கோவில் கல்வெட்டுகள் தான் வரலாற்று ஆதாரங்கள் : தொல்லியல் துறை அறிஞர் ஸ்ரீதரன்!

கோவில் கல்வெட்டுகள் தான் வரலாற்று ஆதாரங்கள்

கோவில் கல்வெட்டுகள் தான் வரலாற்று ஆதாரங்கள்

”தன்னலமில்லாத கலைஞர்களால், கோவில்களில் கலைகள் வளர்ந்தன,” என, தமிழக தொல்லியல் துறையின், முன்னாள் துணை கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரன் பேசினார்.

சென்னை, ஆழ்வார்பேட்டை, சி.பி.ஆர்., இந்தியவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் நிறுவனத்தில், ‘கோவில் வரலாற்றில் கலைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில், நேற்று கருத்தரங்கம் நடந்தது.

அதில், ஸ்ரீதரன் பேசியதாவது:

தொல்லியல் துறை அறிஞர் ஸ்ரீதரன்!

தொல்லியல் துறை அறிஞர் ஸ்ரீதரன்!

தமிழகத்தில், 35 ஆயிரம் கோவில்கள் உள்ளன. சங்க இலக்கியத்தில், பல்லாயிரம் கோவில்கள் இருந்ததாக குறிப்புகள் உள்ளன. இருப்பினும், அந்த கோவில்கள், மண், மரம், சுதையால் கட்டப்பட்டதால், காலத்தால் அழிந்தன. மகேந்திரவர்ம பல்லவன் தான், முதன் முதலில், திருமூர்த்திகளுக்கு கற்கோவிலை கட்டினான் என்பதை, மண்டகப்பட்டு கல்வெட்டு கூறுகிறது.

சோழர் காலத்தில், ஆயிரக்கணக்கான கோவில்கள், வெளிநாடுகளிலும் கட்டப்பட்டன. ஆதித்த சோழன் மட்டும், நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை, காவிரிக் கரையில் எழுப்பினான். ராஜராஜன், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டினான்.

இதில், சிற்பிகள் உள்ளிட்ட கலைஞர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்கள், பக்தியால் கலைகளை வளர்த்தனர். குறிப்பாக, பராந்தக சோழன், கண்டராதித்தன், செம்பியன் மாதேவி உள்ளிட்டோர், கோவில் கலைகளை வளர்க்க பாடுபட்டனர்.

கோவில்களில் உள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓவியங்கள் தான், அந்த கால வரலாற்றைக் கூறும் ஆதாரங்கள்.

கல்வெட்டு, செப்பேடுகளுக்கான தகவலை ஒருவர் அமைக்க, அதை கல்லிலோ, செப்புப் பட்டயத்திலோ, ஒருவர் எழுத, இன்னொருவர் அதை வெட்டியிருக்கிறார். இந்த செய்தியையும், அவற்றில் பதிவு செய்திருக்கின்றனர்.

கோனேரிராஜபுரம் கோவிலை, சாத்தன் குணபட்டன் என்ற, ஆலத்துாருடையான் கட்டினான். அவனுக்கு, ராஜகேசரி மூவேந்த வேளாண் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

அதே கோவிலில் உள்ள, மராட்டியர் கால ஓவியங்களை, சிங்காதனம் என்ற ஓவியன் வரைந்திருக்கிறான். அக்கோவிலின் வரைபடம், திருவிழாக்கள், வரலாறு ஆகியவற்றையும், அவன் வரைந்துள்ளான்.

தஞ்சை பெரிய கோவிலை கட்டியது, குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் என்பது பலருக்கு தெரியும்.

அந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளில், நேராகவும், எளிதாக படிக்கும் வகையிலும், அழகாகவும் எழுத்துக்களை வடிவமைத்தவன், சாத்தன்குடி வெள்ளாளன் ரவியாளூருடையான் என்பது பலருக்கு தெரியாது.

அக்கோவிலில், சோழர் கால ஓவியத்துக்கு மேல், நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன. அவற்றை, அப்பலபெத்ராய ராமய்யா என்ற ஓவியன் வரைந்ததாக குறிப்பு உள்ளது. கோவில் திருப்பணியின் போது, செப்பேடுகள் கிடைக்கின்றன.

இதுவரை, தமிழகத்தில், 19 செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவற்றில், மன்னரின் பரம்பரை, நன்கொடை, சொத்து, கணக்கீடுகள், சமூக அமைப்பு உள்ளிட்ட தகவல்கள் உள்ளன.

திருவாலங்காடு, ஆனைமங்களம், எசாலம், திருஇந்தளூர், கரந்தை உள்ளிட்ட இடங்களில் கிடைத்த செப்பேடுகளில், அவற்றை வடித்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அழியாமல் பாதுகாத்தால், நம் முன்னோரின் கலை பங்களிப்பு பற்றி, பின்வரும் சந்ததியினர் அறிய வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. Pingback: கோழியர் கோக்கண்டன்sivaprakash

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: