யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வைத்திலிங்கம் செட்டியார் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும் போத்துக்கீசரால் இடித்துத் தள்ளப்பட்ட பின்னர், சுமார் 160 ஆண்டுகள் கழித்துக் கட்டப்பட்ட முதல் கோயில்களில் இதுவும் ஒன்று. இது வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் எனவும் பரவலாக அறியப்படுகின்றது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இக்கோயில், காங்கேசன்துறை வீதியில், தற்கால யாழ்ப்பாண நகரின் மத்தியிலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்துக்குள்ளேயே அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில், சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் கோபாலச் செட்டியார். இவர் அங்கே வியாபாரம் செய்து வந்தார். இவ்வியாபாரம் மூலம் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. இவருடைய மகன் வைத்திலிங்கன். இவர் சிறுவனாக இருந்தபோது இவரைக்கண்ட தேசாதிபதியின் மனைவி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் தேசாதிபதியின் மனைவி அவரைத் தம் மாளிகையிலேயே வளர்த்து வந்தார். வளர்ந்து பெரியவனான பின்னர், தேசாதிபதியின் பரிந்துரையின்படி மூன்று முறைகள் முத்துக்குளிக்கும் குத்தகையைப் பெற்றுத் திறம்பட நடத்தி நல்ல இலாபம் பெற்றார்.
இவ்வாறு சம்பாதித்த செல்வத்தின் ஒரு பகுதியை, இவருடைய நண்பராயிருந்த கூழங்கைத் தம்பிரான் என்பவரின் ஆலோசனைப்படி, சிவபெருமானுக்குக் கோயிலமைப்பதில் செலவிட எண்ணினார். 1787-ல் இக்கோயில் அமைந்திருக்கும் நிலத்தை வாங்கி கோயில் திருப்பணியைத் தொடங்கினார். 1790 ஆம் ஆண்டில் கோயில் கட்டிடப்பணி நிறைவேற்றப்பட்டு வைத்தீஸ்வரப் பெருமானையும், தையல்நாயகி அம்மனையும் பிரதிட்டை செய்து வைத்தார்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலிலேயே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் தமது முதலாவது பிரசங்கத்தை 31 டிசம்பர் 1847 ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.
வண்ணை வைத்தீஸ்வரன் ஆலய வரலாற்றினை இப்பொழுது பார்ப்போமேயானால், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிறப்பினை பெரும் வண்ணை வைத்தீஸ்வர சிவன் ஆலயம். சிவபூமி என்று திருமூலநாயனாரால் போற்றப் பெற்ற இலங்கையின் ஈஸ்வரங்கள் சிவன் கோயில்கள் எண்ணுக் கடங்காதவாறு எங்கணும் நிறைந்து இருக்கிறது . வரலாற்றினை நோக்கினால் இராவணன் காலத்து இலங்கை இன்றைய நாட்டிலும் பார்க்கப் பெரிதாக இருந்தது. இராவணனும் அவரது தேவி மண்டோதரியும் பெரிய சிவபக்தர்கள். அவர்களது சிவபக்தியை திருமுறைகள் பல விடயங்களிற் போற்றுகின்றன. இராவணனின் தாயார் கைகேயி. இவர் தீவிர சிவா பக்தராக திகழ்ந்தார். இவர்களது காலத்தில் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட கட்டட அமைப்புக்கள் பல இயக்கர், நாகர் முதலானவர்களாற் கட்டப் பெற்றிருந்தன என்பது அவற்றின் அழிபாடுகளிலிருந்தும் அத்திபாரங்களிலிருந்தும் அறிய முடிகிறது. தம்பி விபீடணன் மிகவும் சிவா பக்தன் இலங்காபுரியின் காவல் தெய்வம். தேவாரம் பாடப்பெற்ற ஈஸ்வரங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் முதலிய சிவாலயங்களை விட நகுலேஸ்வரம், முன்னீஸ்வரம் முதலிய ஈஸ்வரங்களும் முற் காலத்தில் அருள் நிறைந்த ஆலயமாக காணப்பட்டன. சிவனெனும் நாமம் சிந்தையில் எப்போதும் நிறைவாக இருந்தது . ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து அறிவாளிகள் இருவர், ஒருவர் பின் மற்றவராய் வந்தார்கள். ஒருவர் கொச்சிக்கணேச பண்டிதர் என்னும் ஜயராவர். மற்றவர் காஞ்சிபுரத்திறேன்றி திருக்கைலாய பரம்பரைத் திருப்பனந்தாள் மடத்தத் தம்பிரான் சுவாமிகளாயிருந்த கணக சபாபதி யோகியாவர். இவரைக் கூழாங்கைத் தம்பிரான் எனவும் வழங்கினர்.
கணேசபண்டிதர் யாழ்ப்பாணத்து வண்ணை நகரில் வாழ்ந்து செந்தமிழ் பரிபாலனஞ் செய்த காலத்தில் கோபால் செட்டியார் என்னும் வணிகர் ஒருவர் அவர் பணியில் ஈடு பட்டிருந்தார். ஒரு சமயம் இவர் கணேசையருடன் கருத்து வேறுபாடு கொண்டு, அவரை விட்டு விலகிச் சம்பா அரிசி வியாபாரம் செய்து பொருளீட்டி வந்தார். இவரின் நேர்மையைக் கண்ட ஒல்லாந்த உத்தியோகத்தர்கள் இவரிடம் தமக்கு வேண்டிய பண்டங்களை வாங்கி வியாபாரத்தை ஊக்கி வந்தார்கள். பெருஞ்செல்வரான கோபால் செட்டியார் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்த அதிபருக்கு பண்டங்கள் விநியோகித்து மதிப்புப் பெற்றிருந்தார். மதிப்புப் பெற்ற கோபால் செட்டியாரின் மனையில் கூழாங்கைத் தம்பிரான் தங்கியிருந்து தமிழ், சைவம் வளர்த்து வந்தார். கோபால் செட்டியாரின் மைந்தனாகிய இளவல் வைத்திலிங்கம் என்பாரின் அழகையும் குறும்புத்தனத்தையும் கண்டு வியந்த அரசாங்க அதிபர், அவரைத்தாமே வளர்க்க விரும்பித் தம் மாளிகையில் வளர்த்து வந்தார். செல்லப்பிள்ளையாக வளர்ந்த வைத்திலிங்கம் வர்த்தகத்துறையிலும் அரசாங்க அலுவல்களிலும் நேரடி அனுபவம் பெற்று வந்தார். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தார் முத்துக்குளிப்பதில் பெருமுயற்சியுள்ளவராய், அரசாங்கத்திடம் உத்தரவு பெற்று மேற்கு கடலில் பெருந்தொகையான முத்துக்களைப் பெற்று வந்தார்கள். இத்துறையில் தானும் ஈடுபட விரும்பிய வைத்திலிங்கம் தன் வளர்ப்புத் தாயான ஒல்லாந்தச் சீமாட்டியின் கண்ணியத்தால் அத்துறையில் புகுந்து பெருஞ் செல்வனாயினார்
சிவனுக்கு ஓர் ஆலயம் ;
பெருஞ்செல்வந்தரான வைத்திலிங்கச் செட்டியார் தமக்கென ஒரு பெரிய வீடு கட்டுவதற்கு விரும்ய போது குல குருவாகிய கூழாங்கைத் தம்பிரான் ‘குழந்தாய்! உன்னை இந்நிலைக்குக் கொண்டு வந்த பெருங்கருணைத்தடங்கடலாய சிவபெருமானுக்கு அதியற்புதமான ஊராலயத்தை முதலில் அமைத்து விட்டு உனக்கு விருப்பமான முறையில் மாளிகையைக கட்டுவாயாக’ என் வாழ்த்தினார். தம்பிரான் சுவாமிகளுக்கு வேண்டிய நாளாந்த பணி விடைகளைப் பொறுமையோடு கடமையுணர்ச்சியோடு செய்து வந்தவர் வைத்திலிங்கம் செட்டியாரின் தாயாரான தையலாச்சி என்னும் பெண்கள் திலகமாவள். தாய்த்தெய்வத்தின் திரு நாமத்தை முன்னிறுத்தி தையல் நாயகி சமேத வைத்தீசுவரன் கோயில் அமைப்பதில் வைத்திலிங்கம் செட்டியார் முழுக் கவனம் செலுத்தினார். தமிழ்நாட்டில் உள்ள சிவாலங்களினமைப்பில் ஈழத்திரு நாட்டில் புதிதாக ஆலயம் அமைக்க முற்பட்ட செட்டியார், ஆகமம் வல்லாரை அழைத்துப் பூர்வாங்க ஏற்பாடுகள் யாவற்றையும் நிறைவேற்றினார். வண்ணார்பண்ணையில் வைத்திலிங்கம் செட்டியார் சவாலயம் அமைக்கிறாராம் என்று கேள்விப்பட்ட ஊரவர் நாட்டவர் அனைவரும் நான்கு பக்கங்களிலிருந்தும் தத்தம் காணிக்கைப் பொருள்களோடு வந்து குவிந்து ஆவன செய்து நின்றனர். திருக்கோயில் வேலைகள் முடிவுற்றதும் 1791 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெறுவதற்குக் கூழாங்கைத் தம்பிரான் முன்னின்று பணிபுரிந்தார். தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரப் பெருமான், செட்டியார் அன்புடமைதடத திருக்கோயிலில் எழுந்தருளினார்.
திருக்கோயில் ஒரு கண்ணோட்டம்:
கூழங்கைத் தம்பிரான் சுவாமிகள் மேற்பார்வையில் ஆகமம் வல்லார் அமைத்த திருக்கோயிலின் ஆதிமூலம் என்னும் கர்ப்பக்கிருகமும் அதனையடுத்த ஏனைய மண்டப வரிசைகளும் விமானமும் மூன்று பிரகாரங்களும் மிக அமைவாக ஏற்பட்டுள்ளன. மூலமூர்த்தியும் பரிவார தெய்வங்களும் எழுந்தருளிகளும் தென்னகத்துத் தெய்வாம்சம் நிறையச் சமைந்துள்ளன. ஆனந்த நடனம் செய்யும் அதியற்புத நடராச மூர்த்தி, பிச்சாடணடூர்த்தம், சோமஸ்கந்தமூர்த்தம், சந்திரசேகரடூர்த்தம் முதலாய தெய்வங்கோலங்கள் சிறப்பிடம் வகிக்கும் திருக்கோயில் வாகனங்களும் கலைப்பொழிவு நிறைந்தனவாகும். தையல் நாயகிக்குத் தெற்கு நோக்கிய தனிவாசலும், ஆடியுற்சவமும் அழகும் அலங்காரச் சிறப்பும் அமைந்தவை. அப்பன் வைத்தீஸ்வரனுக்குப் பங்குனிப் பெருவிழா பல வகைச் சிறப்புக்களும் ஒருங்கமைய நடைபெறுவன. மிகவும் வியக்கத்தக்க ஆலயம் அமைப்பதில் தனி கவனம் முழுவதையும் செலுத்தினார் .
ஆலயச் சொத்துக்கள்:
திருக்கோயில் வெளிச்சுற்று வீதிகளிலமைந்த மனைகள், வர்த்தக நிலையங்கள், பெரும்பாலும் வைத்தீஸ்வர பெருமானுக்கு வருவாய் சேர்க்கும் சொந்த அமைவிடங்களாகும். இன்னும் திருக்கோயில் அயலிடங்களில் பெருந்தோட்டங்கள், வயல்கள், வாழ் மனைகள் கடைகள் வியாபாரம் செய்யும் இடங்கள் இன்னும் பலவும் இத்திருக்கோயிற் சொத்துக்களாகும். வரலாற்றுப் புகழமைந்த வருவாய் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் அப்பால் வன்னியர் நிலத்தில் பெரு நிலப்பரப்பு இத்திரக் கோயிலுக்கு உரிமையாய் உள்ளது.
தமிழரசுக்கும், சிங்களரசுக்கும் இடையில் நிலவிய வன்னியராட்சியில் வலிமை பெற்றுயர்ந்த நல்ல மாப்பாணவன்னிய பூபதி ஒருமுறை வெள்ளைக்கார அரசுக்கு கொடுக்க வேண்டிய தொகையை பணத்துடன் விரைந்து சென்று அவரை மீட்டுத் தழிழினம் காத்தவர் வைத்திலிங்கம் செட்டியாராவார். அந்த நன்றிக் கடனை மறவாத வன்னியன் தன் நாட்டகத்துப் பல்லாயிரம் பனை மரங்களையும் பெரு நிலப்பரப்பையும் இத்திருக்கோயலுக்குத் தர்ம சாதனஞ் செய்துள்ளார். மேலும் சிவன் நாமம் சொல்லியே தன்னுடைய வாழ்வை கொண்டு சென்றார். எல்லாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணத்து சைவத்தமிழ்ப் பெருமக்கள் தங்களுக்குப் பறங்கியர் ஆட்சியில் முப்பத்தேழு ஆண்டுகள் நிகழ்ந்த பாரிய இழப்பினையும் பின்னர் நூற்றாண்டுக் காலமாக ஒல்லாந்தர் காலத்தில் தவறியப் பாரம்பரியம் கிரகண காலமாகக் கருதிப் பின்னர் தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரப் பெருமான் எழுந்தருளியதால் உண்டான ஒளியையும் சிந்தையில் நிறைத்துத் தம்மை உய்யக் கொண்ட பெருமாட்டிக்கும் பெருமானுக்கும் தம் அன்புக் காணிக்கையாகப் பெருஞ்செல்வத்தைத் தருமசாதனஞ் செய்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தனர்.
திருக்கைலாய பரம்பரை தழைத்த திருத்தலம் முன்னர் திருக்கைலாயத்திலே கல்லால் மர நிழலிலே தென் திசை நோக்கித் தட்சிணா மூர்த்தமாயெழுந்தருளியருள் பாலித்த மூர்த்தத்தின் வழி வந்த அகச்சந்தான குரவர்களும், அவர்கள் வழி வந்த அகச்சந்தானப் பூவுலக குரவர்களும், இவர்கள் வழிவந்த அருட்குரவர்களும் கண்ட ஆதீன மடங்களும் வழி வந்த தம்பிரான் சுவாமிகளும் மடாதிபதிகளும் சைவம் வளர்த்தமை வாழையடி வாழையென வந்த திருத்தொண்டர் தம் ஞான பரம்பரையாகும்.
அந்தத் திருக்கைலாய பரம்பரை ஞானந்தழைக்க வந்த திருப்பானந்தாள் மடத்துத் தம்பிரான் சுவாமிகளான கூழாங்கைத் தம்பிரான் அவர்கள் செட்டியார் சிவன்கோயிற் சூழலிலெழுந்தருளியிருந்து ஞானச் செங்கோலோச்சிய காலத்தில் பென்னம் பெரிய வித்துவான்கள், புலவர்கள் பண்டிதர்கள் முதலான அறிவாளிகள் கூடித் தம்பிரான் சுவாமிகளிடம் கல்வி பயின்றதால் திருகடகைலாய பரம்பரை எங்கள் நாட்டின் மூலை முடுக்கெங்கும் முடுகிப் பரந்தது. தம்பிரான் சுவாமிகளிடம் அணுக்கத் தொண்டராயிருந்து நுணுகிப் படித்த மேதை இருபாலைச் சேனாதிராய முதலியார் என்னும் பெரிய உத்தியோகத்தவராவார்.
சேனாதிராய முதலியாரிடம் முறையாகப் படித்த முதல் மாணாக்கள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அடிகளாவார். நாவலரவர்களின் சைவப்பிரசங்கம் நல்லூரில் தோன்றிய ஆறுமுகநாவலர்கள் அயலூரான வண்ணையில் உள்ள செட்டியார் சிவன் கோயிலிலேயே மிகவும் இளமைக்காலத்தில் தமது சைவவப் பிரசங்கத் தொடரை ஆரம்பித்தார். பிரபந்தங்கள் பிறந்த திருத்தலம் தையல் நாயகி வைத்தீஸ்வரப் பெருமான் மீது புலவர்கள் பலவிதமான பிரபந்தங்கள் பாடியுள்ளார்கள். அவை யாவும் செந்தமிழின்பமும் பக்திச்சுவையும் பயப்பனவாகும். பெருமானும், பெரும்பாட்டியும் பெருந்திருவிழா வென்னும் உற்சவ காலத்தில் பென்னம் பெரிய வாகனங்களில் எழுந்தருளி பெருவீதிகளில் உலாப்போந்த வேளைகளில் அவ்வப்போது பக்தர்கள் பாடிய பாமாலைகளும் பலவுள்ளன.
அராலி ஊரைச் சேர்ந்த விசுவநாத சாஸ்திரியார் என்பார் வண்னைக் குறவஞ்சி என்னும் என்னும் பிரபந்தம் பாடியுள்ளளார். இவர் காலத்துப் புலவர்கள் பலர் தலங்கள் தோறும் குறவஞ்சி பாடும் இயல்பினராயிருந்தனர் என்பது ஆறுமுக நாவலரின் தந்தையார் கந்தப்பிள்ளை நல்லைக் குறவஞ்சி பாடியுள்ளதாலும் இங்ஙனமே பலர் பாடியிருப்பதாலம் அறியலாம். வண்ணை வைத்திலிங்கம் வழங்கிய புலவர் வைத்தீஸ்வரப் பெருமான் மீது ஒரு துறைக்கோவை பாடியுள்ளார். அதாவது கோவை என்னும் பிரபந்தத்தில் வருகின்னவாய நாநூறு துறைகளில் ஒரு துறையாகிய நாணிக்கண் புதைத்தல் என்னுந்துறையை எடுத்துக் கொண்டு அதில் நூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் ஆற்றெழுக்காகப் பாடியுள்ளார். பாடிப் பரவுவோம் தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரப் பெருமானுக்கு முதற் கும்பாபிடேகப் பெருவிழா நிகழ்ந்த போது கூழங்கைத் தம்பிரான் சுவாமிகள் உள்ளம் உருகிக் கண்ணீர் மல்கிப் பாடிக் கசிந்துருகிய பால் ஒன்று தனிப்பாடல் வரிசையில் உள்ளதாம்.
