்றுச் சான்றுகளோடு கூறும் இப்பாடல் “தமிழலங்காரம்” என்று அழைக்கப்படுகிறது.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றை ஐந்திலக்கணம் என்று அழைப்பதுண்டு. இதனோடு ஆறாவதாக “புலமை இலக்கணம்” எனும் பெயரில் சுவாமிகள் புதிதாக ஒன்றை உருவாக்கினார். அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு இம்மூன்றும் சுவாமிகள் கைவண்ணத்தில் உருவானவையே.

தண்டபாணி சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் வள்ளலார் ஆவார். அவர் மீது பெருமதிப்பு கொண்டு நேரில் சென்று உரையாடினார். ஆறுமுக நாவலர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சபாபதி முதலியார், பூண் அரங்கநாத முதலியார் ஆகியவரோடும் நெருக்கமாக உறவு பூண்டிருந்ததற்குக் காரணம் சுவாமிகள் நேசித்த தமிழே என்பதைச் சொல்லித் தெரிவதில்லை.

இளம் அகவையில் திருமணம் செய்து கொண்ட பெண்கள் கணவர் இறந்தபோது “விதவை” என்று முத்திரை குத்தப்பட்டு சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வந்தனர். இந்த இழிநிலையைக் கண்டு சுவாமிகள் மனம் கொதித்தார். அதுமட்டுமின்றி, அப்பெண்கள் கருவுற்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிடும்படியும் வேண்டிக் கொண்டார்.

இதற்கு மறுமலர்ச்சி ஒன்றே தீர்வாக தனது பாடல்களின் மூலம் எழுச்சிக் கருத்துகளை பெண்களின் மனத்தில் விதைத்தார். அவை பின்வருமாறு:

நூலிழந்தும் கேளிச்சை நூறா தான் மற்றுமொரு தாலிகட்டிக் கொள்ளத் தகும்”.

“தாய்தந்தை ஆதியர் தற்கு ஆகான்தனைக் கொள் எனில் வாய் திறந்து ஒவ்வேன் எனலாம் மாது”

“நூல் இழந்திட்டு அனங்கன் அம்பால் மிகச்சோரும் மடநல்லாள் கலவி வேட்டு மேவு கருப்பம் கெடுக்கும் வினையை எண்ணில் ஜெகத்தோர்கள் அறிய மற்றொரு கொழுநன் தன்னைச் சார்ந்திருக்காச் சொன்னமுறை தவறாகாதே”

சுவாமிகள் பாடி மறைந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய சமூகத்தில் விதவைப் பெண்களின் நிலை மாறவே இல்லை. 1921ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 30 அகவைக்கு உட்பட்ட விதவைப் பெண்கள் 26, 32000 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்குச் சென்று வழிபட அக்காலத்தில் வைதீக மனம் படைத்த ஆணாதிக்கவாதிகள் தடை விதித்தனர்.

பெண்களை “தீட்டு” என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக முதன்முதலில் கலகம் செய்தவர் திருமூலர். பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்பதை தனது திருமந்திரம் ( 2551) நூலிலில், “ஆசூச மானிடம் ஆசூசம் ஆகுமே, ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்.. ” என்று வசைமொழி கூறிப் பாடினார். திருமூலர் வழியில் தண்டபாணி சுவாமிகளும் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார்.

திருஞான சம்பந்தருக்கும், நம்பியாண்டார் நம்பி மகளுக்கும் திருமண விழா திருநல்லூரில் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த பிறகு அங்கு வந்திருந்த பெரு மக்களை சம்பந்தர் திருப்பெருமணம் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அக்கோயில் முன்பாக ஒரு பெருஞ்சோதி தோன்றியது. அதில் அனைத்துப் பெரு மக்களையும் உடம்போடு உட்புகச் செய்கிறார். உடனடியாக அப்பெரு மக்களுக்கு வீடுபேறு கிடைக்கிறது.

அதில் ஒரு பெண் மட்டும் தனக்கு ஏற்பட்ட மாதவிடாய் காரணமாக பெருஞ்சோதியில் உட்புக மறுத்து, அதன் காரணத்தை சம்பந்தரிடம் தெரிவிக்கிறார்.

மற்றவர்களைப் போல தனக்கு மட வீடுபேறு கிடைக்காததை எண்ணி அப்பெண் வருந்திய போது சம்பந்தர், “பெண்ணே! ஏக்கம் கொள்ளாதே! பெரு நெருப்புக்கு ஈரமில்லை! (அதாவது இறைவனுக்கு தீட்டு இல்லை) எனவே, நீயும் பெருநெருப்பில் கலந்து வீடுபேறு அடைவாய்” என்று மறுமொழி பகர்ந்தார். இதை “புலவர் புராணம்” நூலில் பின்வருமாறு விளக்குகிறார் சுவாமிகள்.

“ஆங்கு உறும் பலபேர் உட்போய்
அதில் கலந்து அதுவே ஆனார்.
வீங்கு புண் முலையாள்
மாதவிடாயினள் ஒருத்தி
வேட்கை தாங்குறாது இரங்கி
அன்னோன் சரண் பணிந்து
அதனைச் சொன்னாள்
ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு
ஈரம் இன்றே என்றானே!”

-புலவர் புராணம், 351

பெரிய புராணத்தில் இக்கதை கூறப்பட்ட போதிலும், மாதவிடாய்ப் பெண் அதில் இல்லை. இந்தப் பெண் வண்ணச்சரபரின் படைப்பில் உருவான பெண் என்பது மனங்கொள்ளத்தக்கது.

திருவரங்கத் திருவாயிரம், சடகோபார் சதகத்தந்தாதி, அறுசமயக் கடவுள்கட்கு ஆறாயிரம் தோத்திரப்பாடல்கள், பழனித் திருவாயிரம், தில்லை திருவாயிரம், ஞாயிறு ஆயிரம், ஏழாயிரம் பிரபந்தம், திருவாமாத்தூர் பதிக சதகம், மருத்துவத்தை விளக்கிக் கூறும் விகட பிள்ளைத் தமிழ், திருக்குறளை அடியொற்றி வருக்கக்குறள் ஆகிய நூல்கள் சுவாமிகளால் எழுதி வெளியிடப்பட்டவையாகும். இவற்றுள் தன் வரலாறு கூறும் குருபரத்தத்துவம், பிறர் வரலாறு கூறும் புலவர் புராணம், அருணகிரிநாதர் புராணம் ஆகியவை புகழ்பெற்ற நூல்களாகும்.

சுவாமிகள் இயற்றிய ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் கிடைத்தவையாக ஓலைச் சுவடியிலும், அச்சிலும் மட்டுமே 49722 பாடல்கள் உள்ளன. 1888ஆம் ஆண்டு திருவாமாத்தூருக்கு (விழுப்புரம்) குடும்பத்துடன் சென்று இறைப் பணியாற்றிய சுவாமிகள் திருமடம் ஒன்றை அங்கு நிறுவினார். வாழ்வின் பத்தாண்டுகளை அவ்வூரில் கழித்து வந்த சுவாமிகள் 15.7.1897இல் இம்மண்ணை விட்டு மறைந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: