தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள ஒலிக் கொள்கை

தொல்காப்பியம் ஒரு முழுமையான இலக்கண நூல். என்றாலும் அதில் சில வெற்றிடங்களும், இடைச் செருகல்களோ என ஐயுற வேண்டிய இடங்களும் உள்ளன. வெற்றிடம் எனக் குறிப்பிட்டதில் ‘எழுத்துகளை எந்த அடிப்படையில் பகுத்து ஆய்வது ‘ என்பது சொல்லப்படவில்லை என்பதும் ஒன்று.
அவரது நூற்பாக்களை ஆய்ந்து நாம்தான் உய்த்தறிய வேண்டும். அப்படி ஆய்ந்ததில் நான் கீழ் வருமாறு அவரது ஒலிக்கொள்கையை வரையறை செய்துள்ளேன்.
தொல்காப்பியத்திற் பொதிந்துள்ள ஒலிக்கொள்கை சுருக்கமாக:
1. உயிரெழுத்து- மூச்சுப்பையின் காற்று மிடற்றொலி எழுப்ப வாயுறுப்புகளின் தடையின்றி வெளிப்படுவன உயிரெழுத்துகள்.
அகரம் – அங்காத்தல்.
இகரம் – அண்ண ஒலி. இதழ் விரிநிலை.
உகரம் – இதழ் கூப்பு நிலை. இதழொலி.
2. மெய்யெழுத்து: மிடற்றொலி எழுப்ப பேச்சுறுப்புகளின் தடையினால் பிறப்பவை. பேச்சுறுப்புகள் எவை என தொல்காப்பியமே கூறும்.
அ. வல்லினம் என்பன நிறுத்தொலிகள். நீட்டி ஒலிக்க முடியாமல் நின்று போகும்.
ஆ. மெல்லினம் என்பன மூக்கொலிகள். மிடற்றொலி வெளிப்பட்டு மூக்கின் வழியாக ஒலிப்பன. ங்ஞ்ண்ந்ம்ன் இவ்வொலி ஒவ்வொன்றையும் எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டி ஒலிக்க முடியும்.
இ. இடையினம் – நிறுத்தொலி அல்லாதன(நீட்டி ஒலிக்க இடமளிப்பன)வும், மூக்கொலியல்லாதனவுமாகி, வாயுறுப்புகளின் தடையினால் உருப்பெறுபவை. ய்ர்ல்வ்ழ்ள் இவ்வொவ்வொன்றையும் நீட்டி ஒலிக்க முடியும்.
3. வல்லினம் தவிர்த்த உயிரொலிகள், மெல்லின, இடையின மெய்கள் ஆகிய மூன்றையும் நீட்டி ஒலிக்க முடியும்.
4. மெய்யெழுத்தின் ஒலிப்பு அரை மாத்திரை என்பது வல்லினத்துக்கு மட்டுமே பொருந்தும். அரை மாத்திரை மட்டுமே ஒலிப்பது வல்லினத்துக்கு மட்டுமே இயல்பு.
5. ஏனய மெய்களை(மெல்லின, இடையின மெய்களை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டி ஒலிக்க முடியும். ஆனாலும் அவை பேச்சில் அரை மாத்திரை மட்டுமே ஒலிக்க வேண்டும் என்பதும், நெடில் இரண்டு மாத்திரை ஒலிக்க வேண்டும் என்பதும் கட்டளையின் பாற்படும்.
(வல்லினத்தைப் பொருத்த வரை அரை மாத்திரை என்பது வல்லினத்தின் இயல்பு, இது கட்டளையல்ல)
6. ஒலிகளை நன்கறிய, எடுத்துக்கொண்ட ஒலி ஒவ்வொன்றினையும் நீட்டி ஒலித்துப் பார்த்துச் சோதிக்க வேண்டும்.
7. இதனால் ஒலி, ஒலிப்புறுப்பு, ஒலிப்பு காலம் போன்றவற்றை அறியலாம்.
8. ஒலிச் சோதனை: சோதனைக்கு எடுத்துக்கொண்ட ஒலியை நீட்டி ஒலிக்க வேண்டும்.
அ. சோதனைக்கு எடுத்துக்கொண்ட ஒலியை சோதனைக்காக நீட்டி ஒலிக்கும்போது தொடக்கத்திலிருந்து கடைசி வரை (இடை வெட்டினாலும்) அவ்வொலி முழுமையாக சற்றும் மாறாமல் ஒலிக்க வேண்டும்.
ஆ. இச்சோதனையில் வெல்வதே தூய தனி ஒலி. தனியொலிகளையே தூய ஒலி(ஒலி அலகு) என்கிறோம்.
காட்டு : ‘க்ஷ ‘ ஒரு எழுத்தென்பார். நீட்டி ஒலிக்க முயன்றால் சோதனையில் க்+ஷ்+அ என மூன்று ஒலிகள் இருப்பதை அறிய முடிகிறது. எனவே இது கூட்டொலி என்பது புலனாகும். எனவே க்ஷ எனும் எழுத்துக்கு உயிரெழுத்திலோ, மெய்யெழுத்திலோ இடம்பெறும் தகுதி இல்லை என்பது தெரிந்துவிடும்.
அப்படியே ஐ ,ஔ எழுத்துகளைச் சோதித்தாலும் அ+ய், அ+வ் என ஒலிக்கும். இவையும் கூட்டொலியின் பாற்படும். தூய தனியொலியல்ல எனத் தெரிந்துவிடுகிறது.
மேற்சொன்னவற்றைக்கொண்டு எந்த மொழியின் ஒலியையும் சோதனைக்கு உட்படுத்தி தமிழிலக்கணத்திற் கூறப்பட்ட எழுத்துப் பகுப்புக்குள் கொண்டுவர இயலும்.
ஆங்கிலத்தில் cat, mat, rat என்பனவற்றில் இடம்பெறும் ‘a’ எழுத்தின் ஒலியைச் சோதனைக்கு உட்படுத்தி அவ்வொலியை தமிழிலக்கண கொண்டுவர முடியுமா என்று முயன்று பாருங்கள்.
குற்றியல் ஒலிகளைப்பற்றி வரும் நாட்களில் தொடரும்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: