தாய்லாந்து, ஒரு தமிழ் மண்!

தாய்லாந்து, ஒரு தமிழ் மண்!

தாய்லாந்து, ஒரு தமிழ் மண்!

தென்கிழக்காசியாவிலுள்ள தாய்லாந்தில் நிலையாகக் குடியேறி வாழும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தாக்கம் பழங்காலத்திலிருந்து தாய்லாந்தில் இருந்தது, இன்றும் ஓரளவு தொடர்ந்து இருந்து வருகிறது.

5,14,000 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள தாய்லாந்தின் வடக்கே பர்மாவும், இந்துமாப்பெருங்கடலும், கிழக்கே தாய்லாந்து வளைகுடாவும், கம்பூசியாவும் (கம்போடியா), தெற்கிலும், வடக்கிலும் லாவோஸ”ம் இருக்கின்றன. மேலும் கிரா பூசந்தி வழியாக மலேசியா தீபகற்பத்தின் எல்லை வரையிலும் தெற்கு நோக்கிச் செல்லும் தாய்லாந்து, மலேசியாவின் எல்லை அருகே இருக்கின்றது. பாங்காக் இந்நாட்டின் தலைநகரமாகும். தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர் சியாம் ஆகும்.

முதல்கட்ட தமிழர் குடியேற்றம்

பண்டைக் காலத்திலும் இடைக்காலத்திலும் வங்காளம், பர்மா நிலவழியாகவும் அல்லது வங்காள விரிகுடா கடல் மார்க்கம் வழியாகவும் தாய்லாந்திற்குச் சென்று வந்துள்ளார்கள். தமிழ்நாடு- தாய்லாந்து பண்டைக் கால உறவினைப் பற்றிப் பட்டினப்பாலை, கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களில் சில குறிப்புகள் உள்ளன. தாய்லாந்துடனான தமிழரின் பண்டைய கால கலாச்சார வாணிப உறவு தொடர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்த பல்லவர் காலத்தில் நீடித்தது. மேலும் தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளைப் பல்லவர்கள் கைப்பற்றினார்கள் என நம்பப்படுகிறது. தாய்லாந்தில் தகுவா-பா என்னுமிடத்தில் ஒரு பல்வவர் காலத் தமிழ் கல்வெட்டுக் கிடைத்திருப்பதால் இக்கல்வெட்டுக் காலத்தில் தமிழ் வாணிபக் குடியேற்றங்கள் தாய்லாந்தில் இருந்திருப்பதைப் பற்றிச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

இக்கல்வெட்டில் சேனாமுகம் என்ற சொல் இருப்பதால் படைப் பிரிவுகள் உடைய வாணிபக் கூட்டுறவுச் சங்கங்கள் இருந்ததையும், பல்லவர் காலத்தில் தாய்லாந்து தீபகற்பத்தில் குடியேறியவர்களின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இப்படைகள் உதவியிருக்கலாம் என்றும் அறிய வருகிறோம். இந்தக் கல்வெட்டு பழைய தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு விசயநந்தி விக்கிரவர்மனின் திருவல்லம் கல்வெட்டோடு ஒப்புமையுடையதாகக் காணப்படுகிறது. விசயநந்திவர்மன், பல்லவப் பேரரசர்களுள் இறுதியாகச் சிறப்புற்று விளங்கிய மூன்றாம் நந்திவர்மன் ஆவான். இப்பல்லவ அரசன் கி.பி. 846 முதல் 869 வரை ஆண்டவன் ஆவான். இக்கல்வெட்டு வாசகங்கள் மூலம் தமிழகத்து ‘மணிக்கிராமம்’ என்ற வணிகக் குழுவினரைச் சேர்ந்த வணிகன் ஒருவன் தாய்லாந்திலுள்ள விஷ்ணு கோயிலில் குளம் ஒன்றை வெட்டி மூன்றாம் நந்திவர்மனின் பட்டப் பெயரையே குளத்திற்கும் பெயராய் வைத்தான் என்று அறிய முடிகிறது. தாய்லாந்தில் ஸ்ரீதெப் எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டு பல்லவ கிரந்த முறையைப் பயன்படுத்தி எழுதப் பட்டிருக்கின்றது. இக் கல்வெட்டு இன்று தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் கம்போடியா அரசர்களும் பல்லவர்களுக்குரிய ‘வர்மன்’ என்ற பட்டப் பெயரைப் பூண்டு இருந்தனர். கம்போடிய அரசர்களின் பெயர்கள் முறையே பலவர்மன், சித்திரசேசனம், மகேந்திரவர்மன், ஈசானவர்மன், இரண்டாம் பலவர்மன், ஜெயவர்மன், இரண்டாம் ஜெயவர்மன், கிருதவர்மன், சிரேஷ்டர்வர்மன், உருத்திரவர்மன், யசோவர்மன், ஐந்தாம் ஜெயவர்மன், ஹர்ஷவர்மன், சூரியவர்மன் என்று அமைந்துள்ளன. இந்தப் பெயர்களில் ‘வர்மன்’ எனும் பெயர்ச்சொல் ‘சத்திரியரை’க் குறிக்கும் சிறப்பு பெயராக அமரகோசம் எனும் சமஸ்கிருத நிகண்டும், தமிழ்நிகண்டுகளும் தெரிவிக்கின்றன. மேலும் கி.பி.ஏழாம் நூற்றாண்டளவில் ‘வர்மன்’ எனும் பட்டப் பெயரைச் சூடியிருந்த இந்திய அரசர்கள் பல்லவரே ஆவர். எடுத்துக்காட்டாகக் கம்போடிய அரசர் பலவர்மனுக்குப் பிறகு சித்திரசேனன் ‘மகேந்திரவர்மன்’ (கி.பி 604-627) என்ற பட்டப் பெயருடன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

அதே காலத்தில் தமிழ்நாட்டில் பல்லவ அரசன் மகேந்திரவர்மன் ஆட்சி புரிந்து வந்தான். இந்திய அரசர்களுள் பல்லவ மரபினைத் தவிர, பிற அரச மரபினருள் யாரும் ‘மகேந்திரன்’ என்றபெயரையோ ‘வர்மன்’ என்ற பட்டப் பெயரையோ அக்காலத்தில் பெருவழக்காகச் சூட்டிக் கொள்ளவில்லை. இச்சான்றுகளிலிருந்து பல்லவர்களுக்கும் தாய்லாந்தை ஆட்சி செய்து வந்த கம்போடியா அரசர்களுக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டுமெனப் புலனாகிறது.

இரண்டாம் நரசிம்மன் எனும் புகழ்வாய்ந்த இராசசிம்மன் காஞ்சியில் கைலாச நாதர் கோயிலை எழுப்பியவன். இப்பல்லவ அரசன் மனைவி ரங்கபதாகை தென்கிழக்காசியாவை ஆண்டு வந்த சைலேந்திர அரசனின் மகள் என காஞ்சிக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. பல்லவ காஞ்சியில் உருவாகிய ‘சகா’ காலக் கணிப்பு முறை(Saka era) தென்கிழக்காசிய நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. தவிர காரைக்கால் அம்மையார் வழிபாடு இருந்ததாகக் கிடைத்திருக்கும் சான்றுகள்; எட்டாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இந்தோனேசியா சென்றதாகக் கிடைக்கும் மூலங்கள்; காஞ்சியைச் சேர்ந்த வினிடாருசி கி.பி ஆறாம் நூற்றாண்டில் வியட்நாமில் ஜென்புத்த சமயத்தை அறிமுகப் படுத்தினார் எனும் செய்திகள்; காஞ்சிபுர வஜ்ரபோதி கி.பி எட்டாம் நூற்றாண்டில் வஜ்ராயன புத்த சமயத்தைத் தென் கிழக்காசியாவில் பரப்பினார் என விளக்கும் ஆதாரங்கள்; தென் கிழக்காசிய கட்டிட, சிற்பக் கலையில் உள்ள பல்லவ கட்டிடக்கலைத் தாக்கங்கள்-முதலிய வரலாற்றுக் குறிப்புகள் பல்லவர்களுக்கும் தென்கிழக்காசியாவிற்கும், குறிப்பாகத் தாய்லாந்திற்குமுள்ள தொடர்பினை உறுதிபடுத்துகின்றன.

பொதுவாகப் பல்லவர்கள் காலத்தில் இந்தியர்கள் தென்திசை வழியைப் பயன்படுத்தினார்கள். காஞ்சிபுரத்திலிருந்து மார்குயி, தெனாசரீம், தாய்லாந்திலுள்ள தகுவாபா, புகட்தீவு, திராங் முதலிய இடங்களுக்கும், மேலும் அங்கிருந்து தெற்கே உள்ள சுமத்திரா, ஜாவா, போர்னியோ தீவுகளுக்கும் சென்றதாக சான்றுகள் கிடைத்திருக்கின்றன (Mahash Kumar Sharan: 1974:15) இவ்வழியாகப் பல்லவர்கள் காலத் தமிழர்கள் சமயம், கலை பரப்புவதற்காகவும் வாணிபம் செய்வதற்காகவும் சென்றார்கள் என ஓரளவு அறுதியிட்டுக் கூறத் தொடர்புள்ள ஆவணங்கள் கிடைத்துள்ளன.

இராசராச சோழனின் மெய்க்கீர்த்தியும், தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயக் கல்வெட்டுகளும் சோழர்களுக்கும் தாய்லாந்துக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. சோழர்கள் கடாரத்தைக் கைப்பற்றிய பின் தாய்லாந்தின் சில பகுதிகள் சோழர்களின் மேலாட்சியின் கீழ் வந்தன என நம்பப்படுகிறது. ஏனென்றால் தென் தாய்லாந்தும் இணைந்த பகுதிதான் கடாரம் என்று ஒருசாரர் குறிப்பிடுகின்றனர். இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழனுக்கு அவன் கடாரத்தை வென்றதால் ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப் பெயர் வந்தது. 10 ஆம் நூற்றாண்டில் தென் தாய்லாந்தில் கடாரம் என்ற பெயரில் சோழர்களின் மேலாதிக்கம் இருந்தது என புகிட்சுங்கோலா (Bukit Sungala) போன்ற பகுதிகளிலிருந்து கிடைக்கும் சான்றுகளிலிருந்து தெரிகிறது. கடாரப் படையெடுப்பு விவரங்கள் தஞ்சை பெரிய கோயிலின் உள்ளே நடு விலமைந்த மேற்குச் சுவரிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

