நம்மவர்களின் கட்டிடக்கலை சிறப்பை சில வரிகளில் விளக்க இயலாது. பிரம்மாண்டம், ஆச்சரியம் ஆகியவற்றின் வெளிப்பாடே நம்மவர்களின் கட்டிடக்கலையாகும். திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் காவிரி ஆறு பிரியும் இடத்தில், நிலங்களுக்கு சென்று பயனளிக்கும் ஆற்றின் பிரிவை விட, கடலில் சென்று கலக்கும் பிரிவு பத்து அடிகள் தாழ்வான நிலையில் இருந்துள்ளது. இதனால் நாட்டிற்குள் வரும் நீரை விட கடலில் அதிக அளவு நீர் கலந்து விரயம் ஆவதைத் தடுக்க எண்ணினான் கரிகாலன். இதற்காக வருடம் முழுவதும் நொடிக்கு இரண்டு லட்சம் கனஅடி என ஆர்ப்பரித்து செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டாம் நூற்றாண்டில், (ஆயிரத்து தொல்லாயிரம் ஆண்டுகளாக பல காவிரியின் வெள்ளத்தை பார்த்து மிரளாமல்) திசை திருப்பிவிடும் மகத்தான அணைக்கட்டான கல்லணையை கட்டி, ’சோழ நாடு சோறுடைத்து’ எனும் பழமொழியையும் நிலைபெறச் செய்தார் கரிகாலன். இவரின் வழித் தோன்றல்கள் எவ்வாறு கோவிலின் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கின எனக் காண்போம்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
கோவிலின் கட்டிடக்கலை எனில் அதில் விசயால சோழனின் பரம்பரையினையும், விசித்திர சித்தனின் வழித் தோன்றல்களையும் விடுத்து ’ஒரு வரலாறு எழுத முடியாது’ என்று கூறும் அளவிற்கு கோவில் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கியவர்கள் இவர்கள். கோவில் கட்டிடக்கலை பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு வளர்ச்சியினை கண்டுள்ளது. முதலில் கோவில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிந்துவிட்டு பின்னர் அவற்றின் வளர்ச்சியினையும் சிறப்பையும் காண்போம்.
கோவிலை மனிதனின் உடலோடு ஒப்பிட்டு சித்தர்கள் கூறுவர். மனித உடலே திருக்கோவில், உள்ளம் என்பது கருவரை எனக் கூறுகின்றனர். மேலும் முழு உடலையும் கோவிலுடன் ஒப்பிட்டு திருக்கோவிலின் பாகங்களை விளக்குகின்றனர் சித்தர்கள். இதன் பொருட்டே மனித உடலில் உள்ள ஒன்பது வாயில்களைக் குறிப்பது போல் சில கோவில்களில் ஒன்பது வாயில்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகு கோவில்களுக்கு உதாரணம் சிதம்பரம் நடராசர் கோவிலும், மதுரை மீனாட்சியின் கோவிலுமாகும். சித்தர்களின் கூற்றுப்படி, தலை என்பது கோவிலின் கருவரை, முகம் அர்த்த மண்டபம், நெஞ்சு ஸ்நபன மண்டபம், அதன் கீழ்லுள்ளது மகா மண்டபம், கணுக்கால் ஆஸ்தான மண்டபம், பாதம் கோபுரம், பாத விரல்கள் கோபுரக் கலசங்கள் என்று கூறப்படுகின்றது. தலை என்று பொதுவாக கூறினாலும் புருவத்தின் மத்தியே கருவரையின் வாயில் எனக் கருதப்படுகிறது. தலையின் உச்சியில் கடவுளின் சிலை இருப்பதாகவும் கருதப்படுகின்றது. கோபுரமே இறைவனின் திருப்பாதமாக கருதப்படுகிறது. அனைத்து உயிரினங்களும் இறைவனின் பாதத்தில் உறைவதனால் கோபுர தரிசனம் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. இவை அனைத்தும் சித்தர்களின் வாக்கு ஆகும்.
கோவில் என்பது ஆகம சாஸ்திரத்தினைக் கொண்டே கட்டப்படுகின்றது. பாரத திருநாட்டில் மூன்று வகையில் கோவில்கள் கட்டப்படுகின்றன.அவை,
நாகரம்,
வேசரம்,
திராவிடியன்
திராவிடியன் கலை பாணியிலேயே அனைத்து தமிழகக் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. ஒரு கோவிலுக்கு குறைந்தது இரண்டு வாயில்களாவது அமைக்கப்பட வேண்டும். ஒன்று கோவிலினுள் நுழையவும், மற்றொன்று கோவிலில் இருந்து வெளியேறவும் எனக் கருதப்படுகிறது. எனினும் சில பழங்காலக் கோவிகளுக்கு ஒரு நுழைவாயிலே உள்ளன. திருக்கோவிலுக்கு முன் தெப்பக்குளம் இருப்பது பக்தர்களின் உடலைத் தூய்மை செய்துவிட்டு கடவுளைத் தரிசிக்கவாகும்.
கோவிலின் உறுப்புகள்:
கருவறை,
அந்தரளம்,
அர்த்த மண்டபம்,
மகா மண்டபம்,
முக மண்டபம்,
ஆகியன கோவிலின் உறுப்புகளாகும். பெரிய கோவில்களில், நடன மண்டபம், நூறுகால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், திருச்சுற்று, திருச்சுற்று மாளிகை, பரிவாராலயங்கள் ஆகியவற்றில் சிலவும் இடம்பெறும். இவை அனைத்தையும் உள்ளடக்க திருமதிலும், கோபுரமும் கட்டப்பட்டன. கடவுள் உறையும் இடம் கருவறை ஆகும். வழிபாட்டிற்குத் தேவையான பொருட்கள் வைக்குமிடம் அந்தரளம். இதனை இடைநாழி என்றும் கூறுவர். பக்தர்கள் நின்று வழிபடுமிடம் அர்த்த மண்டபம் ஆகும். பக்தர்கள் காத்திருந்து வழிபடுமிடம் மகா மண்டபம் ஆகும். இவ்விடத்திலேயே கடவுளின் வாகனமும் இருக்கும். இதற்கும் வெளியே இருப்பது முகமண்டபம் ஆகும். பெரும்பாலும் முக மண்டபமும், மகா மண்டபமும் ஒன்றாகவே இருக்கும்.
முதலில் கட்டுமானக் கோவில்களில் கருவரையும் ஒரு மண்டபமும் மட்டுமே கட்டப்பட்டதாகவும், பின்னர் வந்த மன்னர்கள் கோவிலின் பிரம்மாண்டத்தைக் கூட்ட மேலும் சில மண்டபங்களை கூட்டியதாகவும், இதன் பொருட்டே கோவில்கள் இருட்டு மயமாக காட்சியளிக்கத் தொடங்கின என கூறப்படுகிறது.
விமானம் மற்றும் கோபுரக்கலை:
ஒவ்வொரு கோவிலிலும் அதன் கோபுரம் அல்லது விமானம் முக்கிய பங்கினை வகித்துவரும் கட்டிட அமைப்பு ஆகும். ஆதி காலத்தில், கோவிலின் கோபுரமே அவ்வூரின் உயரமான கட்டிடமாக விளங்கியுள்ளது. இதன் காரணத்தை ஆராய்ந்தோமேயானால் முன்னோர்களின் தற்காப்புக் கலை புலப்படும். கோபுரங்களில் உள்ள கலசங்கள் தானியங்களுக்கும், மக்களுக்கும் பாதுகாவலனாக விளங்கியுள்ளது. இடி, மின்னல் ஆகியவற்றின் போது இடிதாங்கியாகவும், வெள்ளம் வந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட போது அடுத்த வெள்ளாமைக்கு உண்டான விதை தானியங்களை வழங்கும் ஆபத்பாந்தவனாக விளங்கியவை கோபுர கலசங்களாகும். இக்கோபுரத்தின் கட்டிட அமைப்பைப் பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்.
கோவிலின் கருவறை மேல் அமைந்து இருப்பது விமானம் அல்லது சிகரம் ஆகும். கோவிலின் மதிலோடு கூடிய நுழைவு வாயிலில் இருப்பது கோபுரம் ஆகும்.
தென்னிந்தியக் கோவில்கள் பெரும்பாலும் கருவறையின் மேல் உள்ள விமானத்தை உயரமாகப் பெற்றுள்ளன. இவற்றுள் சில விமானங்கள் கோபுரத்தினைப் போன்ற அமைப்பைப் பெற்றுள்ளன. கோவிலின் வகை பெரும்பாலும் கோவிலின் விமானத்தினை வைத்தே கணிக்கப்படுகின்றன.
விமானத்தின் தலைப்பகுதி, எட்டு பட்டைகளைக் கொண்டிருந்தால் திராவிட வகை, சதுரமாக இருந்தால் அது நாகரம் , வட்ட வடிவமாக இருந்தால் அது வேசரம் வகையைச் சார்ந்தது ஆகும்.
விமானம் மொத்தம் ஆறு உறுப்புகளைக் கொண்டது ஆகும். அவை:
அதிட்டானம்,
பிட்டி,
பிரஸ்தனம்,
கர்ணகூடு,
கிரீவம்,
கும்பம்.
ஆறு உறுப்புகளையும் கொண்ட விமானம் சாடங்க விமானமாகும். விமானம் கல், சுதை, உலோகம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் கட்டிட அமைப்பு ஆகும். அதிட்டானம் என்பது கருவரைக்கும் கீழ் உள்ள பகுதியாகும். இதில் அலங்காரத்துடன் கூடிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். பிட்டி என்பது கர்பகிரகத்தை உருவாக்கும் சுவர்கள் ஆகும். இவற்றில் காணப்படும் வாயில் போன்ற அமைப்பு தேவ கோட்டம் ஆகும். இவற்றில் தட்சன், லிங்கோத்பவன், துர்க்கை, நரசிம்மன் போன்ற தெய்வங்கள் இருப்பர். இத் தெய்வங்களே சூரியனிடமிருந்து சக்தியினை வாங்கி மூலத்தானத்தில் இருக்கும் கடவுளுக்கு தருவதாகக் கூறப்படுகிறது. கருவரையின் கூரையே பிரஸ்தனம் என அழைக்கப்படுகின்றது. இவற்றில் யாளி, பூதங்கள் போன்ற உருவங்கள் குடி கொண்டிருக்கும். பிரஸ்தன அமைப்பிலேயே கடவுளின் வாகனத்தினுடைய சிற்பம் இடம்பெறும். உதாரணமாக கோவிலின் கருவரையில் சிவன் இருந்தால் நந்தியும், திருமால் இருந்தால் கருடனும் சிற்பங்களாக அருள்பாலிப்பர். பிரஸ்தனத்திற்கு மேல் உள்ள பகுதி கிரீவம் ஆகும். இவை பெரும்பாலும் சதுரம் மற்றும் எண்பட்டை வடிவில் கட்டப்படும். அதன் மேல் அமைந்திருக்கும் கூர்மையான உலோகத்தினால் ஆன பாகமே கும்பம் ஆகும். இதனை கலசம், ஸ்தூபி, குடம் என்றும் கூறுவர்.
கலசத்தின் துணைக் கொண்டே ஒவ்வொரு கோவிலின் கடவுள் சிலைக்கும் சக்தி ஊட்டப்படும், மேலும் பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அவை புதுபிக்கப்படும், மேலும் கலசத்தின் உள் இருக்கும் தானியங்கள் பன்னிரண்டு ஆண்டுக்குள் அதன் இடிதாங்கும் சக்தியினை இழந்துவிடும் என்பதால் அவையும் இந்நிகழ்வின் போது மாற்றப்படும். இதன் பொருட்டு நடக்கும் சடங்கே குடமுழுக்கு ஆகும்.
பல்லவர், சோழர் ஆகியோரின் காலக் கட்டப்பட்ட கோவிலின் கோபுரத்தைவிட கோவிலின் விமானமே உயரமாகக் கட்டப்படும். இராஜராஜனின் காலத்திலேயே விமானக் கட்டிடக்கலையின் வளர்ச்சி உச்சத்தை எட்டியது. பின்னர் பாண்டியர் காலங்களில் விமானக் கட்டிடம் அதன் பிரம்மாண்டத்தை இழக்கத் தொடங்கியது. அதன் பின்னர் கோவிலை சுற்றியுள்ள மதில்களும், வாயிற் கோபுரமும் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. இதன் காரணம் குறித்து கட்டிடக்கலை ஆராய்சியாளர் பேர்சி பிரவுன், ’கோவிலின் பழமை மாறாமல் இருக்க அதன் விமானத்தை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு அதன் கோபுரத்தையும் சுற்று மதில்களையும் உயரம் எழுப்பி அதன் பிரம்மாண்டத்தினை கூட்டியுள்ளனர்’ என்று கூறுகிறார்.
படிப்படியாக வளர்ச்சியை எட்டியது கோபுரக் கட்டுமானம். தமிழ்நாட்டில் இருக்கும் பழம் பெறும் கோபுரமானது காஞ்சி கைலாசநாதர் கோவில் கோபுரமாகும். இதில் ஒரே ஒரு தளம் மட்டுமே அமைந்துள்ளது. தற்போது தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கோபுரமான திருவரங்கம் அரங்கநாதர் கோவிலின் கோபுரம் 13 தளங்களைக் கொண்டு கோபுரக் கட்டுமானத்தின் பிரம்மாண்டத்தைக் காட்டுகின்றது. ஆரம்ப காலக்கட்டங்களில் ஒரு கோவில் ஒரு வாயிற்கோபுரத்தை மட்டுமே கொண்டிருந்தது. பின்னர் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு வாயிற் கோபுரங்கள் கட்டப்பட்டு , ஒரே கோவில் பல கோபுரங்களைக் கொண்ட அமைப்பாக மாற்றம் பெற்றது. அக்கோபுரங்களில் பெரிய கோபுரம் இராஜ கோபுரம் என அழைக்கப் பெற்றது. மேலும் கோபுரங்கள் பல வகையான சிற்பங்களைத் தாங்கி இருப்பதனால் இவை சிற்பக்கலைக்கும் வழிவகுத்தன.
ஒவ்வொரு மன்னனின் ஆட்சியிலும் எவ்வகை மாற்றங்கள் கோவில் கட்டிடக் கலையில் புகுந்தன என்று காண்போம்.
கி.மு ஆயிரம் முதல் கி.பி 300 வரை ஆண்ட முற்கால சோழர், சேரர், பாண்டியர் ஆகியோர் செங்களினால் கோவில்கள் கட்டினர். அவர்கள் ஏழு வகைக் கோவில்களையே கட்டியுள்ளனர். அவற்றில் பெரும்பாலும் மாடக்கோவில்களே கட்டப்பட்டன. ஆனால் கூறிப்பிடதக்க மாற்றங்கள் ஏதும் கோவில் கட்டிடக் கலையில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழக கோவில் கட்டிட அமைப்பை காலத்தையும், ஆட்சி புரிந்த மன்னர்களையும் வைத்து சில வகைகளாகப் பிரிக்கலாம். அவை:
மன்னர்கள் – காலம் (கி.பி)
பல்லவர் – 600-900
சோழர் – 900-1150
பாண்டியர் – 1100-1350
நாயக்கர் – 1600 க்கு மேல்
பல்லவர் கால கட்டிடக் கலை;
தமிழகத்திற்கு செங்கல், மரம், உலோகம் இல்லா கோவில்களை அறிமுகப்படுத்திய பெருமை பல்லவர்களையே சேரும். குடைவரைக் கோவில்கள், ஒற்றைக்கல் கோவில்கள், கற்றளிகள் ஆகிய அனைத்தினையும் இவர்கள் அறிமுகம் செய்து அதில் குறிப்பிட்ட வளர்ச்சியினையும் பல்லவர்கள் அடைந்துள்ளனர். பல்லவர் கால குடைவரைகளில் கடவுளின் சிலை இல்லாமலேயே காட்சி அளிக்கும். ஆனால் கடவுளின் சிலை வைக்க மூன்று அறை போன்ற அமைப்புகள் வெட்டப்பட்டு இருக்கும். இது போன்று பல குடைவரைகளுக்கு பிறகே கடவுளின் சிலை வைத்து பல்லவர் கோவில்கள் கட்டப்பட்டன. குடைவரைக் கோவில்களை விசித்திர சித்தனான மகேந்திரவர்மன் முதன் முதலில் கட்டத்தொடங்கினான். இது தென்னிந்திய கோவில் கட்டிடக்கலையின் மைல்கல் ஆகும். அதன் பிறகே திராவிடியன் கட்டிடக்கலை வளர்ச்சியினைப் பெறத் தொடங்கியது. பல்லவர்கள் கட்டிடக்கலையின் உச்சம் என காஞ்சி கைலாசநாதர் கோவிலினையும், மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலினையும் கூறலாம்.
சோழர் காலம்:
சோழர் காலம் கோவில் கட்டிடக்கலைக்கு பொற்காலமாகும். முன்பே அறிமுகம் ஆகியிருந்த கற்றளிகள் சோழர் காலத்திலேயே உச்சத்தை அடைந்தது. பல்லவர்களைப் போலவே, ஒவ்வொரு சோழ மன்னரின் காலத்திலும் கோவிற்கலை சில மாறுதல்களைச் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரின் ரசனைக்கு ஏற்றவாறு கோவில் கட்டிட அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உதாரணமாக இராஜராஜன் பிரம்மாண்டத்தின் பிதாமகன், இரண்டாம் இராஜராஜன் கலை நுணுக்கங்களின் காதலன். சோழர்கள் புவியின் பரப்பில் குமிழிகள் போல பலக் கோவில்கள் கட்டினர். அதன் காரண கர்த்தா, உத்தம சோழனின் தாயான சேரன் மா தேவி ஆவார். இவர் இராஜராஜனின் காலம் வரை பல கோவில்கள் கட்ட வித்திட்டவர். கி.பி 1001 ல் சந்திர மவுலீஸ்வரர் கற்றளியே சேரன் மா தேவி நட்ட கடைசி அடிக்கல் ஆகும். இராஜராஜனின் பிரகதீசுவரர் ஆலயம் இம்மண்ணில் நிலைபெற்றிருக்கும் வரை சோழர்களின் கட்டிடக் கலையை உலகம் மறவாது. இதன் காரணமாகவே அழியாத பெருங்கோவில்கள் என்று சோழர்களின் மூன்று பெரும் கோவில்களும் போற்றப்படுகின்றன. இக்கோவில்களில் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி இன்றும் பூஜைகள், வழிபாடுகள் ஆகியவை சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிற்கால சோழ மன்னர்கள் செங்கலால் கட்டப்பட்ட கோட்டங்களை கற்றளிகளாக மாற்றியுள்ளனர். இது போன்ற பணிகளை விக்ரம சோழன் ஆகியோர் செய்துள்ளனர். இதற்கு உதாரணமாக தஞ்சாவூர் இஞ்சிக்குடி கோயில் போன்றவற்றைக் கூறலாம்.
பாண்டியர் காலம்:
பாண்டியர் கால கட்டிடக்கலைக்கு பிறகே கோவிலின் கோபுரங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. கோபுரங்கள் உயரமாக எழுப்பப்பட்டு கோவிலின் வலிமையான கட்டிட அமைப்பாக மாறத் தொடங்கியது. வேறெந்த குறிப்பிட்ட கட்டிடக்கலை வளர்ச்சியினையும், மாற்றத்தினையும் பாண்டியரின் கட்டிடக்கலை நிறுவவில்லை.
நாயக்கர் காலம்:
நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் முன்பே இருந்த கோவில்களை சீர் அமைக்கும் பணியிலேயே ஈடுபட்டிருந்தனர். நாயக்கர்களும் பாண்டியர்களைப் போலவே கோவில் கோபுரங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தினர். நாயக்கர்களின் ஆட்சியின் போதே பத்துக்கும் மேற்பட்ட நிலைகளையுடைய கோவில் கோபுரங்கள் எழுப்ப பெற்றன. மேலும் அலங்கார வேலைப்பாட்டுடன் கூடிய மண்டபங்கள் ஆகியவற்றையும் நாயக்கர்கள் கட்டியுள்ளனர்.