இலங்கையாண்ட சிங்கள மன்னர்களுள் பல சிவன் என்னும் விகுதி பெற்ற பெயர்களைப் பெற்றிருந்தனர். அது மட்டும் இல்லாமல் சிவவழிபாட்டுக்கு வசதி வாய்ப்புக்கள் செய்திருந்தனர். இலங்கையாண்ட தமிழ் மன்னர்கள் பலர் தென்னிலங்கையெங்கும் சிவாலங்களை பரிபாலித்து வந்தனர். பிற்காலச் சோழர் என்னும் பெருமதிப்புக்குரிய வேந்தர்களுள் இராஜேந்திரன் முதலாய பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றியாண்ட இலங்கையில் ஈஸ்வரங்கள் பலவற்றை இலங்கையின் வடமத்திய பாகங்களிலமைந்ததோடு, தங்கள் இராசதானிகளைச் சிவசம்பந்தமாக்கியே செம்மை சேர்த்திருந்தனர். அவர்களின் பின்வந்த பிற்காலப் பாண்டியவர்களும் பெரிய சிவ பக்தர்களாய்ச் சிவப்பணி செய்வதில் வழுவாது செங்கோலோச்சிவ வந்தனர். பிற்காலப் பாண்டியவருக்குப் பின்வந்த ஆரியசக்கரவர்த்திகள் வட பாகத்தை மையமாகக் கொண்டு இலங்கையின் பெரும் பகுதியைப் பரிபாலித்ததோடு வடக்கே கடல் கடந்து இராமேஸ்வரத்தையும் பரிபாலித்து புகழ் பூத்த சிவபக்தர்களாய் விளங்கினார். ஜரோப்பியர் செய்த அழிவுகள் ஆரிய சக்கரவரத்திகள் என்னும் தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்தின் பின் இலங்கைக் கரை நாடுகளைக் கண்டறிந்த ஜரோப்பிரான போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஒருவர் பின் மற்றவராய் இலங்கைக் கரை நாடுகளை சில காலம் பரிபாலித்தார்கள். இவர்களுள் போர்த்துக்கேயர் அழிவு செய்வதில் ஆற்றல் மிக்கோராய் சைவத்திருக்கோயில்களைத் தரைமட்டஞ் செய்வதைப் பொழுது போக்காகக் கொண்டு தங்கள் மதத்தைத் தாபிப்பராயினர். போர்த்துக்கேயரின் கொட்டத்தையடக்கிய ஒல்லாந்தர் போர்த்துக்கேயர் போனவழியிலே சில காலஞ்சென்று, சைவாசார ஒழுக்கம்,பண்டிகை விரதானுட்டானம் முதலியவற்றைப் பாழ்படுத்திப் பீங்கான் கோப்பை நாகரிகத்தைப் பழக்குவதில் முனைந்து நின்றனர். வைதிக சைவாசாரங்கள் ஓரளவு தலைமறைவாகத் தழைத்து வந்தது.
சைவ சமயம் பெற்ற ஒளிக் கதிர்கள் இவ்வாறாக ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் இறுதியில் அவர்கள் சைவ சமயத்தவரின் வழிபாடாதியனவற்றுக்கு ஒரளவு சுயாதீனங் கொடுப்பதில் இரக்கங்காட்டிய போது தமிழ் பிரதேசமெங்கும் பழைய ஆலயங்கள் புனரமைப்புப் பெறவும், புதிய ஆலயங்கள் தோன்றவும் வாய்ப்புக் கிடைத்தது. சைவசமயம் தலையெடுப்பதற்கு ஓரளவு ஒளிக்கதிர் உதயமாயிற்று. இத்தகைய வாய்ப்பினை வரப்பிரசாதமாகக் கொண்டவர்களுள் ஒருவர் இரகுநாதமாப்பாணமுதலியார் என்னும் சிறப்பர். இவர் தாம் உத்தியோகம் பார்த்து வந்த யாழ்ப்பாணத்துக்குக் கச்சேரி அரசாங்க அதிபரிம் சிறப்புரிமை பெற்று, நல்லூரில் வேலாயுதப்பிரதிஷ;டை செய்து முருக வழிபாட்டுக்குகந்த வகையில்இன்றுள்ள நல்லூர் இராசதானியில் ஆரிய சக்கரவர்த்திகள் கால்ததிலேயே பெரும் புகழ்பெற்று விளங்கிய கந்தசுவாமி கோயில் முத்திரைச்சந்தைக்குக் கிழக்கில் பெருநிலப்பரப்பில் மணிமாட அயோத்தி போல நிலவிய நெடு நகரில் கோபுரமும் மதிலுஞ் சூழ அமைந்து இருந்தது. இவ்வாறே சிவன் ஆலயங்கள் நிறைய நிறுவ படும் காலப்பகுதியில் சைவசமயம் செழிக்க ஒரு வழி அமைத்து தந்த பெரும் சான்று ஆக வண்ணைவைத்தீஸ்வர சிவன் ஆலயம் விளங்குகின்றது.