‘பொற்பனைக்கோட்டையில் இரும்பு உருக்காலை இல்லை’

'பொற்பனைக்கோட்டையில் இரும்பு உருக்காலை இல்லை'

‘பொற்பனைக்கோட்டையில் இரும்பு உருக்காலை இல்லை’

‘புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில், எந்தவித இரும்பு உருக்காலைகளும் இல்லை’ என, தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர், செப்., மாதம் மேற்கொண்ட மரபுவழி பயணத்தில், பொற்பனைக்கோட்டைக்கு அருகே செம்புறைக்கல்பாறையில், சில துளைகளையும் பள்ளங்களையும் கண்டனர். ஒரு பள்ளத்தின் அருகே ஒரு துளையும், அதற்கு எதிரே மற்றொரு துளையும், அதன் பக்கவாட்டில், நான்கு சிறிய துளைகளும் உள்ளதை கண்டனர்.’இந்த அமைப்பு, உலோக உருக்காலையாக இருக்கலாம். சிறு துளைகள் வழியாக துருத்தியினால் காற்றை செலுத்தி, உலோகத்தை உருக்கி இருக்கலாம். உருக்கியதை, பள்ளத்து நீரில் குளிர்வித்திருக்கலாம். பாறை உருக்காலை அமைத்தது மிகச் சிறப்பானது; இது, 2,500 ஆண்டுகள் பழமையானது’ என, அவர்கள் கூறினர்.

அப்பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது:

பொற்பனைக்கோட்டைக்கு வடக்கே, 1 கி.மீ., தொலைவில், செம்புறைக்கல் பாறை பகுதியில், ஒன்பது வட்டக்குழிகள், இரண்டு நீள்வட்டக்குழிகள், ஒரு சவப்பெட்டி வடிவிலான குழி என, மொத்தம், 12 குழிகள் உள்ளன. அக்குழிகளுக்கு, மேடான பகுதியில் இருந்து நீர்வழித்தடங்கள் வருகின்றன. செயற்கைக்கோள் படங்களும் அதை உறுதி செய்கின்றன. அவற்றைச் சுற்றி உலோகக் கழிவுகளோ, உருக்கு தடயங்களோ கிடைக்கவில்லை. இரும்பு ஆக்சைடு நிறைந்த செம்புறை கற்களையே மூலப்பொருளாக்கி, புதுக்கோட்டை பகுதிகளில் இரும்பு தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த பாறையில் உருக்காலை இருந்தால் அது உருகி இருக்கும். அதற்கான சான்றுகள் அங்கு கிடைக்கவில்லை.இவ்வாறு கூறினர்.

அது என்ன செனாக்குழி : பொற்பனைக்கோட்டை அருகே உள்ள இந்த இடத்தை செனாக்குழி என, அப்பகுதியினர் கூறுகின்றனர். சேனைக்குழி என்பதே செனாக்குழியாக மாறி இருக்கலாம். ‘மழைநீரை குழிகளில் சேமித்து, அரசர் வேட்டைக்கு செல்லும் போது, குதிரை, வேட்டை நாய்களின் தாகம் தீர்த்திருக்கலாம். பொற்பனைக்கோட்டை, வீரர்களின் தங்குமிடமாக இருந்திருக்கலாம்’ என, ஆய்வாளர்கள் கூறினர்.

தினமலர்


உலகத் தமிழர் பேரவை – யில் உங்களை ஒரு அங்கமாக்கி செயல் பட…. இன்றே உறுப்பிராகுங்கள்… உறுப்பினராக…. இங்கு அழுத்தவும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: