மூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர்!

மூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர்!

மூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர்!

வந்தவாசி – திண்டிவனம் பாதையில் 8 கி.மி. தொலைவில் தெள்ளாறு உள்ளது. தெள்ளாறு பேருந்து நிறுத்தத்திற்கு அருகே கோவில் உள்ளது. தமிழக வரலாற்றில் தெள்ளாறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் தெள்ளாறை மையமாக வைத்து நடந்துள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது “தெள்ளாற்றுப் போர்”. இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

முதல் போர் :

பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள். இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இந்த தெள்ளாறு தலத்தில் தான்.

பாண்டியர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்த காலத்தில் பல்லவ நாட்டை ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825 – 850), இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை மூன்றாம் நந்திவர்மன் எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர் கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர்.

அது முதல் நந்திவர்மன் “தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்” என போற்றப்பட்டான். இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற “நந்திக் கலம்பகத்தில்” இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள். இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக் காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர். பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலை நிறுத்திய போராக இது விளங்கியது.

மூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர்!

மூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர்!

இரண்டாவது போர் :

அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு – விஜயலாயன் தொடங்கி, ராஜ ராஜன் சோழன், ராஜேந்திர சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது இந்த தெள்ளாற்றில் நடந்த போரினால் தான். சோழர்கள் வீழ்ந்த இடம் இந்த “தெள்ளாறு” தான் .

சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான், பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான்,அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.

மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது.

நந்திக் கலம்பகம் :

நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும்.

மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.(825 – 850) என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சி, மாமல்லபுரம், மயிலை ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட் சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.

நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்கு செய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டன. அறம் வைத்துப் பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் பாட விரும்பினான்.

நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது.

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-869)

தந்திவர்மனுக்கும் கதம்ப இளவரசிக்கும் பிறந்தவன் மூன்றாம் நந்திவர்மன். இவன் ஆற்றல் மிக்கவனாக விளங்கினான். இழந்த பல்லவப் பேரரசினை மீட்டான். இவனது வெற்றியை நந்திக்கலம்பகம் விளக்குகின்றது. மூன்றாம் நந்திவர்மன் சிறந்த போர்த்திறம் படைத்தவன். இவனுக்கு நந்தி போத்தரசன், நந்தி விக்கிரமவர்மன், விஜய நந்தி, விக்கிரமவர்மன் என்று பல பெயர்கள் உண்டு.

நந்திக் கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப் பாராட்டப்படுகிறான். தெள்ளாறு என்னும் இடத்தில் நடந்த போரில் பாண்டியரை வெற்றி பெற்றதால் இவ்வாறு பாராட்டப்படுகிறான். நந்திக்கலம்பகம் அவனுக்காகவே எழுந்த இலக்கியம் ஆகும். தெள்ளாற்றில் மட்டுமின்றி, வெள்ளாறு, கடம்பூர், வெறியலூர், தொண்டி, பழையாறு ஆகிய இடங்களிலும் பகைவரை வென்றான்.

மூன்றாம் நந்திவர்மன் நந்திக்கலம்பகத்தில் ‘அவனி நாராயணன்’ என்றும், ‘ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்’ என்றும், ‘நுரை வெண்திரை நாற்கடற்கு ஒரு நாயகன்’ என்றும் பாராட்டப் பெறுகின்றான். இவன் காலத்தில் மல்லையிலும், மயிலையிலும் துறைமுகங்கள் அமைந்திருந்தன. இம்மன்னன் கடல் கடந்துசென்று அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தான்.

மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களைத் தோற்கடித்தான். பாண்டியருடன் போர் செய்து வெற்றி வாகை சூடினான். பாண்டியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல்லவ நாட்டுப் பகுதிகளை மீட்டான். வடக்கிலும், தெற்கிலும் பல்லவப் பேரரசிற்கு ஏற்பட்ட ஆபத்துகள் இவனது ஆட்சிக் காலத்தில் ஒழிந்தன.

  • கோ. ஜெயக்குமார்.
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: