திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருச்சி மாவட்டம், பனையபுரத்துக்கு அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் திருக்கோயிலில் 2 புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் கோயிலில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் மு. நளினி, முசிறி அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அர. அகிலா ஆகியோர் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் புதிய கல்வெட்டுகளையும், பழங்கல்வெட்டுகள் சிலவற்றின் படியெடுக்கப்படாத பகுதிகளையும் கண்டறிந்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இக்கோயிலில் 28 கல்வெட்டுகள் கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் சிலபாடங்களை வெளியாகியிருக்கின்றன. வெளியாகாத கல்வெட்டுப் பாடங்களைப் படித்தறிய மேற்கொண்ட கள ஆய்வே புதியவற்றை கண்டறிய உதவியுள்ளது.

பாண்டியர் மரபைச் சேர்ந்த வரகுண மகாராஜரின் பொதுக்காலம் 781 ஆம் ஆண்டுக் கல்வெட்டு இக்கோயிலின் முகமண்டப வடசுவரில் கண்டறியப்பட்டது. பாலைத்துறைக் கோயில் இறைவன்முன் இரவும் பகலும் ஒளிரும் நந்தா விளக்கொன்று ஏற்றுவதற்காக இவ்வரசர், நாற்பது பழங்காசுகளைக் கொடையாக அளித்தார். அதை வைப்புநிதியாகக் கொண்டு அதன்வழிக் கிடக்கும் வட்டியால் நாளும் நாராயநாழியால் அளிக்கப்பட்ட நெய் கொண்டு விளக்கேற்ற கோயிலார் இசைந்தனர்.

இக்கோயிலின் பெருமண்டபத் தூண் ஒன்றின் நாற்புறத்தும் பொறிக்கப்பட்டுள்ள உத்தமசோழரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு உத்தமசீலிச் சதுர்வேதிமங்கலத்து ஆட்சிக்குழுவான பெருங்குறி சபை பாலைத்துறைக் கோயிலில் திருவிழா நடத்துவதற்காக வாய்ப்பாக நிலத்துண்டொன்றை விற்பனை செய்த தகவலைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டால் அப்பகுதி நிலங்களுக்கப் பாசனமளித்த வாய்க்கால், ஊரின் வடக்குத் திசையிலிருந்த பெருவழிகள் தெரிய வந்துள்ளன.

1907,1908 ஆம் ஆண்டுகளில் படியெடுக்கப்பட்ட 2 கல்வெட்டுகளின் விடுபட்ட பகுதிகளாகக் கிடைத்திருக்கும் பதிவுகள் பல அரியத் தகவல்களைத் தருகின்றன. உத்தமசோழர் காலக் கல்வெட்டு இப்பகுதிகளில் வயல் வரம்புகள்கூட பெயரிடப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. வரிநீக்கப்பட்ட நிலத்துண்டுகள் இக்கோயிலுக்கு நந்தவனம் அமைக்கவும், பிற பணிகளுக்காக விற்கப்பட்ட செய்தியும், அந்நிலத்துண்டுகளின் எல்லைகளாக கோதண்டராமணன், ஆதித்தன் முதலிய அரசர், திரிபுவனமாதேவி, சூளாமணி, சோழமாதேவி முதலிய அரசிகள் பெயரில் அமைந்த நீர்வடிகால்களும், வாய்க்கால்களும் இருந்த தகவலும் இப்பதிவால் தெரிய வந்துள்ளன. காவிரியாற்றிலிருந்து பெருவாய்க்கால்களுக்கு நீர்பிரித்த தலைமதகுகள் குணசீலவாய், பாலைவாய் என அந்தந்த ஊர்களின் பெயர்களைக் கொண்டிருந்தன. தோகமங்கலம், தீயன்குடி, கருவரங்குறை, திருப்புத்தூர், துவேதை, கோமபுறம் முதலிய பல ஊர்களின் பெயர்களும், பல நில உரிமையாளர்களின் பெயர்களும் இப்பதிவில் உள்ளன.

இக்கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பு பற்றிய தகவல் கல்வெட்டுத்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: