உடுமலை நாராயணகவி (செப்டம்பர் 25, 1899 – மே 23, 1981) என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழில் பாடல்கள் பாடியிருப்பினும், இவரது தாய் மொழி தெலுங்கு ஆகும். 1899ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளைவாடிச் சிற்றூரில் 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் உழன்றார். தனது தமையனார் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். சுற்றுப்புறச் சிற்றூர்களுக்கு தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று விற்றார். இதனால் ஒரு நாளைக்கு 25 பைசா வருமானம் கிடைத்தது. நான்காம் வகுப்போடு தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.
விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக் கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக் கொண்டு, கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.
ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப் பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல் திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.
முடை நாற்றமெடுக்கும் மூட நம்பிக்கைக் கொள்கைகளை நகைச்சுவையின் மூலம் துவைத்து எடுத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது பகுத்தறிவுப் பாடலுக்குப் பின்னே கவித்துவம் ஒன்று மறைந்தே முழக்கமிட்டது. அதன் சொந்தக்காரர் உடுமலை நாராயண கவி என்பது பலருக்கும் தெரியாது.
அன்றைக்கு பகுத்தறிவுக் கொள்கையை வீரியத்தோடு பறைசாற்றிய கவிஞருள் முதன்மையானவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்றால் அதே சமகாலத்தில் வாழ்ந்த மற்றொருவர் கவிஞர் உடுமலை நாராயணகவி என்பதில் ஐயமில்லை. தமிழிசை உலகம், தமிழ் நாடக உலகம், தமிழ்த் திரையுலகம் ஆகிய மூன்று உலகத்திலும் கால் பதித்து கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்து தமிழர்களை எழுச்சி கொள்ளச் செய்தவரே உடுமலை நாராயணகவி.
நாடக ஈடுபாடு :
பூளைவாடியில் நிகழும் மாரியம்மன் திருவிழாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ‘இராமநாடகம்’ என்ற நாடகத்தில் இலக்குவன் வேடம் பூண்டவர் இவரே. இளமைப் பருவத்தில் இவருக்கிருந்த கலை ஈடுபாடே பின்னர்த் திரைத் துறையில் ஈடுபட வழிகாட்டியாய் அமைந்தது. அக்காலத்தே நாடகத் துறையில் புகழ் பெற்றுச் சிறந்த மதுரை சங்கரதாஸ் சுவாமிகளின் நெருங்கிய நண்பராக இருந்தவர் உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர். இவர் ‘ஆரிய கான சபா’ என்னும் நாடக மன்றத்தின் ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு முறை பூளைவாடித் திருவிழாவில் நாராயணசாமி பங்கு பெற்ற நாடகக் காட்சிகளைக் கண்டு அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை முத்துசாமிக் கவிராயர் செல்லுமிடம் எல்லாம் உடன் சென்று நாடகம் நடித்தும், எழுதியும், பாடியும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தார்.
இருபத்தைந்தாம் வயதில் ஊர் திரும்பிய கவி தேசிய எழுச்சி மிகுந்திருந்த அக்காலத்தில் கதர்க்கடை ஒன்றைத் தொடங்கினார். கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார். அப்போதுதான் பேச்சியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு ஆண்மக்கள் பிறந்தனர்.
வாணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் தொல்லை ஏற்பட்டது. ‘இந்தக் கடனை எல்லாம் திருப்பித் தரும் வரை இந்த ஊர் மண்ணை மிதிக்க மாட்டேன் எனச் சூளுரை செய்து கையில் நூறு ரூபாயோடு பிறந்த ஊரை விட்டுப் புறப்பட்டார். தன்மானம் ஒன்றையே துணையாகக் கொண்டு மதுரை சங்கரதாஸ் சுவாமிகளைச் சென்றடைந்தார். அவரிடம் முறையாக யாப்பிலக்கணம் முழுதும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். நாடக மன்றங்கள் நிறைந்த மதுரை இவருக்கு உதவியாய் இருந்தது.
சரபமுத்துச்சாமி கவிராயரிடம் மாணாக்கராக அறிமுகமாகி இசையின் ஊற்றுக் கண்ணை முழுவதும் கண்டு தேர்ச்சியடைந்தார். அத்தோடு அவரது ஆரியகானச் சபையில் சேர்ந்து நாடகக் கலையையும் கற்றுத் தெளிந்தார். அன்றிலிருந்து ‘முத்துச்சாமி சீடன்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். அதன் பிறகு தனது குருவின் பரிந்துரையின் பேரில் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகளிடம் சேர்ந்து நாடகக் கலையின் பரிமாணங்களைத் தெரிந்து கொண்டார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களோடு பழக்கம் ஏற்பட்ட பிறகு அவரின் பெரும்பான்மையான படங்களுக்கு நாராயணகவி தான் சீர்திருத்தப் பாடல்களை எழுதினார். அவர் மூலமே திராவிட இயக்கத் தலைவர்களோடும் நெருக்கம் கொண்டார். அண்ணா எழுதிய ‘நல்ல தம்பி’ படத்திலே ‘ரயிலே’ எனத் தொடங்கும் கதாகாலட்சேபம் பாடலை எழுதி புகழின் உச்சிக்குச் சென்றார். அப்படத்தில் கலைவாணர் கிருஷ்ணன் அவர்கள் கிந்தனார் கதாகாலட்சேபம் நடத்துவார். கிந்தன் பள்ளிக்குச் செல்லும் போது தொடர் வண்டியைக் கண்டு பரவசமடைவான். ஐயரென்றும் பள்ளரென்றும் சாதி பார்க்காமல் அனைவரையும் சமமாக அமர்த்திக் கொண்டு புறப்படும் தொடர் வண்டியைப் பாடியவாறு சாதிச் சழக்கருக்கு சவுக்கடி கொடுப்பான்.
அதே போல், டாக்டர் சாவித்திரி படத்தில்,
“காசிக்குப் போன கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு
இப்ப ஊசியப் போட்ட உண்டாகுமென்ற உண்மை தெரிஞ்சு போச்சு” – பாடல் மூலம் மூடப் பழக்க வழக்கங்களை தகர்த்து எறிந்தார்.
தொடக்கத்தில் பாரதிதாசன் போலவே ஆன்மிகப் பாடல்களை எழுதி வந்த நாராயணகவியார் பாரதியாரின் தோழமை கிடைத்தவுடன் அவரைப் போலவே சமுதாய சீர்திருத்தப் பாடல்களை எழுதத் தொடங்கினார். சமூக கால மாறுதலுக்கேற்ப நாராயண கவியின் சிந்தனையிலும் சீர்திருத்தத் தாக்கம் வெளிக் கிளம்பின. இயக்குநர் நாராயணன் மூலமாக வெள்ளித் திரையில் மின்னத் தொடங்கிய நாராயண கவியார் இளங்கோவன் எழுதிய கண்ணகி, மகாமாயா, கிருஷ்ணபக்தி, ஓர் இரவு, நல்ல தம்பி, பராசக்தி, மனோகரா, சொர்க்க வாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, இரத்தக்கண்ணீர் ஆகிய எண்ணற்ற படங்களுக்கு பாடல்களை எழுதி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா முத்திரை பதித்தார்.
காதல், தத்துவம், சீர்திருத்தம், அரசியல் போன்ற பல்வேறு தளங்களில் பன்முகத் தன்மையை நாராயணகவி வெளிக்காட்டிய போதிலும் பெண்ணடிமைச் சிந்தனைக்கு ஆதரவாக இவர் பாடல் எழுதியது பலரையும் அதிர்ச்சியடைய வைக்கும்.
1954இல் வெளிவந்த ‘தூக்குத் தூக்கி’ படத்தில்,
பெண்களை நம்பாதே! கண்களே, பெண்களை நம்பாதே!
கண்டவரோடு கண்ணால் பேசிக் காமுறும் மாது இந்தப் பூமியின் கொண்ட கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள்!
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு – என்றும்,
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே!
மானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ?
பெண்கள் காரியத்தை ஆம்பிளை பார்க்கிறான் வீட்டுலே – என்றும்
வேறொரு படத்திலே ஆணாதிக்கக் கருத்தியலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். திரைப்படத்தின் கதைக்கேற்ப அமைக்கப்பட்ட பாடல் என்ற போதிலும் இது போன்ற பாடல்கள் அவரது முற்போக்கு எண்ணக் கடலில் விழுந்த நச்சு மழையென்றே கருதிடுவோம்!
கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. ‘கலைமாமணி’ என்னும் பட்டம் பெற்றார். தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.05.1981 இல் மறைந்தார். இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. தன்னை ஈன்ற உடுமலை என்கிற தாயை மறக்காமல், தனது பெயருடன் இணைத்து தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்த இந்த மகா கவிஞனை நினைவு கூறுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்!