இராசேந்திரன் தன்னுடைய ஆற்றல்மிக்க கப்பற்படையைக் கொண்டு கடல் நடுவிலுள்ள கடாரத்தின் அரசனாகிய சக்கிரம விசயோதுங்கவர்மனைப் போரில் புறமுதுகிடச் செய்து, அவனது பட்டத்து யானையையும், பெரும் பொருளையும், வித்தியாதரத் தோரணத்தையும் கவர்ந்து கொண்டான். ஸ்ரீவிசயம், பன்னை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், மாபப்பாளம் (பப்பாளம்), மெவிலிபங்கம் (இளம்பங்கம்), வளைப்பந்தூர், தக்கோலம், மாடமலிங்கம் (தமாலிங்கம்), இலாமுரிதேசம், நங்காவரம், கடாரம் ஆகிய இடங்களையும் கைப்பற்றினான் என்று இராசேந்திர சோழன் புகழைப் போற்றும் வகையில் கல்வெட்டுச் செய்திகள் அமைந்துள்ளன. இதில் கூறப்பட்டுள்ள மூன்று இடங்கள் தாய்லாந்தில் உள்ளன. அவையாவன: இலங்காசோகம் (இன்றைய சொங்லா-Songla), மாடமலிங்கம் (இன்றைய நாகோன் சிதம்மாரட் – Nakkhon Sithammarat), ஸ்ரீவிசயா (இன்றைய நாகோன் பத்தோம்-Nakhon Pathom) ஆகும்.

தாய்லாந்திற்கு வெகு அருகில் இருக்கும் நாடு கம்போடியா. கம்போடியா அரசர் அருகே தாய்லாந்தில் அமைந்திருந்த ஸ்ரீவிசயா அரசின் தாக்குதலிலிருந்து தன்னுடைய நாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் சோழ அரசரின் உதவியை நாடியதாகவும், சோழ அரசருக்கு ஒரு தேர் அன்பளிப்பாக அனுப்பியதாகவும் தஞ்சாவூர் கரந்தை செப்பேடுகள் கூறுகின்றன. இராசேந்திரனின் எட்டாம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1020) இந்தக் கரந்தைச் செப்பேடுகள் வெளியிடப் பட்டன. கடாரம் போன்ற தென்கிழக்காசிய நாடுகளிலும் புத்த சமயத்தைப் பரப்புவதற்குப் பாலி, சமஸ்கிருதம் போன்ற வடமொழி களையும் தமிழையும் தொடர்பு மொழிகளாக வீரராசேந்திரன் பயன்படுத்தினான்.

சோழர்கள் ஆட்சி செய்த பொழுது புத்த சமயம்

தாய்லாந்தில் ஓரளவு தழைத்தோங்கத் தொடங்கியது. கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம், சைவ சித்தாந்தம் நூல்கள் முதலிய தமிழ் மணம் கலந்த இலக்கியங்கள் தென்கிழக் காசியாவிற்குச் சென்று பரவின. இதனால் தென்கிழக்காசிய மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் கலந்தன. இம்மாதிரியான தமிழ்மொழி தாக்கத்தின் சூழமைவு சோழர்கள் காலத்தில் தோன்றி வளர்ந்தது எனலாம்.

தாய்லாந்து தமிழர்கள்

இன்றைய நிலை :

தாய்லாந்தில் முதற்கட்டமாக குடியேறியிருக்கும் தமிழர்களின் சந்ததியினரையும் அடுத்தடுத்த கட்டமாக குடியேறிய தமிழர்களையும் நான்கு பிரிவாக இன்று பிரிக்கலாம். (1) தாய் இனத் தமிழர்கள் (2) தாய் பிராமணர்கள் (3) தமிழ்-தாய் வழித் தோன்றல்கள் (4) தமிழ் முஸ்லீம்கள் எனப் பிரிக்கலாம்-அவர்களின் இன்றைய நிலையை இப்போது காண்போம்.

தாய் தமிழர்கள்:

பல்லவர்கள் காலத்திலும், சோழர்கள் காலத்திலும் தமிழர்கள் குறிப்பாகக் கல்தச்சர், ஸ்தபதி, பிராமணர், வணிகர் முதலியோர் தாய்லாந்தில் குடியேறினர். அவர்களில் பலர் அந்நாட்டிலேயே தங்கி நிலைத்த குடிமக்களாய் வாழ்ந்து வந்தனர். தாய்லாந்தில் குடியேறிய திராவிட பெருங்குடி மக்கள் தம் நாட்டிலிருந்து செல்லும் போது சேர நாட்டவராக, பாண்டிய நாட்டவராக, சோழ நாட்டவராக, தொண்டை நாட்டவராகச் சென்றனர். இன்னும் சொல்வதானால் பிராமிணர்களாக, ஆதிசைவர்களாக, வேளாளர்களாக, செட்டியார்களாக, அகம்படியர்களாக, மறவர்களாக, கம்மாளராக, பிற இனத்தவர்களாக அங்குச் சென்றனர்.

ஆனால் தாய்லாந்தில் இடைக்காலத்திலும் இடைக்காலத்திற்கு முன்பும் குடியேறியத் தமிழ் மக்கள் தமிழ் மொழியை மறந்து விட்டனர். ஏன், தமிழ் இனத்தையே மறந்து விட்டனர். இப்பொழுது அவர்கள் தாங்கள் தமிழர்களின் சந்ததிகள் என்றோ இந்தியர்களின் சந்ததிகள் என்றோ அறியார்கள். தாய்லாந்து பண்பாட்டுடன் ஒருசேரக் கலந்து விட்ட இப்பண்டைய, இடைக்காலத் தமிழர்களை தாய் இனத் தமிழர்கள் என்றழைப்பதை விட தாய் இன மக்கள் என்றே அழைப்பதுதான் சரி. அதுவே வரலாறு நமக்களிக்கும் சான்று.

தற்போது தாய்லாந்து தென்பகுதிகளில் வாழும் மக்களின் தோல் நிறம், நெற்றி, புருவம், கண்ணிமை அமைப்புகள், கண்கள், மூக்கு, காதுகள் முதலிய அங்கங்களின் அமைப்பு ஆண்களானாலும் பெண்களானாலும் திராவிட முகத் தோற்றங்களை ஒத்திருக்கின்றன. வடகிழக்குத் தாய்லாந்தில் கம்போடியா எல்லை அருகே உள்ள சில தாய் பிரிவினரும் இம்மாதிரி அங்க அமைப்புகளுடன் இருப்பதை காணலாம். ஆகையால் பண்டைய காலத்திலும் இடைக்காலத்திலும் குடியேறிய தமிழர்கள் தாய்லாந்து நாட்டினரோடு, குறிப்பாகத் தென் தாய்லாந்து நாட்டினரோடு ஒருசேரக் கலந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம்.

தாய் பிராமணர்கள் :

பண்டைக்காலத்தில் தாய்லாந்து சென்ற தமிழர்களுள் தமிழ்ப் பிராமணர்கள் ஓரளவு தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றி வந்ததாய் ஜான்கிராபோர்டு (1822) என்பாரின் வரலாற்றுக் குறிப்பேட்டிலிருந்து அறிகிறோம். இத்தாய் பிராமணர்களின் முன்னோர்கள் தமிழ் நாட்டிலுள்ள இராமேசுவரத்திலிருந்தும், வடஇந்தியாவில் உள்ள காசியிலிருந்தும் வந்து தாய்லாந்தில் குடியேறியவர்கள். இவர்கள் தாய்லாந்து அரச குடும்பத்தினரின் புரோகிதர்களாகவும் விளங்கினர். பட்டராகர் என்ற பட்டத்தை இவர்கள் பெற்றனர். இவர்கள் தாய்லாந்திலிருந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். இன்று எல்லோரும் சாமியராக மாறிவிட்டனர். இப்பிராமணக் குழுவினரின் தலைவர் ஒருவர் “தாங்கள் தாய்லாந்தில் குடியேறிய இந்தியர்களின் கால்வழியில் இருபத்து ஐந்தாவது தலைமுறையாகத் தோன்றியவர்கள் என்றும், தங்கள் முன்னோர் இராமேசுவரத்தி லிருந்து தாய்லாந்திற்கு (சியாமிற்கு) வந்தவர்கள்” என்றும் கூறியதாக தொ.பொ. மீனாட்சி சுந்தரனார்(சியாமில் திருப்பாவை திருவெம்பாவை, பக் 36) கூறுகிறார்.

தாய் பிராமணர்கள் சோதிடம், நாள்கோள் பார்த்துக் கூறுதல் முதலியவற்றில் வல்லவர்களாக விளங்குகின்றனர். அரசனுடைய அவைக்களத்தில் நடக்கும் முடிசூட்டு விழா போன்ற பலவகை விழாக்களைச் சிறப்பாக நடத்திவைப்பதில் இவர்கள் பெரும்பங்கு கொண்டுள்ளனர். தாய்பிராமணர்கள் பிராமணராக ஆவதற்கு உபநயனம் போன்ற சடங்கு ஒன்று நிகழும். அதில் மூன்று இழை பூனூலை அணிந்து கொள்வார்கள். பின்னர் ஒரு சடங்கு நிகழும். அப்போது ஆறிழைப் பூணூல் பூணுவார்கள். இவர்களுடைய நீண்ட குடுமியைக் கொண்டே இவர்களைப் பிரித்தறியலாம். பாங்காக் தாய் பிராமணர் மூன்று கோயில்களைச் சுற்றியே வாழ்கின்றனர். முன்னோர் காலத்திலிருந்து இன்றளவும் அவர்களிடம் இருக்கும் சமஸ்கிருத நூல்கள், தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் முதலியவற்றை மனப்பாடமாக ஓதுவதற்குச் சிறுவயதிலேயே அவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. தாய்லாந்து பிராமணவழித் தோன்றல்கள் மட்டும் தாம் தாய்பிராமணர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டு பிராமணர்கள் போலல்லாமல் தாய் பிராமணர்கள் அசைவம் உண்கின்றனர். ஆண்டிற்குகொருமுறை பதினைந்து நாள் விழாவான திருவெம்பாவை-திருப்பாவைத் திருவிழா காலத்தில் மட்டும்தான் இவர்கள் புலால் உண்ணாதவர்களாக இருக்கின்றனர்.

இத்தாய் பிராமணர்கள் தமிழ்நாட்டு ஸ்மார்த்தா பிராமணர்களைப் போலவே சிவன், விஷ்ணு முதலிய இருவரையும் வில்வ இலையால் பூஜை செய்து பக்தியுடன் வழிபடுகின்றனர். இத்தாய் பிராமணர் கோயிலுக்குள் வில்வ மரம் இருக்கின்றது. தினம் கடவுள் முன் தியானம் செய்யும் பொழுது ஓம் நமச்சிவாயா, ஓம் கணேச நமோ நமஸ்தே, ஓம் லட்சுமிநாராயண போன்ற மந்திரங்களை ஜபிக்கின்றனர். இவர்கள் அன்றாட வழிபாட்டின் போது நமோத்துவ பாசுவ ஆர புத்தா போன்ற புத்த சமய மந்திரங்களையும் ஓதுகின்றனர். புத்த சமயத்தைப் பின்பற்றும் தாய்லாந்தில் வாழும் இத்தாய் பிராமணர்கள் பௌத்தர்களாகவும் விளங்குகின்றனர். புத்த குருமார்களும் தாய் பிராமணர்கள் கோவிலுக்குச் சிலசமயம் வந்து இந்து கடவுள்களை வழிபடுகின்றனர். குடியேறிய தமிழர்கள் மூலமாக பல காலமாக தாய்லாந்தில் நிலைபெற்ற சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் புத்த வழிபாட்டுடன் இணைந்து சிவன், விஷ்ணு, புத்தர் என மூவரையும் வணங்கும் வழிபாடாக தாய் பிராமணர்களிடையே நிலவி வருகிறது.

தாய் தமிழர்கள்

தாய்லாந்திலுள்ள தமிழர்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம். தமிழ்-தாய் இனக்கலப்பு மூலம் தோன்றியத் தமிழர்கள், இனக்கலப்பு இல்லாத தமிழர்கள். இனக்கலப்பு இல்லாத தமிழர்கள் மிகக் குறைவு. இன்று பாங்காங்கில் மட்டும் தமிழ்ப் படிக்கத் தெரிந்தவர் 500 பேர். புக்கட் எனுமிடத்தில் தமிழ் பேசத் தெரிந்த சிறு தமிழ் வியாபாரிகள் 100 பேர் இருக்கின்றனர். வடக்கில் பர்மா எல்லையருகே பலகாலமாக மேசாட் எனுமிடத்தில் 30 அல்லது 35 தமிழர் குடும்பங்களும், சியாங்ரெய் எனுமிடத்தில் 5 அல்லது 6 தமிழ்க் குடும்பங்களும், காஞ்சன புரியில் 10 அல்லது 15 குடும்பங்களும் இருக்கின்றன. தொடக்கத்தில் தமிழர் கால்நடை வாணிபம் செய்தனர்.

இவ்வாணிபத்தால் சில செல்வந்தராகவும் மாறினர். பல தமிழர்கள் சிறுசிறு வாணிபங்களில் ஈடுபட்டனர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாங்காக் நகரம் அமைக்கப்பட்ட காலத்தில் வாதேவமுனி எனும் தமிழர் அரசகுருவாகப் பணியாற்றினார். பழைய தாய்லாந்தில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர் கள் வைத்திருந்த கம்பெனியில் தமிழர்கள் சேர்ந்து பணியாற்றினார் கள். பொதுவாகப் பிள்ளை, செட்டியார், நாயுடு (நாட்டி), படையாட்சி, வாண்டையார் சாதியைச் சேர்ந்த தமிழர்கள் தாய்லாந்தில் குடியேறினார்கள். இவர்களில் பலர் உள்ளூர் தாய்லாந்து பெண்களையே திருமணம் செய்து கொண்டனர். இன்று மிகக் குறைவான செட்டியார் குடும்பங்களே தாய்லாந்தில் இருக்கின்றன. இச்செட்டியார் சந்ததியினர் இன்று பணம் வட்டிக்குக் கொடுப்பதில்லை, வாணிபம் செய்வதில்லை படித்துப் பட்டம் பெற்று வேலைக்குப் போகின்றார்கள். இவர்களுக்கு இந்தியாவில் உறவினர் யாரும் இப்போது இல்லை. இவர்கள் தமிழக சமயச் சடங்குகளைப் பின்பற்றுகின்றனர். அப்புராவ் எனும் தமிழர் ஓர் பணக்காரர். யூனிசெம் எனும் மருந்து பொருள் தொழிற்சாலை வைத்திருக்கிறார்.

முன்பு தாய்லாந்து தமிழர்களில் செட்டியார்களின் கையே ஓங்கியிருந்தது. இவர்களது மூன்றாவது நான்காவது தமிழ்ப் பரம்பரையினர் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் இழந்து விட்டார்கள். இங்கு வளர்ந்த இளம்பரம்பரையினருக்குத் தமிழ் கற்றுத் தரவில்லை. முன்பு பல தமிழர்கள் கூலியாட்களாகத்தான் தாய்லாந்திற்கு வந்தார்கள். கடலை விற்பது, செய்தித்தாள்கள் போடுவது, காவலராய் பணிபுரிவது போன்ற தொழில்களைத்தான் செய்து வந்தார்கள். தாய்லாந்து அரசாங்கத்தின் கட்டாயக் கல்வி, இலவசக் தொடக்கக் கல்வி வாய்ப்புகள் மூலம் இத்தமிழர்களின் வாரிசுகளுக்குக் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது. வேலை வாய்ப்பு கிடைத்தது. சிலர் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர்களாகப் பணி புரிகின்றனர். இப்போது தாய் தமிழரின் இளம் பரம்பரையினர்களில் 50 சதவீதம் பேர்கள் கல்லூரிகளில் படித்தவர்களாக உள்ளனர்.

கல்லூரிகளில் படிக்காதவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருக்கின்றது. படித்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய கம்பெனி களில் பணிபுரிகின்றனர். பாங்காக்கிலிருந்து 50 கி.மீ தொலைவில் ஆசியாவில் மிகப் பெரியதான ஆசியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனும் கல்லூரி உள்ளது. இங்கு 20 அல்லது 25 தமிழ்
மாணவர்கள் படிக்கின்றனர்.

பெரும்பான்மையான தமிழர்கள் வாணிபத்தில் ஈடுபட்டிருக்கின்றார் கள். சுமார் 1000 பேருக்கு மேல் ஏற்றுமதி-இறக்குமதி தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சிலர் சிறுதொழிற்சாலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அரசுத் துறைகளில் சுமார் ஒரு சதவீதம் தமிழர்கள் பணிபுரிகின்றனர். தமிழர்களுடைய வாரிசுகள் சிலர் உயர் பதவிகளில் உள்ளனர். இளம் பரம்பரையினர்களில் சுமார் 50 சதவீதத்தினர் அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். மீதி 50 சதவீதத்தினர் வாணிபம் செய்கின்றனர். படித்தவர்களில் பெரும் பான்மையோர் தாய்லாந்து நாட்டுக் குடிமக்களாக இருக்கின்றனர்.

தமிழ்-தாய் இன இளம்பரம்பரையினர்களின் உடை உணவுப் பழக்க வழக்கங்கள் தாய்லாந்து நாட்டு மக்களின் உடை உணவுப் பழக்கத்தைப் பின்பற்றியே இருக்கின்றன. பொதுவாகத் தாய்லாந்து மக்கள், தமிழ் மக்களிடையே உள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கின்றது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தமிழ்வழி தாய் பரம்பரையினர் சாம்பார், ரசம், மோர், பாயசம், வடை, அப்பளம், பீன்ஸ் பொரியல், உப்புமா, இட்லி, அப்பம் போன்ற தமிழ்நாட்டு வகை உணவைத் விரும்பிச் சுவைக்கின்றனர். பண்டிகைகளின் போது சைவ உணவு மட்டும்தான் சாப்பிடுவர். வாழை இலையில்தான் (பைதாங்) அன்று சாப்பிடுவர். பொதுவாக இவர்கள் அசைவ உணவு அருந்துவர். பொங்கல் பண்டிகையில் இனிப்புசோறு (கவ்வான்) தயாரிப்பர். முன்பு பொங்கல் அன்று மாடுகளை அலங்கரித்து ஊர்வலம் செல்வர். காளைமாட்டை அடக்குபவர்களுக்குப் பரிசு கொடுப்பர். இன்று இம்மாதிரியான விளையாட்டு இல்லை.

புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்று இளைஞர்கள் முதியோர்களை வணங்கி ஆžர்வாதம் பெற்றுக் கொள்வர். ஒவ்வொரு இந்திய தமிழ்ப் பரம்பரையினர் வீட்டிலும் தீபாவளி சிறப்பாக இரண்டு நாட்கள் கொண்டாடப்படும். தீபாவளியன்று கோவில்களுக்குச் சென்று தமிழ்ப்பாடல்களைப் பாடுவர். தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில்லை. தமிழ்ப் பெண்கள் புடவை கட்டுவதில்லை. தீபாவளி அன்று இந்தியாவிலிருந்து வரவழைக்கப் பட்ட கரையுள்ள வெள்ளை வேட்டியை (பார்கே தோதி) உடுத்துகின்றனர். கோவிலுக்குப் போகும் போது திருநீறு (தொனாறு) மற்றும் குங்குமம், சந்தனம் பூசிக் கொள்கின்றனர்.

தாய்-தமிழ் இளம்பரம்பரையினரில் 95 சதவீதத்தினர் தாய் புத்த சமய திருமணச்சடங்கு முறையையே பின்பற்றுகின்றனர். தமிழ்ப் பண்பாட்டை இழக்காத தமிழகப் பெற்றோர் உயிரோடு இருந்தால் திருமண விழாவின் போது சில இந்துச் சடங்குகள் உண்டு. ஆனால் மிக முக்கிய இந்து, தமிழ்ச் சடங்கு முறையான தாலி கட்டும் முறையை இன்று இவர்கள் பின்பற்றுவதில்லை. மணமகனும் மணமகளும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வழக்கில் இருக்கும் பரிசம் போடுதல், žதனம், வரதட்சணை அளித்தல் பண்பாடு தாய்லாந்து தமிழரிடையே இல்லை. மணமகன் மணமகள் குடும்பத்தினர் மணமகன், மணமகளுக்கு அன்பளிப்பு அளிப்பர். மிகுதியான இளம்பரம்பரையினர் எவரை வேண்டு மானாலும் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். பெரும்பாலும் தந்தை, தாய் அனுமதியுடன்தான் காதல் திருமணங்கள் நடக்கின்றன. இந்துக்கள் திருமணத்தைப் பெரும்பாலும் மாரியம்மன் கோவிலில் நடத்துவர்.

திருமணமானோர் மாரியம்மனின் ஆசியைப் பெறவேண்டும் என்ற பழக்கம் தமிழர் எல்லோரிடமும் நடைமுறையில் இருக்கின்றது. தாய் தமிழர்களின் இல்லத்தில் நடைபெறும் காதுகுத்தும் திருவிழா, குழந்தைக்குப் பெயர் வைக்கும் விழா ஆகியன இந்து-புத்த சடங்கு முறையைத் தழுவி நடத்தப்படுகின்றன. இந்துத் தமிழர்களுக்குத் தனியாகச் சுடுகாடு இல்லை. வட இந்தியர் விஷ்ணு கோவில் எதிரில் வட இந்தியர்களுக்குச் சொந்தமாக இருக்கும் சுடுகாட்டில் தமிழர்கள் இறந்தவர்களை எரிக்கின்றார்கள், அல்லது புத்த கோவிலில் உள்ள சுடுகாடுகளில் இறந்தவர்களை எரிக்கின்றார்கள்.

தமிழ் முஸ்லீம்கள் :

தாய்லாந்தில் சுமார் 1000 தமிழ் முஸ்லீம்கள் குடியேறியிருக்கின்றனர். இவர்களில் பலர் தாய் குடிமக்களாக மாறி விட்டனர். பாங்காங்கில் வாட்கோ பகுதியில் இவர்கள் மிகுதியாக இருக்கின்றனர். அங்கே ஒரு மசூதியும் உண்டு. மாரியம்மன் கோவில் எதிரில் பள்ளிவாசல், தாய் முஸ்லிம் மசூதி இருக்கின்றது. பல மரைக்காயர் குடும்பத்தினர்கள் தாய்லாந்தில் குடியேறி இருக்கின்றனர். சுமார் 500 பேர் வைர வணிகம், துணி வணிகம் செய்கின்றனர். துணியகம், உணவு விடுதி, ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், மிளகாய், அரிசி வணிகம் செய்கின்றனர். சிலர் அரசு நிறுவனங்களிலும் பொறியாளர் களாகவும் பணிபுரிகின்றனர். மேலும் வண்ண கற்கள், அரிய வைரமான பாம்பே வைரம், சபையர், ரூபி, விலை மதிப்புள்ள கற்கள் முதலியவைகள் தொடர்பான வணிகம் செய்கின்றனர்.

தஞ்சாவூர் பாண்டிச்சேரி, காரைக்கால், கீழக்கரை, காரைக்குடி, இராமநாதபுரம், காயல்பட்டணம், சென்னை அருகேயுள்ள புளிக்காடு முதலிய தமிழ்நாட்டு நகரங்களிலிருந்து தாய்லாந்திற்குத் தமிழ் முஸ்லீம்கள் வந்தனர். சுமார் 60 பேர் மூன்று நான்கு தலைமுறை களுக்கு முன் வந்தவர்கள். பலருக்கு இப்போது தமிழ்நாட்டிலுள்ள சொந்த ஊர்களுடன் தொடர்பு இல்லை. žனர், தாய்லாந்துப் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட தமிழ் முஸ்லீம்கள் பலர் உண்டு. சிலர் இந்தியப் பெண்களையும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். திருமணம் செய்து கொண்ட பெண்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டனர். தமிழ்நாட்டு இஸ்லாமிய திருமண முறையே பின்பற்றப்படுகிறது.

தமிழ் முஸ்லீம்கள் தமிழில் எழுத பேசத் தெரிந்தவர்கள். தமிழ் ஆர்வம் உள்ள தமிழர்கள். தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாக்கும் தமிழர்கள். இஸ்லாம் சமயத்தில் மிகுதியானப் பற்றுள்ளவர்கள். பலர் தாய் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு தாய்லாந்திலேயே நிரந்தரமாக வாழ்கின்றனர். ஆனால் இப்போது தாய்லாந்திலேயே பிறந்த இளம் பரம்பரையினருக்குத் தமிழ்த் தெரியாது.இவர்களுக்குத் தமிழ்நாட்டுடன் குறைவான தொடர்புதான் இருக்கிறது. தாய்- மொழியையே பேசுகின்றனர். இட்லி, தோசை, புட்டு முதலியவை களைவிட சோறு, நூடுல்ஸ் இவற்றையே விரும்பி உண்கின்றனர். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் வந்த முஸ்லீம் பெண்கள் தமிழ்நாட்டுச் சேலையையே விரும்பி உடுக்கின்றனர். žயா(Shia) சன்னி, சபி, ஹநாபி என்னும் வேறுபாடுகளை இவர்கள் கண்டு கொள்வதில்லை. ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

மிலாடி நபி, ரம்சான் விழாக்களை சிறப்பாகக் கொண்டாடுவர். பெரும்பான்மை யோர் நோன்பு இருப்பர். தாய்லாந்திலுள்ள அயோத்திய தர்காவுக்கும் நாகூர் தர்காவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கின்றது. தாய்லாந்தில் புகழ்வாய்ந்த தமிழ் முஸ்லீம் குடும்பத்தினர் காரைக்காலிலிருந்து வந்த மரைக்காயர் குடும்பத்தினர். இக்குடும்பத்தினரின் முன்னோர் தாய்லாந்தில் முதலில் துணிக்கடை, வைரவணிகம், கட்டிடம் கட்டும் தொழில் முதலியவற்றைத் தொடங்கினர். இன்று இக்குடும்பத்தினருக்குத் தாய்லாந்தில் மிகுதியான நிலம் சொந்தமாக உள்ளது. இக் குடும்பத்தினரே தாய்லாந்தில் வாழும் மிகப் பெரிய பணக்கார முஸ்லீம் குடும்பத்தினர் ஆவர். சமய நம்பிக்கை வேறுபாடு இருந்த போதிலும் தமிழ் இந்துக்களும் தமிழ் முஸ்லீம்களும் தாய்லாந்தில் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். தாய் தமிழ் முஸ்லீம்கள் அமைதியானவர்கள், திறமையான வணிகர்கள், தாராள மனப்பான்மை உடையவர்கள்.

தாய்லாந்தில் இன்று தமிழ் கிறிஸ்துவர்கள் சொற்ப தொகையில்தான் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர். பாண்டிச் சேரியிலிருந்து வந்தவர்கள். இவர்கள் žனர், பிரெஞ்சு கத்தோலிக்கக் கோவில்களில் வழிபாடு செய்கின்றனர். தமிழை மறந்து விட்டனர். இவர்களுடைய பிள்ளைகளுக்கும் தமிழ் கற்றுத்தரவில்லை.

தாய்லாந்தில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் :

தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழாவின் போது தாய்பிராமணர்கள் தமிழ்பாடல்களான திருவெம்பாவை, திருப்பாவைகள் ஓதுவார்கள். மன்னன் இந்துக் கடவுள்களின் ஆசியைப் பெறுவதற்காக பிராமணச் சடங்குகள் செய்யப்படும். இச்சடங்குகளின் போது பாடும் தேவாரம், திருவாசம், திவ்வியப் பிரபந்தம் ஆகிய தமிழ்ப் பாசுரங்கள் ஓதப்படும்.

தாய்மொழியில் Poet pratu sivaalai (சிவாலயத்தின் நுழைவாயிலைத் திறப்பது), Pit pratu krlilaat (கைலாசத்தின் நுழைவாயிலை அடைப்பது), loripavai (லோரிப்பாவை) என்று அழைக்கப்படும் பாடல்கள் முறையே சம்பந்தர் இயற்றிய திருமுறையில் உள்ள முதல் பதினாறு பாடல்கள், சுந்தரர் இயற்றிய திருமுறையில் உள்ள முதல் பத்துப்பாடல்கள், அப்பர் இயற்றிய நாலாவது திருமுறையில் உள்ள முதல் பத்துப் பாடல்கள், வைணவ ஆண்டாள் இயற்றிய திருப்பாவை என்பன ஆகும்.

இன்று திருப்பாவை, திருவெம்பாவை திருவிழா தலைநகர் பாங்காக்கிலுள்ள பிராமணர் கோவிலில் டிசம்பர் கடைசி வாரத்திலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை 15 நாட்கள் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் தமிழ்ப் பாசுரங்களான திருப்பாவை, திருவெம்பாவை ஓதப்படுகின்றன. இவை பழந்தமிழ் பாடல்களாகவே தாய்லாந்து இசை வடிவத்தில் ஒலிக்கப்பட்டு வருகின்றன. சித்திரையில் தேவாரம், திருவாசகம் பாடல்களும் இவ்விதம் ஓதப்படுகின்றன. புத்தர் கோயில்களில் தாய் பிராமணர்கள் அந்தத் தமிழ்ப் பாடல்களை தவறாமல் சைவ-வைணவ நெறியொலிகளுடன் இசைப்பாக்களாகப் பாடி வரும் மரபும் வழக்கமும் இன்று வரை தொடர்கிறது. பாவைத் திருவிழா பாங்காக்கில் நடப்பதற்கு முன் தாய்லாந்தின் முன்னைய தலைநகரங் களாகிய ஆயுதத்திலும், சுயோதத்திலும், மற்றைய நகரங்களிலும், நகர ஜ“தர்மராஜா என்ற இடத்திலும் நடந்தன என்பதனைக் காட்ட அவ்விடங்களில் ஊஞ்சல் கம்புகள் இன்றும் நின்று நிலவுகின்றன.

திருப்பாவை, திருவெம்பாவை விழாவின் போதும், மன்னர் முடிசூட்டுவிழா முதலிய சடங்குகளின் போதும் வழங்கும் மந்திரங்கள் ஓலைச் சுவடியில் முற்காலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தச் சுவடியை தமிழ்நாட்டிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மைக்ரோ பிள்ம் (micro-film) செய்து வாங்கி வைத்திருக்கின்றது. 418
பக்கமுள்ளதில் ஏறுக்குறைய 53 பக்க அளவு தமிழ்ப் பாடல்கள் நிறைந்துள்ளன.

தாய்லாந்தில் பிள்ளையார், சிவன், பெருமாள் மூவருக்கும் தனித்தனியே கோவில்கள் உள்ளன. இங்குள்ள பெருமாளின் பெயர் சுகோதயப் பெருமாள். சுகோதயம் என்பது தாய்லாந்தின் பெயர். சுகோதயம் என்றால் இன்ப விடியல் என்று பொருள். இக்கோயில் களில் வழிபாடு நடத்தி வைக்கும் தாய் பிராமணர்கள் அரசப் புரோகிதர்களாகப் பாராட்டப் பெறுகின்றார்கள். ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்று விழங்கும் பஞ்ச பிரம்ம மந்திரங்களின் பெயர்களையே தத்தம் பெயர்களாகக் கொண்டுள்ளனர். எனவே ஆகம வழக்கு தாய் லாந்தில் பரவியிருந்தது தெளிவாகின்றது. இப்புரோகிதர்கள் ஒரு காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து வந்து தாய்லாந்தில் குடியேறியவர்கள்.

தாய்லாந்தில் முன்பு ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் அறுவடை திருவிழாவாக திருவூசல் (ஊஞ்சல்) திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. தாய்லாந்து மக்களிடையே தீபாவளிப் பண்டிகை, கார்த்திகை விளக்கு வழிபாடு ஆகியன வழங்கி வருகிறது. கார்த்திகை மாதத்திலும் ஐப்பசி மாதத்திலும் வாழைத் தண்டை மிதக்க விட்டு, அதில் கொடி, காகிதக் குடை, புகை விளக்கு, பூ பொரி முதலியன வைத்து ஆற்றில் விடுகிறனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>