தொண்டி சமண பள்ளி பாரம்பரிய சின்னமாகுமா ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது !

தொண்டி சமண பள்ளி பாரம்பரிய சின்னமாகுமா ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது !

தொண்டி சமண பள்ளி பாரம்பரிய சின்னமாகுமா ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது !

‘ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, சுந்தரபாண்டியன் பட்டினத்தில் உள்ள, ஒன்பதாம் நுாற்றாண்டு சமண பள்ளியை, பாரம்பரிய சின்னமாக்க வேண்டும்’ என, தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தற்போது, இடைய மடம், ராமர் பாதம் என்ற பெயர்களில், ஊர் மக்களால் வணங்கப்படும் கோவில், ஒன்பதாம் நுாற்றாண்டில், சமணப் பள்ளியாக இருந்துள்ளது. அதை, ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தினர், கள ஆய்வின் மூலம் அறிந்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அதற்கான ஆதாரங்களாக, 23ம் தீர்த்தங்கரரான, பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம், மான ஸ்தம்பம், பாத வழிபாடு, சித்த சக்கரம் ஆகியவை கிடைத்தன. அதனால், சமண மதத்தினரும், ஊர் பொதுமக்களும், பழமையான அந்த சமணப் பள்ளியை பாரம்பரிய சின்னமாக்கி, பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

சமணப் பள்ளியின் தொன்மை பற்றி, தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது: கொடி மரம் போன்ற, ஐந்தடி உயர சதுர கல்லால் ஆன, மானஸ்தம்பம், செவ்வக வடிவ மூல ஸ்தானம், முன் மண்டபம் என்ற அமைப்புடன் இப்பள்ளி, கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கீழ்பகுதியில் தீர்த்தங்கரர்களின் உருவங்களும், முன்மண்டபத்தின் வலதுபுற சுவரில், 27:17 செ.மீ., அளவில், நின்ற கோலத்தில், பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பமும் உள்ளன.

இது, மதுரை மாவட்டம், கீழக்குயில்குடி, பேச்சிப்பள்ளத்தில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தை ஒத்துள்ளதால், இதன் காலம், கி.பி., ஒன்பதாம் நுாற்றாண்டாக இருக்கலாம்.

சமணப் பள்ளியின் கருவறையில், அமர்ந்த நிலையில் இருந்த சமண தீர்த்தங்கரர் கல் சிற்பம், நான்கு ஆண்டுகளுக்கு முன், காணாமல் போய் விட்டது. வெளிச்சுவரில், சித்த சக்கரம் உள்ளது. கருவறைக்கு மேல், விமானம், கோபுரம் இல்லாமல், தட்டையாக உள்ளது. சதுர வடிவ துாண்கள், தரங்க போதிகை அமைப்பில் உள்ளதால், பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.

இப்பள்ளியில், பல மீன் சின்னங்கள் உள்ளதால், மீன் வாகனத்தை கொண்ட, பதினெட்டாம் தீர்த்தங்கரரான அரநாதருக்கோ, மீனவர்களுக்கோ, பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.

மருத்துவ தானம் : முன்மண்டப சுவரில், ஒருவர் உரலில் மருந்து இடிக்கும் சிற்பம் உள்ளதாலும், அவ்வூரில் மருத்துவ செடிகள் கிடைப்பதாலும், சமண முனிவர்கள், அங்கு மருத்துவ சேவை செய்திருக்கலாம் என, அறிய முடிகிறது.

பாத கோவில் : இப்பள்ளியிலிருந்து, ஐம்பது அடி துாரத்தில், நான்கு கல் மண்டபத்தில், ஒரு ஜோடி கல் பாதங்களை கொண்ட, பாத கோவில் உள்ளது. இதை, ராமர் பாதம் என்கின்றனர். அங்குள்ள, இரு துாண்களில், இருவர் வணங்கும் நிலையில், அவர்களின் தலைக்கு மேல் ஒரு குடை உள்ளதால், சமணர்களின் பாத கோவில் என்பது உறுதியாகிறது.

இப்பகுதி, விஜயநகர மன்னர்கள் காலத்தில், மதங்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் சேதம் அடைந்திருக்கலாம். சமணர்கள், வேறு மதங்களுக்கு மாறிய பின், பள்ளிகள் கைவிடப்பட்டு, மடங்களாகவும், கோவில்களாகவும் மாற்றப்பட்டிருக்கலாம். இடிந்த இப்பள்ளியை சீரமைக்கும் போது, கற்களும், சிற்பங்களும் மாறி, சேதம் அடைந்துள்ளன, என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>