திருப்பத்தூர் அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே நந்தி பெண்டா பகுதியில் கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள வெலக்கல் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார், சமூக ஆர்வலர் முத்தமிழ் மற்றும் ஆய்வு மாணவர் எல்வின் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது வெலக்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட நந்திபெண்டா என்னும் சிற்றூரில் கற்திட்டை அமைப்புடன் கூடிய நடுகல் ஒன்றை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘இந்த நடுகல்லானது தலா 5 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்ட நான்கு பலகை கற்திட்டையினுள் அமைக்கப்பட்டுள்ளது. நடுகல் இடம் பெற்றுள்ள பலகை கல்லில் வீரன் ஒருவன் தன் வலது கையில் வாளும், இடது கையில் வில்லும் ஏந்தியவாறு உள்ளான். அவனது நெற்றியில் திலகமாகப் பிறைக்குறி காணப்படுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கழுத்திலும் கைகளிலும் அணிகலன்களை அணிந்துள்ளான். இடையில் கச்சையும் அதனோடு சிறு கத்தியும் வைத்துள்ளான். அருகில் வீரன் உயிர்நீத்தவுடன் அவனோடு தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட பெண் உருவமும் இடம்பெற்றுள்ளது. அப்பெண் அவனது மனைவியாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

இந்நடுகல்லின் சிறப்பம்சம் என்னவென்றால், நடுகல் அமைக்கப்பட்டுள்ள கற்திட்டையின் மேற்புறக் கூரையாக விளங்கக்கூடிய பலகைக் கல்லின் மேற்புறம் வீரனது உருவம் கம்பீரமான தோற்றத்தோடு கோட்டுருவமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில் வீரன் வலது கையில் வாளும், இடதுகையில் வில்லுடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். இது பக்கவாட்டில் இருந்து பார்க்கக் கூடியதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பாகும் என்றனர்.

தொடர்ந்து, அந்த நடுகல் குறித்து அவ்வூர் மக்களிடம் குழுவினர் கேட்டபோது படவீட்டம்மன் என்றனர். அதாவது படைவீட்டம்மன் என்ற பெயர்தான் காலப்போக்கில் மருவி படவீட்டம்மன் என்றாகியுள்ளது. இப்பெயரையும் நடுகல்லின் அமைப்பினையும் பார்க்கும்போது 14 அல்லது 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும். போரில் மடிந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் ஆகும். அங்குள்ள பட்டாளம்மன் கோயில் வளாகத்தில் இந்த நடுகல் உள்ளது. இவ்வளாகத்தில் மேலும் ஒரு முக்கோண வடிவக்கல் நடப்பட்டுள்ளது. அதனைக் ‘கோ’ கல் என்றழைக்கின்றனர். இக்கல் ஒருகாலத்தில் இறந்த கோயில் பசுவின் நினைவாக வைக்கப்பட்டுள்ளதாக இவ்வூரிலுள்ள முதியவர்கள் கூறுகின்றனர். இந்நடுகல் மற்றும் ‘கோ’ கல் இப்பகுதியின் வரலாற்றுப் பின்புலத்தினை எடுத்துக் கூறுவதாக உள்ளது’ என்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>